ஆவடுதுறை (திருவாவடுதுறை)
இக்கோயிலின் காணொலி மூடுக / திறக்க
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535,
5370535. தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
இக்கோயிலின் படம் மூடுக / திறக்க
அருள்மிகு ஒப்பிலாமுலையம்மை உடனுறை மாசிலாமணியீசுரர்
மரம்: அரச மரம் குளம்: கோமுத்தி தீர்த்தம்
பதிகம்: இடரினுந்தளரி -3.4 திருஞானசம்பந்தர்
மாஇரு ஞாலம் -4.56 திருநாவுக்கரசர்
மஞ்சனே மணி -4.57 திருநாவுக்கரசர்
நிறைக்க வாலி -5.29 திருநாவுக்கரசர்
நம்பனை நால் -6.46 திருநாவுக்கரசர்
திருவே என் -6.47 திருநாவுக்கரசர்
மறையவன் 7.66 சுந்தரர்
கங்கை வார் -7.70 சுந்தரர்
முகவரி: திருவாவடுதுறை அஞ்சல், நரசிங்கன் பேட்டை, மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், 609803 தொபே. 04364 232055
திருக்கயிலாயத்தில் இறைவி இறைவனோடு சொக்கட்டான் ஆடிக்களித்தமையால் பசு வடிவம் எய்தினர். அவர் அப்பசு வடிவத்தோடு இங்கு வந்து வழிபட்டு அவ்வடிவம் நீங்கப்பெற்றனர் என்னும் காரணம் பற்றி இப்பெயர் பெற்றது என்பர்.
1. துணைவந்தபிள்ளையார். 2. அழகிய பிள்ளையார். இறைவரின் திருப்பெயர் மாசிலாமணியீசுரர். இவரே கர்ப்பஇல்லில் எழுந்தருளியிருப்பவர். அணைத்தெழுந்தநாயகர்; இவர் உமாதேவியை அணைத்தெழுந்த கோலமாக இருப்பவர். திருவிழாவின் முடிவில் கோமுத்தி தீர்த்தத்தில் தீர்த்தம் கொடுத்தருளுபவர் இவரே.
செம்பொன் தியாகர்: முசுகுந்தச்சக்கரவர்த்திக்கு இறைவர் திருவாரூர்த் தியாகராசராகக் காட்சி காட்டியருளியமை யால் இவர்க்கு இங்கே தனிச் சந்நிதி இருக்கிறது. இவர் வீரசிங்காதனம் உடையவர். இவரது நடனம் சுந்தர நடனம். திருவிழாக்காலத்தில் திருத்தேரில் எழுந்தருள்பவர் இவரேயாவர்.
இறைவியின் திருப்பெயர் ஒப்பிலாமுலையம்மை. இத்திருப்பெயர் சுந்தர மூர்த்திநாயனாரால் `ஒப்பிலா முலையாள் ஒரு பாகா`` என்று இவ்வூர்ப் பதிகத்தில் எடுத்து ஆளப்பெற்றுள்ளது. தீர்த்தங்கள் கோமுத்தி தீர்த்தம், பத்மதீர்த்தம், கைவல்யதீர்த்தம் என்பன. இவை முறையே திருக்கோயிலுக்கு எதிரிலும், கொங்கணேசுவரர் கோயிலின் பக்கத்திலும், திருக்காவிரியிலும் இருக்கின்றன.
மரம் அரசு. இது படர்ந்து விளங்குதலால் படர்ந்த அரசு என்றும் வழங்கப்பெறும். சபை போதி அம்பலம். தேவர்களும் முனிவர்களும் செய்த வேண்டுகோளுக்கு இரங்கி இவ்வரசமரத்தின் நிழலில் அமர்ந்த அம்பலத்தில் இறைவர் தாண்டவம் புரிந்தமையால் இப்பெயர் பெற்றது. (போதி - அரசமரம்.) நந்தி தருமநந்திதேவர். தலத்திற்கு வழங்கும் வேறுபெயர்கள்:- கோமுத்தி, கோகழி, நவகோடிசித்தபுரம் முதலியன.
