புள்ளிருக்குவேளூர் (வைத்தீசுவரன் கோயில்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு தையல்நாயகி உடனுறை வைத்தியநாதர்


மரம்: வேம்பு
குளம்: சித்தாமிர்தத் தீர்த்தம்

பதிகங்கள்: கள்ளார்ந்த -2 -43 திருஞானசம்பந்தர்
ஆண்டானை அடியே -6 -54 திருநாவுக்கரசர்
வெள்ளெருக் -5 -79 திருநாவுக்கரசர்

முகவரி: வைத்தீஸ்வரன்கோயில் அஞ்சல்
சீர்காழி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609117
தொபே. 04364 279423

சம்பாதி, சடாயு, என்ற கழுகரசர் இருவர்களும், வேதங்களும், முருகக்கடவுளும், பூசித்துப் பேறுகளைப் பெற்ற தலமாதலால் இப்பெயர் பெற்றது. இது வைத்தீசுவரன்கோயில் என்று வழங்கப் பெறுகின்றது.

இது மயிலாடுதுறை - சிதம்பரம் தொடர்வண்டிப் பாதையில், வைத்தீசுவரன் கோயில் தொடர் வண்டி நிலையத்திற்குக் கிழக்கே 1கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. மயிலாடுதுறையிலிருந்து சீகாழி செல்லும் பேருந்துகளில் வைத்தீசுவரன் கோயில் என வழங்கும் இத் தலத்தை அடையலாம். இது காவிரியின் வடகரைத் தலங்களுள் ஒன்று.

இறைவரின் திருப்பெயர் வைத்தியநாதர். இறைவியாரின் திருப்பெயர் தையல்நாயகி. முருகன் - செல்வமுத்துக் குமாரர்.

தீர்த்தம் சித்தாமிர்தத் தீர்த்தம். இது திருக்கோயிலின் உள்ளே இருக்கின்றது. இது மிகப்பெருமைவாய்ந்தது. இதில் நீராடியவர்நோய் நீங்கப்பெறுவர்.

சூரியன், செவ்வாய், இராமலக்குமணர், அநுமார் முதலானோர் வழிபட்டுப் பேறு எய்தினர். இங்கு எழுந்தருளியிருக்கும் முருகக் கடவுள் முத்துக்குமாரசுவாமி என்னும் திருப்பெயருடன் விளங்கி, அன்பர்களுக்கு வேண்டும் வரங்களை அளித்து வருகிறார். இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று. நாவுக்கரசர் பதிகம் இரண்டு ஆக மூன்றுபதிகங்கள் இருக்கின்றன.

வடுகநாத தேசிகர் எழுதிய தலபுராணமும், குமரகுருபரர் அருளிய முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழும் அச்சில் வெளி வந்துள்ளன. இவைகளன்றி மூவர் அம்மானை முதலான பல நூல்களில் இத்தலத்துச் சிவபெருமானைப்பற்றிய புகழ்ப் பாக்கள் இருக்கின்றன.

சடாயு, சம்பாதி இவர்கள் வழிபட்ட செய்தி.

``தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்
புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே``
என்னும் ஞானசம்பந்தரின் தேவாரப்பகுதியால் அறியக்கிடக்கின்றது.

சம்பாதி, புள்ளிருக்கு வேளூர் இறைவனை வழிபடற்குக் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து நாளும் பூக்கொண்டுவந்த செய்தி,

``யோசனைபோய்ப் பூக்கொணர்ந்தங் கொருநாளுமொழியாமே
பூசனைசெய் தினிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே``
என்னும் அவரது தேவாரப்பகுதியில் குறிக்கப்பட்டுள்ளது. இச்சம்பாதி வனம் மணிமேகலையுள்ளும் கூறப்பட்டுள்ளது.

சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனோடு பொருது, சடாயு உயிரிழந்த செய்தி,
``மெய்சொல்லா விராவணனை மேலோடி யீடழித்துப்
பொய்சொல்லா துயிர்போனான் புள்ளிருக்கு வேளூரே``
என்னும் அவரது தேவாரப் பகுதியிலும் சொல்லப்பட்டு உள்ளது. ``மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் தீராநோய் தீர்த்தருள வல்லான்`` என்னும் அப்பர்பெருமானின் தேவாரப் பகுதி, இறைவன் வைத்திய நாதர் என்னும் பெயர் பூண்ட காரணத்தைப் புலப்படுத்துவதாகும், இங்ஙனம், இவ்வூர்த் தேவாரப்பகுதிகளில் பல சரித்திர சம்பந்தமான உயர்ந்த செய்திகள் காணப்படுகின்றன.

இக்கோயில், திருக்கயிலாய பரம்பரைத் திருத் தருமை ஆதீன அருளாட்சிக்குட்பட்டது. இதுபொழுது இருபத்தாறாம் பட்டத்தில், தருமை ஆதீனத்தில் அருளாட்சி நடத்தி வரும் மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள் அவர்கள் ஒவ்வொரு வாரத்தில் செவ்வாய்க் கிழமையிலும், ஒவ்வொருமாதத்தில் கிருத்திகை நாளிலும் வைத்தீசுவரன் கோயிலுக்கு எழுந்தருளி வழிபாடு செய்தருளுகின்றார்கள். இக்காலங்களிலன்றி, நிர்வாகத்துறையில் திடீரென்று எழுந்தருளி நித்திய நைமித்திகங்கள் உரிய காலங்களில் நன்கு நடைபெறுகின்றனவா எனவும் கவனித்தருளுகின்றார்கள்.



கல்வெட்டு:

சகம் 1814 (கி.பி.1892) நகரத்தாரால் திருப்பணியும் குடமுழுக்கும் செய்யப்பட்டன. சகம் 1689 (கி.பி. 1767) ராஜாமகாராசர் காலத்தில் முத்துக்குமாரசாமித் தம்பிரானால் திருப்பணி செய்யப் பட்டது. சகம் 1682 (கி.பி.1770) துளஜாமகாராசர் காலத்தில் கருங்கல் திருப்பணி செய்யப்பட்டது. சகம் 1802 (கி.பி. 1880) கொடிக்கம்பம் தங்கமயம் ஆக்கப்பட்டது.

 
 
சிற்பி சிற்பி