உசாத்தானம்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு பெரியநாயகி உடனுறை மந்திரபுரீசுவர்


மரம்: மா மரம்
குளம்: அநும, மார்க்கண்டேய, கவுதம தீர்த்தங்கள்

பதிகம்: நீரிடைத்து -3 -33 திருஞானசம்பந்தர்

முகவரி: கோவிலூர்
முத்துப்பேட்டை அஞ்சல்
திருத்துறைப்பூண்டி வட்டம்
திருவாரூர் மாவட்டம், 614704
தொபே. 04369 262014

இராமபிரான் இலங்கைக்குச் செல்வதன் முன் இங்கு மந்திர உபதேசம் பெற்ற காரணத்தால் இப்பெயர் பெற்றது. இதற்குக் கோயிலூர் என்னும் வேறு பெயரும் உண்டு. தில்லைப்பதியான் இங்கு விரும்பி எழுந்தருளியிருக்கும் காரணம் பற்றிக் கோயிலூர் என்னும் பெயர் எய்திற்று என்பர்.

அதற்கு ``நறைகமழ் தில்லையான் உறை விடம் திருவுசாத்தானமே`` என்னும் இவ்வூர் ஞானசம்பந்தப் பெருமானின் பதிக அடியைக்காட்டுவர்.

இத்தலம் முத்துப்பேட்டை தொடர்வண்டி நிலையத்திற்கு வடக்கே 2. கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இது காவிரித் தென்கரைத் தலங்களுள் 107ஆவது ஆகும்.

தஞ்சை, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை முதலிய பல ஊர்களிலிருந்து பேருந்துகளில் முத்துப்பேட்டை சென்று அங்கிருந்து மன்னார்குடி சாலையில் 2. கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.

இறைவரின் திருப்பெயர் - மந்திரபுரீசுவர். இவர் திருமேனி வெண்மை நிறம் பொருந்தியதாயிருக்கிறது. இறைவியின் திருப்பெயர்- பெரியநாயகி. இராமன், இலக்குமணன், சாம்புவான், சுக்கிரீவன், அநுமன் இவர்கள் வழிப்பட்டுப் பேறுபெற்றதலம். இச்செய்தி, ``நீரிடைத் துயின்றவன் தம்பி நீள் சாம்புவான்` எனத் தொடங்கும் இவ்வூரின் தேவாரத் திருப்பாட்டால் விளங்கும். இதற்குத் திருஞான சம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கின்றது. இத்தல புராணம் அச்சிடப் பெற்றுள்ளது. அது சூதவனப் புராணம் எனப் பெயர் பெறும். (சூதவனம் = மாமரக்காடு)

இவ்வூர்க் கோயிலில் சோழ மன்னர்களில் விக்கிரம சோழ தேவர், மூன்றாங்குலோத்துங்க சோழ தேவர், மூன்றாம் இராஜேந்திர சோழ தேவர் ஆகியோர் காலங்களிலும், பாண்டியரில் பெருமாள் சுந்தரபாண்டிய தேவர் காலத்திலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

திருவுசாத்தானம் என்பது இவ்வூரின் பழம் பெயராய் இருப்பினும், மக்கள் இதைக் கோயிலூர் என்றே வழங்குகின்றனர். இவ்வாறு வழங்கப் பெறுவதற்கு இவ்வூர்க் கல்வெட்டுக்களில் ஆதாரம் கிடைத்திலது. ஆனால் முதலாம் இராஜராஜ சோழரின் இருபத்தொன்பதாம் ஆண்டுவரையிற் பொறிக்கப்பெற்றுள்ள கல்வெட்டு ஒன்று தஞ்சை இராஜராஜேச்சரத்தில் இருக்கிறது. அதில் காணப்பெறும் ``இந்நாட்டு புறங்கரம்பை நாட்டுக் கோயிலூர் புதுக்குடியாகிய கோதண்டராமச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் இடக்கடவ திருப்பரிசாரகஞ்செய்யும் மாண் ஒன்று (South Indian Inscriptions, Volume II Part III Page 314) என்னும் பகுதியால் கி. பி. 1014 க்கு முன்னரே கோயிலூர் என்னும் பெயர் இவ்வுசாத்தானத்திற்கு வழங்கப்பெற்று வந்தது என்பது புலனாகிறது.

இறைவரின் திருப்பெயர்: இவ்வூர்க் கல்வெட்டுக்களில் சிவபெருமான் திருவுசாத்தானமுடைய நாயனார், திருவுசாத்தான முடையார் என்னும் பெயரால் அழைக்கப்பெறுகின்றார்.