முசுகுந்தமன்னனுக்கு மகப்பேறு அளித்தது; தரும தேவதையை இடபவாகனமாகக் கொண்டதன்றிச் சந்நிதியில் அரசமரத்தின் நிழலில் கோயில்கொண்டு இருக்கும்படி அருளியது; திருஞானசம்பந்த சுவாமிகளுக்குப் பொற்கிழியளித்தது; திருமூலநாயனாரைத் தடுத்தாட்கொண்டு ஆகமசாரமாகிய திருமந்திரத்தை வெளிப்படுத்தத் திருவருள் புரிந்தது; போகர் முதலிய சித்தர்களுக்கு அட்டமாசித்தியை அருளியது முதலியவை இப்பதியில் இறைவர் நிகழ்த்தியருளிய விசேடங்களாகும். இவைகளுள் ஞானசம்பந்தப் பெருந்தகையார்க்கு இறைவர் ஆயிரம் பொன் அளித்தருளியதை ஆண்ட அரசர் (திருநாவுக்கரசர்) இவ்ஊர்ப் பதிகத்தில் ``கழுமலவூரர்க்கு அம்பொன் ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடுதுறையனாரே` எனக் கூறியிருப்பது அறிதற்குரியதாகும். மூவர்களுடைய திருப்பதிகங்கள் எட்டையும், திருமூலர் திருமந்திரம் மூவாயிரம் பாடல்களையும், சேந்தனார் திருவிசைப்பாப் பதிகம் ஒன்றையும் பெற்ற பெருமையுடைய பதி இது.
திருக்கயிலாய பரம்பரையில் சிவஞானதேசிகராய் எழுந் தருளியுள்ள ஷ்ரீலஷ்ரீ நமச்சிவாய மூர்த்திகளால் நிறுவப்பெற்றதும், சைவ சித்தாந்தத்திற்கும் தமிழுக்கும் நல்ல ஆக்கத்தை அளித்து வருவதும் ஆகிய பழமையும் பெருமையும் வாய்ந்த திருமடாலயம் ஒன்று திகழும் பதி இது.
இவ்வூர்த் திருக்கோயிலில் பிற்காலச் சோழமன்னர்களுள், முதலாம் பராந்தகன் முதலாம் இராஜராஜன், முதலாம் இராஜேந்திரன், இவனது மகனாகிய விஜயராஜேந்திரன், முதற்குலோத்துங்கன், விக்கிரமசோழன், திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவன் முதலானோர் காலத்தவையும், பாண்டியர்களுள் மாறவர்மன் விக்கிரம பாண்டியன் காலத்ததுமான கல்வெட்டுக்கள் உள.
திருக்கோயில் கட்டப்பெற்ற காலம்:
இத்திருக்கோயிலில் தில்லைச்சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்த முதற்பராந்தக சோழன் காலத்து ஒன்பது கல்வெட்டுக்கள் பொறிக்கப்பெற்று இருக்கின்றன. இப்பராந்தகன் கி. பி. 907 முதல் கி. பி. 948 வரை சோழமண்டலத்தை ஆட்சி புரிந்தான். இம்மன்னன் தன் முப்பத்தெட்டாம் ஆட்சியாண்டில் (907 + 38 = கி. பி. 945) 500 கழஞ்சு பொன் கொடுத்துள்ளான். அப்பொன்னைக்கொண்டு இக்கோயில் குடப்படை பீடத்துக்குமேல் திருப்பணி செய்யப்பெற்றது.
அத்திருப்பணி முடிவு பெற்று கும்பாபிடேகஞ் செய்யக் குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது சென்றிருக்கவேண்டும். பராந்தகன் ஆட்சியின் இறுதிக்காலத்தில் (கி. பி. 947) அதாவது, இன்றைக்கு 1040 ஆண்டுகளுக்கு முன்பே இக்கோயில் கற்றளியால் ஆக்கப் பெற்றதாகும்.
(See the Annual Reports on South Indian Epigraphy for the years 1925 - 1926. 101 - 162, 59 - 72.)
