அருள்மிகுபெரியநாயகி உடனுறை பழமலைநாதர்
மரம்: வன்னி
குளம்: மணிமுத்தாறு
பதிகங்கள்: மத்தாவரை -1 -12 சம்பந்தர்
மொய்த்துவானோர் -1 -53 சம்பந்தர்
நின்றுமலர்தூவி -1 -93 சம்பந்தர்
மெய்த்தாற -1 -131 சம்பந்தர்
தேவாசிறியோம் -2 -064 சம்பந்தர்
வண்ணமலர்கொடு -3 -34 சம்பந்தர்
முரசதிர்ந்தெழுதரு -3 -99 சம்பந்தர்
கருமணியைக் -6 -68 அப்பர்
பொன்செய்த -7 -25 சுந்தரர்
நஞ்சிஇடை -7 -43 சுந்தரர்
முகவரி: கோயில்
விருத்தாசலம்
விழுப்புரம் மாவட்டம், 606001
தொபே. 04143 230203
நடுநாட்டுத் தலங்களில் 9 ஆவது தலம். விருத்தாசலம் என வழங்கப்படுகின்றது. சிதம்பரம், சேலம் முதலிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. கடலூர் - சேலம் இருப்புப் பாதையில் இரயில் நிலையம் உள்ளது.
நித்யானந்தகூபம், அக்கினிதீர்த்தம், சக்கரதீர்த்தம், குபேர தீர்த்தம் என்பன. மணிமுத்தாறு சிறப்புடையது.
தலவிருட்சம்: வன்னிமரம்.கோயிலின் வடக்குக்கோபுரத்திற்கு நேர்வடக்கேயுள்ள மணிமுத்தாற்றுப் பகுதிக்குப் புண்ணியமடு என்று பெயர். இங்கேதான் இறந்தவர்களின் எலும்புகளை இட்டு முழுகுவது வழக்கம். இங்கே ஆழத்துப் பிள்ளையார் என்பது தலவிநாயகர் திருப் பெயர். முதல் பிராகாரத்திற்குக் கைலாசப் பிராகாரம் என்று பெயர். இந்தப் பிராகாரத்தில் வடமேற்குமூலையில் இருபத்தெட்டு ஆகமக் கோயில் உள்ளது. அம்மை திருமுக மண்டலம் கிழக்குநோக்கியது. அம்மையின் திருநாமம் வட மொழியில் விருத்தாம்பிகை. சுவாமி பெயர் விருத்தகிரீசர். கற்பக மரமே வன்னிமரமாக வந்து பழமலை நாதர் திருக்கோயில் திருப்பணியைச் செய்ததாக வரலாறு. உற்சவ மூர்த்திநாமம் பெரியநாயகர். இவர் ஆண்டிற்கு ஒருமுறை மாசிமக விழாவில் ஆறாந் திருநாள் மட்டுமே எழுந்தருளிக் காட்சி வழங்கு வார். பிரமன் படைப்புக்குமுன் சிவபெருமான் தாமே மலைவடிவாகி நிற்கப் பிரமன் அதனையறியாது, பல மலைகளையும் படைத்து, அவற்றை நிலைபெறுத்த இடமின்றி மயங்கச் சிவபெருமான் தோன்றியருளி தானே பழமலையாதலைத் தெளிவித்தார். ஆதலின் முதுகுன்றம் எனவும், பழமலை எனவும் வழங்குவதாயிற்று.
வழிபட்டவர்கள்:
சுக்கிராசாரியார், யாக்ஞவல்க்கிய முனிவர், சிகண்டி, கோசி கன், விதர்க்கணசெட்டி, விபசித்து முனிவர்,அகத்தியர், சுவேத மன்னர், நாதசர்மா, அநவர்த்தினி முதலியோர். சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பதிகம்பாடிப் பன்னீராயிரம் பொன் பெற்று அதனை மணிமுத்தாற்றிலிட்டுத் திருவாரூரில் பெற்ற அற்புதம் நிகழ்ந்த இடம். இத்தலத்தில் விழா நிகழ ஏற்பாடுகள் செய்தவர் கச்சிராயமன்னர். துறவுபூண்டு உண்மை ஞானியான கன்னடநாட்டு மன்னர் ஒருவர்க் காக இறைவனே தண்ணீர்ப் பந்தல் வைத்துக்காத்ததாகவும், அம்மை அவருக்குப் பாலளித்துக் குமாரதேவர் எனத் திருநாமம்சூட்டி அழைத்ததாகவும், குமார தேவர்க்காக அம்மை பாலாம்பிகையாகி அமுது படைத்ததாகவும் வரலாறு. கி.பி. 11ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியில் வாழ்ந்த இலிங்காரெட்டியாரும், அவர் மகன் அண்ணா மலைரெட்டியாரும் திருப்பணி செய்து கி.பி. 1623 இல் கும்பாபிஷேகம் செய்தனர். அண்மையில் 1994 இல் மகா கும்பாஷேகம் நிகழ்த்தப் பெற்றுள்ளது.