பைஞ்ஞீலி (திருப்பைஞ்ஞீலி)
இக்கோயிலின் காணொலி மூடுக / திறக்க
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535,
5370535. தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
இக்கோயிலின் படம் மூடுக / திறக்க
அருள்மிகு நீள்நெடுங்கண்ணி உடனுறை நீலகண்டர்
மரம்: வாழை குளம்: சிவகங்கை
பதிகங்கள்: ஆரிடம்பாடி -3 -14 திருஞானசம்பந்தர்
உடையர் -5 -41 திருநாவுக்கரசர்
காருலாவிய -7 -36 சுந்தரர்
முகவரி: திருப்பைஞ்ஞீலி அஞ்சல் திருச்சி வட்டம் திருச்சி மாவட்டம், 621005
பசுமையான வாழையைத் தலமரமாக உடைமையால் இப்பெயர் பெற்றது. விழுப்புரம் - திருச்சிராப்பள்ளி இருப்புப் பாதையில், பிட்சாண்டார் கோயில் தொடர் வண்டி நிலையத்தில் இறங்கி இவ்வூர்க்குச் செல்லவேண்டும்.
இறைவரின் திருப்பெயர் - நீலகண்டர். இறைவியின் திருப்பெயர் - விசாலாட்சி (அ) நீள்நெடுங்கண்ணி.
அப்பர் பெருமான் நீர்வேட்கையோடும், பசியோடும் இத்தலத்திற்கு வந்து அணைந்திட, இறைவன் திருநீற்று அந்தணராய், பொதிசோறும் தண்ணீரும் கொடுத்த தலம், இத்தலத்திற்கு அப்பர் பதிகம் ஒன்றும், சுந்தரர் திருப்பதிகம் ஒன்றும் ஆக இரண்டு பதிகங்கள் இருக்கின்றன. இத்தலத்திற்கு மதுரை மெய்ப்பாத புராணிகர், தலபுராணம் இயற்றியுள்ளனர்.
கல்வெட்டு:
இவ்வூர்க் கோயிலில் ``திருமன்னிவளர இருநில மடந்தையும்`` எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியையுடைய முதலாம் இராஜேந்திர சோழதேவன், `திங்களேர்தருதன் தொங்கல்` மெய்க் கீர்த்தியையுடைய முதலாம் இராஜாதி ராஜன், ``சீர்மன்னி இரு நான்கு திசையும்``எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியையுடைய கோப்பர கேசரிவர்மனான திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவர், திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான், இவர்கள் காலங்களில் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இக்கல்வெட்டுக்களில் இறைவர் திருப்பைஞ்ஞீலி மகாதேவர், திருப்பைஞ்ஞீலி உடையார், திருப்பைஞ்ஞீலி உடைய நாயனார் என்னும் பெயர்களால் குறிக்கப்பெற்றுள்ளனர்.
முதலாம் இராஜேந்திர சோழன் கல்வெட்டு இவ்வூரை, இராஜேந்திர சிங்கவளநாட்டுத் தனியூர், திருவெள்ளறை திருப் பைஞ்ஞீலி எனவும், முதலாம் இராஜாதிராஜன் கல்வெட்டு இராஜாதிராஜ வளநாட்டு வடவழி நாட்டுத் திருப்பைஞ்ஞீலி எனவும், திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ தேவரின் கல்வெட்டு இராஜராஜ வளநாட்டு வடவழி நாட்டுத் திருப்பைஞ்ஞீலி எனவும் கூறுகின்றன. இக்கோயிலுக்குக் கொடுக்கப்பெற்ற நிவந்தங்கள், இவ்வூர் மேலைச் சேரியில் இருந்த சபையாராகிய `மூலவருடையர்` இடத்தில் கொடுக்கப் பெற்றுவந்தன. அவர்கள் தங்கள் ஊரில் இருந்த மணியம் பலத்தில், கூட்டம் குறைவறக் கூடியிருந்தும், சிலகாலங்களில் தங்கள் ஊரில் மலைமேல் கொல்லத்து இளங்கோனார் மண்டபத்தே கூடியிருந்தும், அவைகளைப் பெற்று அறங்களை நடத்தி வந்தனர்.
இராஜராஜ வளநாட்டுப்பாச்சில் உடையார் திருமேற்றளி உடைய நாயனாரது திருக்கோயிலின் அர்த்தமண்டபம், திருமண்டபம் இவைகள் சீரணித்து இருந்தன, இவைகளைத் தட்டோடு திருப்பணி செய்தற்கும், திருமலையில் திருமஞ்சனம் பண்ணவேண்டுகைக்குமாக இவ்வூர் ஆதிசண்டேசுவர தேவகன்மிகள் இவ்வூர்ச் சிவ பெருமானுக்கு உரிய வெங்காந்தம் நிலம் நானூற்று ஒருபத்தைந்தே முக்காலே மாகாணி அரைக்கீழ் எட்டுமா நிலத்தைத் திருப்பைஞ்ஞீலி உடையார் கோயில் ஆதிசண்டேஸ்வர தேவகன்மிகளுக்கு பதினா யிரம் நற்காசுக்குக் குடிக்காணியாக விற்றுக் கொடுத்த செய்தியை, விசாலாட்சி அம்மன் கோயிலிலுள்ள திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜ ராஜ தேவரின் கல்வெட்டு உணர்த்துகிறது. எனவே திருப்பைஞ்ஞீலி மேற்றளி உடையார் கோயிலின் அர்த்த மண்டபம் திருமண்டபம் இவைகளின் திருப்பணி இந்தத் திரிபுவனச்சக்கரவர்த்தி இராஜராஜ தேவர்காலத்தில் மீளவும் கட்டத் தொடங்கி இருக்கவேண்டும், அல்லது கட்டி முடிவு பெற்றிருக்க வேண்டும் என்று கொள்ளலாம்(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1892 No.90-92.
See also the South Indian Inscriptions, Volume IV N0. 537-541.).
திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டார், திருப் பைஞ்ஞீலி உடையார் கோயில் திருநிலை எழுகோபுரத் திருப் பணிக்கும், பல திருப்பணிக்கும் உடலாக வள்ளுவப்பாடி நாட்டில் ஆதனூரில் நான்கு எல்லைக்கு உட்பட்ட நன்செய், புன்செய் நிலங்களைக் கொடுத்துள்ளார், அக்கோபுரத் திருப்பணி முற்றுப் பெறாமல் இருக்கின்றமையால், இக்கோபுரம் இம்மன்னன் காலத்தில் கட்டத் தொடங்கப்பெற்றது என்பது உறுதி. |