கற்றளியைக் கட்டியவர்: பராந்தகன் காலத்தில் இக்கற்றளியைக் (கருங்கல்கோயிலை ) கட்டியவர் கற்றளிப்பிச்சர் ஆவர். இவருடைய பிரதிமை கர்ப்ப இல்லின் தென்புறத்தே அதாவது தட்சிணாமூர்த்தி சந்நிதிக்குக் கீழ்ப்புறத்தில் கைகளை மார்பிற்கு நேரே குவித்துத் திருவாவடுதுறை உடையாரை வழிபடும் நிலையில் இருக்கின்றது. கற்றளிப் பிச்சன் என்று அவரது பெயர் செதுக்கப்பட்டுள்ளது. பிச்சன் என்றால் அன்புடையவன் என்று பொருள் ``நின்கோயில் வாயில் பெரிய பிச்சனாக்கினாய்`` என்பது திருவாசகம்.
இக்கற்றளிப்பிச்சர் பிரதிமைக்குக் கிழக்குப் புறத்தே கைகளைத் தலைமேல் குவித்து வழிபடும் பிரதிமை ஒன்று இருக்கின்றது. இவர் கற்றளிப்பிச்சனார்இளவல் திருநாவுக்கரைய தொண்டராவர்.
கற்றளிப்பிச்சனார் இக்கோயிலைக் கட்டினார் என்பதற்கு ஆதாரம்:``ஸ்வஸ்திஷ்ரீ மதுரைகொண்ட கோப்பரகேஸரி வன்மற்கு யாண்டு இருபத்தைந்தாவது தென்கரைத் திருவழுந்தூர் நாட்டு பிர்ம தேயம் சிற்றானைச்சூர்ஸபையோம். இவ்வூர் கவிசங்கரன் மாறனிடைத்திரைமூர் நாட்டு பிர்மதேயம் சாத்தனூர் திருவாவடுதுறை கற்றளி எடுத்தபித்தன் மஹாதேவர்க்கு உவச்சப்புறமாக விலை கொண்ட நிலம் பதினொருமாச் செய்யும்`` என்னும் கல்வெட்டுப்பகுதி விளக்குகின்றது. (இக்கல்வெட்டு அகத்தியர் பிரதிமைக்கு மேற்குப் பக்கத்தில் இருக்கிறது. உவச்சர் என்பார் சங்கு, காளம், இவைகளை ஊதுபவர். புறம் = நிவந்தம். உவச்சப்புறம் - என்பது சங்கு, காளம் இவைகளை ஊதுபவர்களுக்கு நிவந்தமாக அளிக்கப்பெற்றது எனப்பொருள்படும்.)
கோயிலின் சிற்சில பகுதிகளைச் செய்வித்தவர்:
அர்த்த மண்டபத்தின் வடபால், துர்க்காதேவிக்குக் கீழண்டைப் பக்கத்தில் திருவாவடுதுறை உடையாரைத் தொழுவாராக ஒரு ஆடவரின் பிரதிமையும் அவருக்குப் பக்கத்தில் ஒரு அம்மையாரின் பிரதிமையும் இருக்கின்றன. அவர்கள் இக்கோயிலில் ஒருபடை செய்வித்தவர் ஆவர். அப்பிரதிமைகளுக்கு அருகில் ``இக்கோயிலில் ஒருபடை செய்விச்சு இநின்றான் வாமபூசலுடையான் எழுவன் சத்திரசேகரன் இவன் பின்பே நின்றாள் பெரியவேளத்து வானல்லடிகள் நக்கன்`` என்று தீட்டப்பட்டிருக்கின்றன. அர்த்த மண்டபத்தின் தென்பாகத்தில் பிள்ளையார் திருமேனிக்குக் கிழக்குப் பக்கத்தில் ``கல்கட்டுவித்தார் பல்லவமகாதேவியார் சிவகாமு`` என்று செதுக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வம்மையாரும் இப்பகுதியைக் கட்டுவதற்கு உதவி செய்தவர் ஆவர். கர்ப்ப இல்லின் தென்புறத்தில் தட்சிணாமூர்த்தி திருமேனிக்கு மேற்குப் பக்கத்தில் கைகளைத் தலைமேல் குவித்து வணங்கும் ஒரு பிரதிமை இருக்கிறது. அதன்கீழ் ``ஷ்ரீ திருவாவடுதுறை உடையார் அடியான் அம்பலவன் திருவிசலூரான் திருநாவுக்கரையன்`` என்று செதுக்கப்பட்டுள்ளது. இவனும் இத்திருப்பணிக்கு உதவி செய்தவன் ஆவன். இத்தட்சிணாமூர்த்திக்கு மேற்குப் பக்கத்தில் இருக்கும் பிரதிமை மிறைக்கூற்றத்து வீரமாங்குடி உடையானது ஆகும். அர்த்த மண்டபத்தின் கிழக்குப்புறச் சுவரில் வாசலுக்கு வடபால், மார்பில் கைகளைக் குவித்துக்கொண்டு இறைவனை வழிபடும் நிலையில் செதுக்கப்பட்டிருக்கும் பிரதிமை திருநறையூர் நாட்டுச்சிற்றாடியான் தாமன் அம்பலவனான நமசிவாய னுடையதாகும்.
