அருள்மிகு விமலநாயகி உடனுறை தருமபுரீசர்
மரம்: வில்வம்
குளம்: விசுவ தீர்த்தம்
பதிகம்: தலையெலாம் -5 -58 திருநாவுக்கரசர்
முகவரி: பட்டீச்சரம் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 612703
பழையாறை என இன்று வழங்கும் இவ்வூர், சோழமன்னர்கள் முடிசூட்டிக்கொள்ளும் நகரங்களில் ஒன்று. இது பழசை என்று மரூஉ மொழியாகத் தேவார காலத்திலேயே வழங்கப்பட்டிருக்கின்றது.
திருப்பட்டீச்சரம், பழையாறைமேற்றளி, பழையாறைவடதளி என்னும் தலங்கள் இப்பழையாறை நகருக்குள் அடங்கியிருந்தன.
பழையாறைவடதளி:- பழையாறை நகரத்தில் உள்ள வடதளி என்று பொருள்படும். (தளி - கோயில்). கோயில் மாடக்கோயில் அமைப்புடையது.
தஞ்சை மாவட்டத்தில் திருப்பட்டீச்சரத்துக்கு அண்மையில் உள்ளது.
அப்பர்பெருமான் இத்தலத்தை அடைந்தபொழுது இக்கோயில் சமணர்களால் மறைக்கப் பெற்றிருந்தது. அவர் அதைக்கண்டு சமணர்களின் செயலைக் கெடுத்து இறைவனைக் கண்டு வழிபாடாற்றாமல் போவதில்லை என்று உறுதியுடன் இருந்தார். அதுபொழுது இறைவர் சோழ மன்னனின் கனவில் தோன்றி அறிவிக்க அம்மன்னன் இறைவனை வெளிப்படுத்தி அப்பமூர்த்திகளை வழிபடச்செய்தருளிய தலம்.
சமணர்கள் மறைத்ததைப்பற்றி அப்பர் பெருமான் ``தலையெலாம் பறிக்குஞ் சமண்கையருள், நிலையினான் மறைத்தான் மறைக் கொண்ணுமோ`` என இவ்வடதளிப் பதிகத்தில் குறிப்பிட்டிருப்பது நோக்கத்தக்கது.