அறையணிநல்லூர்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு அருள்நாயகி உடனுறை அறையணிநாதேசுவரர்

மரம்: வில்வம்
குளம்: பெண்ணையாறு

பதிகம்: பீடினாற்பெரி -2 -77 திருஞானசம்பந்தர்

முகவரி:அரகண்டநல்லூர் அஞ்சல்,
திருக்கோயிலூர் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம், 605752
தொபே. 04153 224036

திருக்கோவலூர் தொடர்வண்டி நிலையத்திற்குத் தென் கிழக்கே உள்ளது. இது நடுநாட்டுத் தலங்களுள் ஒன்று. இக்காலத்தில் அறகண்டநல்லூர் என்று வழங்குகிறது. திருவண்ணாமலை, பண்ணுருட்டி ஆகிய ஊர்களிலிருந்து திருக்கோவலூர் வருவதற்குப் பேருந்துகள் பல உள்ளன. அறையணி நல்லூர் பெண்ணையாற்றின் வடகரையில் உள்ளது. வானளாவிய கோபுரத்துடன் ஆலயம் விளங்குகிறது. திருக்கோவலூரிலிருந்து வடக்கே 1 கி.மீ. தூரத்தில் ஊர் உள்ளது.

பாறையின்மீது அழகாகக் கட்டப்பெற்ற கோயிலை உடைய ஊர் என்று பொருள்படும். இவ்வூர்ப் பெயரை, பாண்டவர் வனவாச காலத்தில் தாம்கண்ட ஐந்து அறைகள் அந்த நல்லூர்க்கு அலங்காரஞ் செய்யும் காரணத்தால் எய்தியது என்றும் கூறுவர்.

பாறையில் பல்லவர் குடை மண்டபம் இருக்கிறது. வழி சரியாக இல்லை. முருகன் கோயில் திரௌபதியம்மன் கோயிலாக மாற்றப்பெற்றதாகலாம். கங்கையம்மன் கோயில் ஒன்று புதிதாகக் கட்டியிருக்கிறார்கள்.

பிரசண்ட முனிவர் பூசித்துப் பேறுபெற்றார். இது திருஞான சம்பந்தரது ஒரே பதிகத்தைப் பெற்றது.


கல்வெட்டு:

இத்திருக்கோயிலில், பிற்காலச் சோழ மன்னர்களில் முதலாம் இராஜராஜசோழன், முதற் குலோத்துங்கன், விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜாதிராஜன், மூன்றாங் குலோத்துங்கன், மூன்றாம் இராஜராஜன், மூன்றாம் இராஜேந்திர சோழன் இவர்கள் காலங்களிலும் பிற்காலப் பாண்டியர்களில் மாறவர்மன் திருபுவனச் சக்கரவர்த்தி சுந்தரபாண்டியன், மாறவர்மன் திருபுவனச் சக்கரவர்த்தி விக்கிரமபாண்டியன் இவர்கள் காலங் களிலும், பல்லவர்களுள் கோப்பெருஞ்சிங்கன் காலத்திலும்; விஜய நகர அரசர்களில் சதாசிவ மகாராயர், கிருஷ்ண தேவ மகாராயர், கம்பப்பண்ண உடையார் இவர்கள் காலங்களிலும், சம்புவராயருள் சகலலோக சக்கரவர்த்தி இராசநாராயண சம்புவராயர் காலத்திலும் பொறிக்கப்பெற்றுள்ள 96 கல்வெட்டுக்கள் இருக்கின்றன(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1902 No. 386-391, year 1905 No. 26, year 1935 No. 111-195; (South Arcot District, Tirukoviloor Taluk).

`வீரமே துணையாக` என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியை உடைய இராஜகேசரி வர்மன் திருபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழ தேவரின் 46 ஆவது ஆட்சியாண்டில் கீழையூர் மலையமான் நானூற்றுவன் மலையமானாகிய இராஜேந்திரசோழ சேதுராயன், இத்திருக்கோயிலில் தட்சிணாமூர்த்தியை எழுந்தருளுவித்து, அத் தேவர்க்கு நித்திய வழிபாட்டிற்கும் விளக்கினுக்கும் வீரசோழனல்லூர் நிலங்களின் வரிகளைக் கொடுத்துள்ளான்.

இத்திருக்கோயிலில் உள்ள, நிருத்தமண்டபம் கீழையூர் மலையமான் பெரிய உடையான் இறையூரானால் கட்டப்பெற்றது. இக் கோயிலினுள் இருக்கும் பொன்னனையார் அம்மை கோயில், திருபுவன வீரதேவர் எனப்படும் மூன்றாங் குலோத்துங்கசோழ தேவரின் முப்பதாம் ஆட்சியாண்டில் கருங்கல்லால் கட்டப்பெற்றது. இம்மன்னர் காலத்தில் பாண்டி மண்டலத்துப் பட்டண சாமி என்பவரால் இக்கோயிலின் சில பகுதிகள் பழுது பார்க்கப்பட்டன.

முதற் குலோத்துங்கன் தன் ஆட்சியின் முப்பத்தாறாம் ஆண்டில் காஞ்சியில் இருந்தான். அதுபொழுது வாண கோவரையன் சுத்தமல்லன் முடிகொண்டான் வேண்டுகோளின்படி, பெண்ணை யாற்றின் வடகரையிலுள்ள இராஜேந்திர சிங்கவளநாட்டுக்காரரிடம் புத்தூரில் உள்ள நிலங்களை வீரசோழ நல்லூர் என்னும் பெயரால் ஒப்பில்லாதநாயனார் கோயிலுக்குத் தேவதானமாகக் கொடுத் துள்ளான்.