இத்திருக்கோயிலில் எழுந்தருளும் இறைவர், திருவாவடு துறைத் தேவர், திருவாவடுதுறை ஆழ்வார், திருவாவடுதுறை உடையார், திருவாவடுதுறைப்பெருமான் அடிகள் என்னும் திருப்பெயர்களால் இக்கோயில் கல்வெட்டுக்களில் கூறப்பெற்றுள்ளனர். மிகப் பிற்காலத்துக் கல்வெட்டு ஒன்று இறைவர் திருப்பெயரைக் கோமுத்தீஸ்வரர் என்று குறிப்பிடுகிறது.
மிகப் பிற்காலத்துக் கல்வெட்டு இறைவியாரின் திருப்பெயரை அதுலகுசநாயகி எனக் கூறுகின்றது.
இத்திருக்கோயிலில் மிகப் பழங்காலத்தில் எழுந்தருளுவிக்கப் பெற்ற திருமேனிகளும் பிரதிமைகளும்: சிற்றம்பலத்திருமேனி முதல் ஆடி அருளும் உடையாரும், ஆட்டத்திற்கு வாசிக்கும் பூதமமைத்த பீடமும் பிரபையும் (திருவாசி) உட்பட முழ உயரத்து ஒருவர். இவர் நம்பிராட்டியார் பீடமும் பிரபையுமுள்பட இருந்த ஒருமுழமும் ஆறுவிரல் உயரத்து ஒருவர். சந்திரசேகர தேவர் பீடமும் பிரபையும் உட்பட இருமுழ உயரத்து ஒருவர். இவர் நம்பிராட்டியார் பத்மத்தோடும் ஒருமுழ உயரத்து ஒருவர்; திரிபுவன சுந்தரர் பீடமும் பிரபையும் உட்பட மும்முழ உயரத்து ஒருவர். கணபதியார் பீடமும் பிரபையும் உட்பட ஒருமுழ உயரத்து ஒருவர்; சந்திரசேகர தேவர் பீடமும் பிரபையும் ஒருசாணும் ஒருவிரல் உயரத்து ஒருவர்: கேஷத்திர பால தேவர் பீடமும் பிரபையும் உட்பட ஒரு முழ உயரத்து ஒருவர். மேற்படி தேவர் பீடம் உட்பட ஒருசாணே நால்விரல் உயரத்து ஒருவர். இடபவாகன தேவரும் பிராட்டியாரும், இடபமும் பீடமும் பிரபையுமுட்பட மும்முழ உயரத்து ஒருவர். பிச்சதேவர் மானும் பூதமும் பீடமும் பிரபையும் உட்பட இருமுழ மூவிரல் உயரத்து ஒருவர். அர்த்த நாரி தேவர் பத்மத்தொடு ஒரு முழம் ஓட்டை உயரத்து ஒருவர். தட்சிணாமூர்த்தி ஒரு முழ உயரத்து ஒருவர். பள்ளிக்கட்டில் நம்பிராட்டியார் பீடமுட்பட இருமுழ உயரத்து ஒருவர். அஸ்திரதேவர் நடுவுமாகத் தண்டொடும் ஒருவர். இடபதேவர் பீடமுட்படத் திருக்காம்பு அளவும் ஈரொட்டை உயரத்து ஒருவர். சண்டேசுவர தேவர் பீடமுட்பட இருந்த ஒருமுழ உயரத்து ஒருவர். திருநாவுக்கரைய தேவர் ஒருமுழமும் நான்கு விரல் உயரத்து ஒருவர். சிவஞானசம்பந்த அடிகள் பீடமும் பிரபையும் உட்பட ஒருமுழம் ஆறுவிரல் உயரத்து ஒருவர். நம்பி ஆரூரனார் பத்மத்தோடு ஒரு முழமும் ஆறுவிரல் உயரத்து ஒருவர். திருக்காளத்திப்பிச்சர் தம்மையாக வார்த்த ஒருமுழ உயரத்து ஒருவர்.
