நாகேச்சரம்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு குன்றமுலைநாயகி உடனுறை சண்பகாரணியர்


மரம்: செண்பகம்
குளம்: சூரியபுட்கரணி

பதிகங்கள்: பொன்னேர்தரு -2 -24 திருஞானசம்பந்தர்
தழைகொள் -2 -119 திருஞானசம்பந்தர்
கச்சைசேர் அரவ -4 -66 திருநாவுக்கரசர்
நல்லர் -5 -52 திருநாவுக்கரசர்
தாயவனைவானோர்க்கும் -6 -66 திருநாவுக்கரசர்
பிறையணி -7 -99 சுந்தரர்
முகவரி: கும்பகோணம் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 612204
தொபே. 0435 2463354

ஐந்தலை அரவால் பூசிக்கப்பெற்ற கோயிலை உடையது ஆதலின் இப்பெயர்பெற்றது. இச்செய்தி, இக்கோயிலுக்குரிய நாவுக்கரசரது திருக்குறுந்தொகையிலுள்ள (திருப்பாட்டு 4)

``ஐந்தலை யரவின் பணி கொண்டருள்
மைந்தர் போன்மணி நாகேச் சரவரே``
என்ற தேவாரப் பகுதியால் அறியலாகும்.

மயிலாடுதுறை - கும்பகோணம் தொடர்வண்டிப் பாதையில், திரு நாகேசுவரம் தொடர்வண்டி நிலையத்திலிருந்து தெற்கே சுமார் 2 கி.மீ. மைல் தூரத்தில் இருக்கின்றது. இது காவிரிக்குத் தென்கரையிலுள்ள இருபத்தொன்பதாவது தலமாகும். கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

இறைவர் திருப்பெயர் சண்பகாரணியர். இறைவி திருப்பெயர் குன்றமுலைநாயகி. தீர்த்தம் சூர்யபுஷ்கரிணி. ஐந்தலை நாகமன்றி, சந்திர சூரியர்களால் பூசிக்கப்பெற்றது. தெய்வப் பாக்கிழாராகிய சேக்கிழார் பெருமானுக்கு மிக்க விருப்பமுள்ள தலம். சேக்கிழார் தமது ஊராகிய குன்றத்தூரில் ஒருகோயில் எடுப்பித்து அதற்குத் திருநாகேச்சுரம் என்று பெயர் வைத்துள்ளமை இதை நன்கு புலப்படுத்தும்.

திருஞானசம்பந்தர் பதிகம் இரண்டு, திருநாவுக்கரசு நாயனாரது பதிகம் மூன்று, சுந்தரமூர்த்தி நாயனாரது பதிகம் ஒன்று ஆக ஆறு பதிகங்களைப் பெற்ற பெருமையுடையது. நாளும் வணங்குவார் பிணி தீர்க்கும் பெற்றியுடையது.

``நாளு நாதனமர் கின்ற நாகேச்சுர நண்ணுவார்
கோளு நாளுந் தீயவேனு நன்காங் குறிக்கொண்மினே``
என்னும், இக்கோயில் சம்பந்தர் தேவாரப்பகுதி சிந்திக்கற்பாலது.



கல்வெட்டு:

16 கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டன. கண்டராதித்தியர், இராஜராஜன், இராஜேந்திரன் காலத்தவை ஆதலின் பழைய கல்வெட்டுக்களேயாகும். கி. பி. 10, 11 நூற்றாண்டில் ஊர் உய்யக் கொண்டான் வளநாடு திரைமூர்நாடு திருவிண்ணகர் திருநாகேச்சுரம் என்று கண்டிருக்கிறது. அரசருடைய சேனையில் இளங்குஞ்சர மல்லரில் ஒருவனான அடிகள் அச்சான்தந்த நிலத்தின் வருமானத்திலிருந்து இறைவனுக்கு மணியும் முத்தும் கொண்ட ஒரு திருவாபரணம் செய்யப்பட்டது.

தன்மகளின் நலத்திற்காகத் தீரன் சத்திவிடங்கி என்ற அரண்மனைப் பெண்டாட்டி ஒரு விளக்கிற்காக 48 ஆடுகள் தானம் செய்தாள். ஒரு கல்வெட்டில் கோயில் பொன், வெள்ளி, நகைகள், முதலியன கூறப்பட்டுள்ளன. மற்றொன்றின்படி விக்கிரமசிங்க பல்லவராயன் 100 காசுதந்து காவேரி வெள்ளத்தினால் அழிந்த கால்வாய்களைச் செம்மைப்படுத்தினான். வட்டியில் மீதியானது கோயில் வழிபாட்டிற்கும், சிவதருமம் கூறுவதற்கும் பயன்படுத்தப்பட்டது.

அர்த்தநாரீசர் திருவுருவம் இங்குத் தாபிக்கப்பட்டது. கண்டராதித்தியர் இக் கோயில் திருப்பணி செய்திருக்கிறார். வேறொரு கல்வெட்டின்படி மிலாடுடையார் பள்ளியில் குமாரமார்த்தாண்டன் என்ற திருச்சுற்றாலை கட்டப்பட்டதாம். இதைப்பற்றிப் பல ஆராய்ச்சிக் கருத்துக்கள் வெளிவருகின்றன.

 
 
சிற்பி சிற்பி