விசயமங்கை (திருவிசயமங்கை)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு மங்கை நாயகி உடனுறை விசயநாதர்


குளம்: அர்ச்சுன தீர்த்தம்

பதிகங்கள்: மருவமர் -3 -17 திருஞானசம்பந்தர்
குசையுமங் -5 -71 திருநாவுக்கரசர்

முகவரி: புள்ளப்பூதங்குடி அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 612301
தொபே. 0435 2941912

பாண்டுவின்மகன் பார்த்தன் (அர்ச்சுனன்) வழிபட்டுப் பேறுபெற்ற தலமாதலால் விசயமங்கை என்னும் பெயர் பெற்றது. இது ``பாண்டுவின் மகன் பார்த்தன் பணிசெய்து வேண்டு நல்வரங்கொள் விசயமங்கை`` என்னும் திருநாவுக்கரசரது திருக்குறுந்தொகை (பாசுரம் 8) ஆல் அறியக் கிடக்கின்றது.

விசயமங்கை என்பது கோயிலின் பெயராகும். ஊரின் பெயர் கோவந்தபுத்தூர். ஒரு பசு இலிங்கத் திருமேனியின்மீது தன் மடியிலுள்ள பாலைச் சொரிந்து வழிபட்ட காரணத்தால் இப்பெயர் எய்திற்று. இது ``கோதனம் வழிபடக் குலவு நான்மறை வேதியர் தொழுதெழு விசயமங்கையே`` எனவரும் இத்தலத்துக்குரிய திருஞானசம்பந்தரது பதிகத்தின் இரண்டாம் பாசுர அடிகளால் விளங்கும்.

கோ வழிபட்ட ஐதீகத்தை உணர்த்தும் சுதைப்படிவம் இக் கோயில் மேற்குப்பிரகாரத்தில் வைத்துப் போற்றப்பட்டு வருகின்றது. இக்கோவந்தபுத்தூரை இப்பக்கத்துள்ள மக்கள் கோகறந்தபுத்தூர் என வழங்குகின்றனர். ஊரின் பெயர் கோவந்தபுத்தூர் என்பதையும், கோயிலின் பெயர் விசயமங்கை என்பதையும்,

``கொள்ளிடக்கரைக் கோவந்தபுத்தூரில்

வெள்ளிடைக் கருள் செய்விசயமங்கை,

உள்ளிடத்து உறைகின்ற உருத்திரன்

கிள்ளிடத் தலையற்றது அயனுக்கே``

என்னும் இப்பதிக்குரிய திருநாவுக்கரசரது பதிகப்பாடலால் அறிய லாம். இறைவரின் திருப் பெயர் விசயநாதர். இறைவியின் பெயர் மங்கை நாயகி. தீர்த்தம் அர்ச்சுனதீர்த்தம். இது கோயிலுக்கு எதிரில் இருக்கின்றது.

இது கும்பகோணத்திற்கு வடமேற்கில் உள்ள திரு வைகா வூர்க்கு வடக்கே கொள்ளிடப் பேராற்றின் வடகரையில் இருக்கின்றது. சுவாமி மலைக்கு மேற்கிலுள்ள அண்டக்குடி என்னும் ஊரிலிருந்தும் இவ்வூரையடையலாம். இவ்வூர்க்கு அப்பர் பதிகம் ஒன்றும் சம்பந்தர் பதிகம் ஒன்றும் ஆக இரண்டுபதிகங்கள் இருக்கின்றன.




கல்வெட்டு:

இத்திருக்கோயிலில் மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன், பரகேசரி உத்தமசோழன், முதலாம் இராஜராஜசசோழன், முதலாம் இராஜேந்திரசோழன், முதற்குலோத்துங்க சோழன் மூன்றாங் குலோத்துங்க சோழன், திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ தேவன் இவர்கள் காலங்களில் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இக்கல்வெட்டுக்களில் இறைவர் விஜயமங்கலமுடைய மகாதேவர், விஜயமங்கலத்து மகாதேவர், விஜயமங்கலமுடைய பரமசாமி என்னும் பெயர்களால் குறிக்கப்பெற்றுள்ளனர்.

இக்கோயில் விமானத்தைக் கல்லால் கட்டியவன்:

விசயமங்கலமுடைய பரமசாமிக்கு ஷ்ரீ விமானத்தைக் கல்லால் எழுந்தருளுவித்தவன் உடையார் மும்முடிச்சோழதேவர் பெருந்தரத்து குவளாலமுடையான் அம்பலவன் பழுவூர் நக்கனான விக்கிரமசோழ மகாராஜன் ஆவன்.(See the South Indian Inscriptions, Volume XIII The Cholas, No.76. பெருந்தரம் a noleman. ) இச்செய்தி முதலாம் இராஜராஜ சோழனின் மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளது.