வெண்கலம், பித்தளை, செம்பு, தரா இவைகளினால் செய்யப் பெற்ற பாத்திரங்களும் குத்திவிளக்கு வகைகளும்: வெண்கலம் முதல் உரு ஐம்பத்துமூன்றினால் வெள்ளிக் கோலால் நிறை ஆயிரத்து நாநூற்று இருபத்து முப்பலவரை. பித்தளை முதல் உரு மாண்டினால் மேற்படி கோலால் நிறை நூற்றேழுபலம். செப்பு முதல் உரு எழுபதினால் மேற்படி கோலால் நிறை தொள்ளாயிரத்து இருபத்தைம்பலனே கஃசு.
தராமுதலுரு நாற்பத்துநாலினால் மேற்படி கோலால் நிறை இரண்டாயிரத்து எண்ணூற்று நாற்பத்தைம் பலவரை. தராகுத்துவிளக்கு-கருவும் உட்பட விளக்கு முப்பது. இவ்வூர்க் கவுணியன் இந்நிலத்தானாக வார்த்த விளக்கு ஒன்று ஆக விளக்கு முப்பத்தொன்று.
அணிகலன்களும் பரிகலன்களும்: உடையார் ஷ்ரீ இராஜேந்திர சோழதேவர் நம்பிராட்டியார் திரைலோக்கியமாதேவியாரின் தாயாரான இராமன் அபிமான தொங்கியார், திருவாவடுதுறை உடையார்க்கு அமுது செய்தருள வெள்ளித் தளிகை ஒன்று குடிஞைக் கல்லால் எழுபதின் கழஞ்சு நிறை உள்ளதும், உடையார்க்குப் பொற்கொள்கை ஒன்று குடிஞைக் கல்லால் செம்பொன் நாநூற்று ஒருபத்து முக்கழஞ்சரை நிறையுள்ளதும் ஆகிய இவ்விரண்டையும் கொடுத்திருந்தனர். உடையார் இராஜாதிராஜ தேவர், பெரியவேளத்து அலோயன் அணுக்கி, மேற்படி வேளத்து மற்றொரு அம்மையார் இவர்கள் கொடுத்த பொன்னால் பொற்பூ இருபத்தேழு, செங்கழுநீர்ப்பூ முப்பத்தாறு, மாந்தளிர் ஒன்று, பிட்ச தேவர் கண்டக் காறை ஒன்று, பொற்கை ஈச்சோப்பி ஒன்று. இவைகள் செய்யப்பெற்று அணிவிக்கப்பெற்றுவந்தன.