திருபுவனச் சக்கரவர்த்தி இராஜாதிராஜ தேவரின் ஆறாம் ஆண்டில் மலையமான் பெரிய உடையான் இறையூரன் தளர்ந்தபின் இராஜராஜ சேதிராயன் திருவாதிரைத் திருநாளைக்கு நிவந்தங்கள் அளித்துள்ளான். குருக்காடு, அத்தி, திருவண்ணாமலை உடையா னாகிய இருங்கோளன் பொன் அனையார் அம்மை கோயிலுக்கு, பெருநிலையார் நல்லூரின் வரிகளை நித்தியவழி பாட்டிற்குக் கொடுத்துள்ளான்.

பாண்டிமண்டலத்துக் கேரளசிங்க வளநாட்டுத் திருக் கோட்டியூர் ஆழ்வான் கூத்தன் ஜெயசிங்கதேவன், தன் அரசனாகிய விக்கிரமபாண்டியன் திருப்பெயரால், இக்கோயிலிலுள்ள திரு வரங்கைக் கட்டியுள்ளான். திருமடைப்பள்ளிக்கு வடபாலுள்ள திருநடமாளிகையும் இவனால் கட்டப்பெற்றது. இந்தக் கோயிலின் கிழக்குத் தாழ்வாரமும் இவனால் கட்டப்பெற்றதாகும். இத்தாழ்வாரத் தூண்கள் ஒவ்வொன்றிலும் விக்கிரமபாண்டியன் என்னும் பெயர் செதுக்கப்பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சிகள் திருபுவனச் சக்கரவர்த்தி விக்கிரமபாண்டியதேவனது நான்காம் ஆண்டில் வெட்டப்பெற்ற கல்வெட்டால் அறியக்கிடக்கின்றன.

இக்கோயில் வெளிப்பிராகாரத்தில் உள்ள மண்டபம் நீண்ட காலமாகக் கட்டப் பெற்றும் முடியப்பெறாமல் குறைவுள்ளதாகவே இருந்தது. இம்மண்டப வேலை பூர்த்தியானால், இக்கோயில் தேவரடியாள் பொன்னாண்டையின் மகன் இளவெண்மதி சூடினான், தன் உயிரை மாய்த்துக்கொள்வதாகச் சொல்லி அம்மண்டப வேலை முடிவு பெற்றதும், தன் உயிரை மாய்த்துக் கொண்டான். அவனுடைய வீரச் செயலைப் பாராட்டி அவன் சந்ததியார்க்கு ஆயிரங்குழி நிலம் உதிரப் பட்டியாகக் கோயிலாரால் கொடுக்கப்பெற்றுள்ளது. இச்செய்தி மாறவர்மன் திருபுவனச் சக்கரவர்த்தி, சுந்தரபாண்டியதேவனது பத்தாம் ஆண்டுக் கல்வெட்டால் விளங்குகின்றது. இளவெண்மதி சூடினான் தன் தலையை வெட்டிக்கொள்வதுபோல் உருவம் ஒன்று செதுக்கப் பெற்றுக் கோயிலுக்கருகில் தெருவில் வைக்கப் பெற்றிருக்கிறது.

கோப்பெருஞ்சிங்கன் காலத்தில், பேரெயிலில் உள்ள சோழ துங்கபல்லவர் அரையன்பெண்ணைத் தென்கரையில் மெய்குன்ற நாட்டிலுள்ள செம்பியன்மாதேவி என்னும் ஊரை, ஒப்பிலாத நாயனார்க்கு நித்தியவழிபாட்டிற்கும் நந்தாவிளக்கினுக்கும் கொடுத்துள்ளான். இம்மன்னன் காலத்திலே திருக்கோவலூர் வணிகன் ஒருவன் கோயில் நிலங்களைச் சாகுபடிக்கு உபயோகமாகுமாறு செய்து, கோயில்தானத்தாரிடமிருந்து இரண்டாயிரம் குழி நிலங் களைப் பெற்றான்.

ஒப்பில்லாத நாயனார் கோயிலில் திருக்கோபுரம், கோபு நாயக்கன், வாளுநாயக்கன், பாபு நாயக்கன், நாகம்மநாயக்கராயன் இவர்களால் கட்டப்பெற்றது. கொள்ளியூர், பாலூர், புத்தூர் இவை களுக்கு நீர்பாயக்கூடிய வாய்க்காலை, கீழையூர் இராஜராஜசேதிராயர் தம் தாயார் பூமாழ்வார் பெயரால் வெட்டுவித்தார். விக்கிரம சோழதேவரின் 13 ஆம் ஆட்சியாண்டில், இப்பக்கங்களில் பஞ்சம் ஒன்று ஏற்பட்டது.

இவைபோன்ற பல செய்திகளை இவ்வூர்க் கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. மலைய மன்னர்களைப்பற்றி ஆராய்வார்க்கு இக்கோயிற் கல்வெட்டுக்கள் பெரிதும் பயன்பெறும்.

 
 
சிற்பி சிற்பி