வழிபாடுகள்:

இக்கோயிலில் அர்த்தயாமம் உள்பட நான்கு போதுகளில் வழிபாடுகள் நடைபெற்று வந்தன. இவ்வழிபாட்டுக் காலங்களில் திருவமுதுக்கு அரிசிக்கும், பொரிக்கறியமுது, புழுக்கறியமுது ஆக கறியமுது இரண்டுக்கும் நெய்யமுது, தயிரமுது, இவைகளுக்கும், அடைக்காய் அமுது வெறுங்காய் இவைகளுக்கும், சந்தனம், சந்தனக்குழம்பு, கற்பூரம் இவைகளுக்கும், ஆடி அருளப்பாலுக்கும், ஆடைக்கும், நுந்தாவிளக்குக்கள் ஐந்தினுக்கும், சிறுகாலை எட்டு, உச்சியம்போது எட்டு, இரவுக்குப் பதினான்கு சந்திவிளக்குக்களுக்கும் பிறவற்றிற்குமாக வடபிடாகை நெடுவாயிலிலும் இந்நெடுவாயிலைச் சுற்றிய பிடாகைகளிலும் உள்ள நிலங்களை நிவந்தங்களாக அம்பல வன் பழுவூர் நக்கனாகிய இராஜராஜப் பல்லவரையன் அளித்திருந்தான்.

எழுந்தருளுவித்த திருமேனிகள்:

முதலாம் இராஜராஜசோழனின் ஏழாம் ஆண்டில் அம்பலவன் பழுவூர் நக்கனாகிய இராஜராஜப்பல்லவரையன் இத்திருக்கோயிலில் கூத்தப்பெருமாளையும், உமாபட்டாலகியையும் எழுந்தருளுவித்து, அவர்களுக்கு அணிகலன்களைக் கொடுத்துள்ளான்.

திருமடம்:

இவ்வூரில் திருத்தொண்டத் தொகையன் திருமடம் ஒன்று இருந்ததை திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ தேவரின் 32 ஆம் ஆண்டுக் கல்வெட்டு உணர்த்துகின்றது. இவ்வூர் முதலாம் இராசேந்திர சோழன் கல்வெட்டில், வடகரை இராஜேந்திர சிங்கவளநாட்டுப் பெரியவானவன் மாதேவி சதுர்வேதிமங்கலத்து விசயமங்கை என்றும், திரிபுவனச் சக்கரவர்த்தி மூன்றாங் குலோத்துங்கசோழன் கல்வெட்டில் விக்கிரமசோழவள நாட்டு இன்னம்பர் நாட்டு விசய மங்கை எனவும் குறிக்கப்பெற்றுள்ளது.

பிறசெய்திகள்:

பெரியவானவன்மாதேவி சதுர்வேதிமங்கலத்தில் சபை ஒன்று இருந்தது. அச்சபையார்க்குப் பெருங்குறிப் பெருமக்கள் என்று பெயர். அவர்கள் கூட்டம் கூடுவதற்குமுன் தட்டழிகொட்டிக் காளம் ஊதச் செய்து, நடுவில் ஷ்ரீ கோயிலான வினையாபரண விண்ணகரப் பெருமானடிகள் கோயிலின் முன்பில் கூட்டம் குறைவறக் கூடியிருந்து கோயில்காரியங்களைக் கவனித்துவந்தனர். இங்குள்ள கல்வெட்டு ஒன்று ``வாழ்க அந்தணர்`` என்று தொடங்கும் தேவாரப்பாடலுடன் தொடங்குகின்றது. இது பாராட்டற்குரியதாகும். இப்பாடலுக்கும் அச்சில் புத்தகத்தில் வெளிவந்த பாடலுக்கும் வேறுபாடு இல்லை.

இக்கோயிலில் உள்ள முதலாம் இராஜராஜ சோழனின் மூன்றாமாண்டுக் கல்வெட்டில் ``இவ்வொட்டோலைப்படியே கல்லில் வெட்டவும் சாசனம் செய்வித்துக் கொள்ளவும் பெறுவார் ஆக ஒட்டி இறைகாவல் ஒட்டோலை இட்டுக் குடுத்தோம்`` என்னும் தொடர்கள் காணப்படுகின்றன.(இத்தொடர்களில் வரும் ஒட்டோலை என்பது இக்காலம் Agreement என்னும் பொருளில் இருப்பது நோக்கத் தக்கது. ) (See the Annual Reports on South Indian Epigraply for the year 1929. No. 157 - 194.)

குறிப்பு:

கொள்ளிடப்பேராற்றின் தென்கரையில் திருவைகாவூருக்குக் கிழக்கில் விசயமங்கை என்று ஒரு ஊர் இருக்கிறது. அங்கு ஒரு சிவன் கோயிலும் உண்டு. இதை விஜயமங்கை என்று கொண்டாரும் உண்டு. அது தவறாகும். இந்த விஜயமங்கையை சாதாரண மக்கள் விஷமூங்கி என்று அழைக்கின்றனர்.

 
 
சிற்பி சிற்பி