திருவிழா: இத் திருக்கோயிலில் புரட்டாசி மாதத்தில் ஏழு நாள்களில் திருவிழா நடைபெற்றுவந்தது. அக்காலம் மூலநட்சத்திரத்தன்று கொடியேறி பூரட்டாதி நட்சத்திரத்தன்று தீர்த்தமாடுவது வழக்கம். இச்செய்தி, `திருமா எடுத்த நாள் மூல முதல் அடக்கடவ அரிசி அரிய சிவயோகிகளுக்கும் பத்தர்களுக்கும், மாகேசுவரர்களுக்கும் அரிசி தூணியும், பூராடத்தினன்று சிவயோகிகளுக்கு அடும் அரிசி தூணிப்பதக்கும், பன்மாகேசுவரர்க்கு அடும் அரிசி கலமும், உத் திராடத்தினன்று சிவயோகிகளுக்கு அரிசி கலமும் பன்மாகேசுவரர்க்கு அடும் அரிசி முக்கலமும் திருவோணத்தினன்று சிவயோகிகளுக்கு அடும் அரிசி இருகலமும், பன்மாகேசுவரர்களுக்கு அடும் அரிசி ஆறுகலமும், அவிட்டத்தினன்று சிவயோகிகளுக்கு அடும் அரிசி முக்கலமும், பன்மாகேசுவரர்க்கு அடும் அரிசி ஏழுகலமும், சதயத் தன்று சிவயோகிகளுக்கு அடும் அரிசி நாற்கலமும், பன்மா கேசுவரர்க்கு அடும் அரிசி எண்கலமும், தீர்த்தமாடும் பூரட்டாதி ஞான்று சிவயோகிகளுக்கு அடும் அரிசி ஐங்கலமும் பன்மா கேசுவரர்க்கு அடும் அரிசி பன்னிருகலமும் ஆக இவ் ஏழு நாளும் அடக்கடவ அரிசி ஐம்பத்திருகலமும்` என்னும் மிறைக்கூற்றத்து, வீரமாங்குடி உடையான் தாயங்காடன் என்பவன், மதுரை கொண்ட கோப்பரகேசரிவர்மரின் முப்பத்தாறாம் ஆண்டில் இவ் விழாவிற்கு வரும் சிவயோகிகளுக்கும், பன்மாகேசுவரர்களுக்கும் ஊட்டூட்டின் பொருட்டு சிறுபுலியூரிலும், சிற்றானைச்சூரிலும் நில நிவந்தம் அளித்துள்ள கல்வெட்டுப் பகுதியால் அறியக்கிடக்கின்றது.
இவ்விழா முடிவுநாளாகிய புரட்டாசிப் பூரட்டாதிநாளில் திருமூல நாயனாரது நாடகமும் ஆரியக்கூத்து ஏழு அங்கமும் நடத்தப்பெற்று வந்தன. இச்செய்தி இக்கோயில் கர்ப்ப இல்லின் மேற்குப்புறச் சுவரில் உள்ள, முதலாம் இராஜராஜசோழதேவரது ஒன்பதாம் ஆண்டில் பொறிக்கப்பெற்ற கல்வெட்டினால் புலப்படுகின்றது.
மகாமண்டபத்தைக் கட்டியவன்: இம் மகாமண்டபத்தைக் கட்டியவன் இளங்காரிகுடையான் சங்கரதேவன் ஆவன். இத் திருப்பணிக்குத் திருவெண்காடு உடையான் அனங்கனும் உதவி செய்துள்ளான். இவைகளை இம்மண்டபத்தின் உள்பக்கத்தில் இருக்கும் தூண் ஒன்றில் ``ஸ்வதிஷ்ரீ இத் திருமண்டபம் இளங்காரிமுடையான் சங்கர தேவன்`` என்னும் கல்வெட்டாலும்; இம் மகாமண்டபத்தின் தென்பக்கமுள்ள ஒரு தூணின் போதியக்கட்டை யில் உள்ள, ``இக்கல் திருவெண்காடு உடையான் அனங்கன் திருப்பணி`` என்னும் கல்வெட்டாலும் அறியலாம்.
திருமடங்கள்: இவ்வூரில் முதற்குலோத்துங்கசோழன் காலத்தில் திருநீல விடங்கன் மடம், திருவீதி மடம், நாற்பத்தெண்ணாயிரவர் மடம் என்னும் பெயருள்ள திருமடங்கள் இருந்தன.
அறச்சாலைகள்: இவ்வூரில் விக்கிரமசோழன் காலத்தில் பெருந்திருவாட்டி அறச்சாலை, சங்கரதேவன் அறச்சாலை, முந்நூற்று அறுபத்து நால்வன் அறச்சாலை என்னும் அறச்சாலைகள் இருந்தன. இவற்றுள் பெருந்திருவாட்டி என்னும் அறச்சாலை, கங்கைகொண்டசோழபுரத்து கங்கை கொண்ட சோழன் திருக்கொற்றவாசலில் புறவாயில் சேனாபதியாக இருந்த இளங்காரிகுடையான் சங்கரன் அம்பலன்கோயில்.
கல்வெட்டு:
|