இறைவியின் திருப்பெயர்: பெரியநாச்சியார் என்பதாகும். இச்செய்தி ``பிள்ளைப்புரோசைக்குடையார் சாக்கானமான கேரளகுலாசனி சதுர்ப்பேதி மங்கலத்து உடையார் திருவுசாத்தான முடைய நாயனார் கோயிலில் எழுந்தருளுவித்த திருக்காமக்கோட்ட முடைய பெரிய நாச்சியாருக்கு அமுதுபடிக்கும் சாத்துபடிக்கும் உடலாக`` என்னும் திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ தேவரின் இருபதாம் ஆண்டில் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுப்பகுதியால் அறியக்கிடக்கின்றது. இங்குக் குறிப்பிடப்பெற்ற பிள்ளைப் புரோசைக்குடையார் என்பவர் மூன்றாம் இராஜராஜ சோழனின் இரண்டாவது மகனாவார். எனவே அம்மனை இக்கோயிலில் எழுந்தருளுவித்தவர் பிள்ளை புரோசக்குடையார் ஆவர்.

இறைவன்கோயிலில் ஒருபகுதியைத் திருப்பணி செய்வித்தவர்: எழுபத்தொன்பது நாட்டுப்பதினெண் பூமிக்காரரான கற்பகப்பிள்ளையார் ஆவர். மேற்குறித்த கற்பகப் பிள்ளையாரேயன்றி ஆண்டார் பிரசன்ன தேவரும் சில திருப்பணிகளைப் புரிந்துள்ளனர்.
எழுந்தருளுவிக்கப்பெற்ற திருமேனிகளும் பிரதிமைகளும்: திரிபுனச்சக்கரவர்த்தி இராஜராஜ தேவரின் முப்பதாம் ஆட்சியாண்டில் கன்றாப்பூருடையார் இக்கோயில் மேலைத்திருநட மாளிகையில் சுப்பிரமணியப்பிள்ளையாரை எழுந்தருளுவித்துள்ளார். இம்மன்னனது எட்டாம் ஆட்சியாண்டில் பைய்யூர் நாட்டுப் பைய்யுழான் பிச்சன் பல்லவராயனான சோழிய பல்லவரையன் இக்கோயில் மேலைத் திருநடமாளிகையில் பல்லவனீஸ்வரரை எழுந்தருளுவித்த செய்தியை ஒரு கல்வெட்டுக் கூறுகின்றது.

இக்கோயில் மேலைத் திருநடமாளிகையில் களரிக்குடையான் பொன்னம்பலக்கூத்தனான இருமுடிச் சோழ பல்லவரையன் புவனாதி பதி நாச்சியாரையும், மும்முடி சோழபுரத்து வியாபாரிகளில் செம்பங்குடையான் திருச்சிற்றம்பலமுடையான் கூத்தாடுநாயனார், இக்கோயிலில் திருஞானம்பெற்ற பிள்ளையாரையும், திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜேந்திர சோழ தேவர் காலத்தும் எழுந்தளுவித் துள்ளனர்.

வைகாசித்திருநாள்: இக்கோயிலில் வைகாசி மாதத்தில் திருவிழா நடத்தப்பெற்று வந்தது. இதை இராஜேந்திர சோழதேவரின் பதினொன்றாம் ஆண்டுக் கல்வெட்டு உணர்த்துகின்றது.

இவ்வூரைத் தன்னகத்துக் கொண்டுள்ள வளநாடு: அருமொழித் தேவ வளநாடாகும். அது அளநாடு, ஆர்வலக் கூற்றம், இடையளநாடு, இங்காநாடு, மங்கலநாடு, நென்மலிநாடு, புலியூர்நாடு, புரங்கரம்பைநாடு, தக்களூர்நாடு, வலிவலக்கூற்றம், வெண்டாழை, வேளூர்க் கூற்றம் என்னும் பதினொரு பிரிவுகளை, உடையதாய் இருந்தது. முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் இவ்வளநாடு, இராஜேந்திர சோழவள நாடு என்னும் பெயர் எய்திற்று. அப்பெயரே பிற்காலத்தும் நிலவுவதாயிற்று. இக்காலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் அறந்தாங்கி வட்டம், பட்டுக்கோட்டை வட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், நாகப்பட்டினம் வட்டம் இவைகளில் பலபகுதிகளைக் கொண்டதாகும்.

இவ்வூரைத் தன்னகத்துக்கொண்ட நாடு: இவ்வூர், புறங்கரம்பை நாட்டுக்கு உட்பட்டது. பல்லவன் மாதேவி சதுர்வேதிமங்கலம், பெரும்பலமருதூர், களப்பாழ், சிங்களாந்தகச் சதுர்வேதிமங்கலம், கெழுவத்தூர், பனையூர், வன்கொற்றங்குடி, பெருவாழ்வு தந்த பெருமான் சதுர்வேதிமங்கலம், மும்முடிச்சோழபுரம் என்பன இந்நாட்டில் அடங்கிய சில ஊர்களாகும்.


கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி