எதிர்கொள்பாடி
இக்கோயிலின் காணொலி மூடுக / திறக்க
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535,
5370535. தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
இக்கோயிலின் படம் மூடுக / திறக்க
அருள்மிகு மலர்க்குழல் நாயகி உடனுறை ஐராவதேசுவரர்
குளம்: ஐராவத தீர்த்தம்
பதிகம்: மத்தயானை -7 -7 சுந்தரர்
முகவரி: திருமணஞ்சேரி அஞ்சல் குத்தாலம் மயிலாடுதுறை வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம், 609813 தொபே. 04364 235002
இது மேலைத் திருமணஞ்சேரி என்று இக்காலம் வழங்கப் பெறுகின்றது. மணக்கோலத்துடன் வந்த அன்பனான அரசகுமாரன் ஒருவனை இறைவர் மாமனாராக எதிர்கொண்டு அழைத்துச்சென்ற காரணத்தால் இப்பெயர் வந்தது என்பர். இத்தலத்தில் ஐராவதம் பூசித்துப் பேறுஎய்தியது.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் குற்றாலம் தொடர் வண்டி நிலையத்துக்கு வடக்கே சுமார் ஐந்து கி.மீ. தொலைவில் இருக்கிறது.
கல்வெட்டு:
(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1914 No. 24-28.)
இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவர் திருவெதிர் கொள்பாடி உடையார் என்னும் திருப்பெயரால் கூறப்பெற்றுள்ளார்.
திருக்கோயில் கட்டப்பட்ட காலமும் அதைக் கட்டியவரும்: இப்பொழுதுள்ள கற்கோயில் திரிபுவனச் சக்கரவர்த்திகள் குலோத்துங்க சோழ தேவர் காலத்திலோ அல்லது அவர்க்குச் சற்று முன்னரோ கட்டப்பட்டது என்று தெரிகின்றது. அதைக் கருங்கல்லால் கட்டியவன் கீரனூர் கிழவன் அரசுக் குடியான் திருநீலகண்டன் சேரமான் தோழன் ஆவன்.
இச்செய்தி, ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழதேவர்க்குயாண்டு மூன்றாவது விருதராஜ பயங்கர வளநாட்டு குறுக்கைநாட்டு உடையார் திருவெதிர் கொள்பாடி உடையார் தேவதானத்துக் காணியுடைய இன்னாயனார் கோயில், இத்திருக்கற்றளி செய்த கீரனூர் கிழவன் அரசுக்குடியார் திருநீலகண்டர் சேரமான் தோழன் இராவைச் சந்திக்கு வைத்த சந்தி விளக்கு ஒன்று. ஒன்றும் சந்திராதித்தவரை உபையஞ் செலுத்தக் கடவோம். இச்சிவப் பிராமணரோம் என்னும் கல்வெட்டால் புலப்படுகின்றது. (இக்கல்வெட்டு அர்த்தமண்டபத்தின் தென்புறச் சுவரில் இருக்கின்றது)
இக்கோயிலில் உள்ள திருக்காமக்கோட்டத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவியாரின் திருப்பெயர் பெருங்கருணைப் பிராட்டியார் என்பதாகும். இச்செய்தி, ``ஸ்வஸ்திஸ்ரீ கோச்சடையபன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் சுந்தரபாண்டிய தேவர்க்கு யாண்டு பதினொன்றாவது இந்நாயனார் தேவ ....... ஞாயிற்றுக்கிழமையும் பெற்ற அத்தத்து நாள் இக்கோயில் திருக்காமக்கோட்டமுடைய பெருங்கருணைப் பிராட்டியார் கொடையார் கோப்பெருஞ்சிங்கர்க்குப் பதினொன்றாவதும், பன்னிரண்டாவதும், பதின்மூன்றாவதும் முன்னின்று கடமை இறாதே ஓடிப்போதினில் இவர்க்கு இவர் நின்ற இடத்தே காட்டிக்குடுக்கையில்`` என்று தொடங்கும் கல்வெட்டுப் பகுதியால் அறியலாம். (இக்கல்வெட்டு மகா மண்டபம் அர்த்த மண்டபம் இவைகளின் தென்புறச் சுவர்களில் இருக்கின்றது.)
கோபுரத்தைக் கட்டியவர்: இக்கோயிலின் முன்னுள்ள மூன்றுநிலைக் கோபுரத்தைக் கட்டியவர் தொண்டைமண்டலத்துக் குன்றத்தூர் நாராயண முதலியார் மகன் வயிர முதலியாராவர். இச்செய்தியை, ``தொண்டை மண்டலம் குன்றத்தூர் நாராயண முதலியார் புத்திரன் வயிர முதலியார் திருக்கோபுரம்`` என்னும் அக்கோபுரக் கல்வெட்டால் அறியலாம். (இது கோபுர வாசலின் தென்பக்கத்தில் பொறிக்கப்பட்டுள்ளது)
எழுந்தருளுவிக்கப்பெற்ற திருமேனி: இத்திருக்கோயிலில் திருப்பள்ளியறை நாச்சியாரை எழுந்தருளுவித்தவர் கண்ணமங்கல முடையாரான வீமப் பிள்ளையின் பாரியாரும், மிழலை நாட்டுக் கோனாரான புலியூருடையார் ஆதித்த தேவரின் மகளாரும் ஆவர். இவ்வம்மையாரின் திருப்பெயர் கல்வெட்டில் சிதைந்து விட்டது.
ஆலாலசுந்தரன் குகை: மேற்குறித்த அம்மையார், இவ்வெதிர்கொள்பாடியில் கீழைத்திருவீதியில் பூண்டி உடையார் புகலி வேந்தர் இருந்த ஆலாலசுந்தரன் குகையை எடுத்துக்கட்டியுள்ளார். எனவே, இவ்வூரில் சுந்தரமூர்த்தி நாயனாரின் திருப்பெயரால் திருமடம் இருந்த செய்தி பெறப்படுகின்றது.
திருக்குளத்தில் உள்ள கல்வெட்டு: இக்கோயிலுக்கு எதிரில் உள்ள திருக்குளத்தின் கீழ்க்கரையில் நாட்டப்பட்டிருக்கும் ஒரு கல்லில் காணப்பெறும் `ஸ்வஸ்திஸ்ரீ ராஜராஜந்திருமங்கலத்து உடையார் விக்கிரமசோளீஸ்வரமுடையார் திருநாமத்துக்காணி` என்னும் கல்வெட்டால் இத்திருக்குளம் இராஜராஜன் திருமங்கலத்து விக்கிரம சோழீச்சரமுடையார்க்கு உரிமையுடையது என்று பெறப்படுகின்றது.
இந்த எதிர்கொள்பாடிக்கு வடக்கே,சுமார் மூன்று கி.மீ. தூரத்தில் திருமங்கலம் என்ற ஓர் ஊர் இருக்கின்றது. அவ்வூர்ச்சிவன் கோயில் கல்வெட்டுக்கள் அவ்வூரின் பெயர் இராஜராஜன் திருமங்கலம் என்றும், சிவபெருமானின் திருப்பெயர் விக்கிரமசோழீச்சரமுடையார் என்றும் அறிவிக்கின்றன. எனவே எதிர்கொள்பாடியில் உள்ள இத்திருக்குளம் திருமங்கலத்துச் சிவபெருமானுக்கு உரியது என்று பெறப்படுகின்றது.
அளிக்கப்பெற்ற நிவந்தங்கள்: இத்திருவெதிர்கொள்பாடி உடையார் திருக்கோயிலைக் கற்றளி செய்த கீரனூர் கிழவன் அரசுக் குடியான் திருநீலகண்டன் சேரமான் தோழன் இப்பெருமானுக்குச் சந்தி விளக்கு ஒன்றைக் குலோத்துங்கசோழதேவரின் மூன்றாம் ஆட்சி யாண்டில் வைத்துள்ளான். இக்கோயிலிற் பள்ளியறை நாச்சியாரை எழுந்தருளுவித்த கண்ணமங்கலம் வீமப்பிள்ளையின் மனைவியார், உதையங்குடியில் தாம் சீதனமாகப் பெற்று அநுபவித்து வந்ததும், `இரு கரையன்` என்று பேர் கூவப்பெற்றதுமான நிலத்தில் காலே சின்னத்தைப் பள்ளியறை நாச்சியார்க்குத் திருவமுதுக்காகக் கொடுத்துள்ளனர்.
இக்கோயில் மாடாபத்யமாய் அநுசங்காத்த பூண்டி உடையான் விசுவேசுரன், திருவேள்விக்குடி மணவாளநம்பி தேவதானம் திருவேள்விக்குடிநல்லூரில், கீழைக்குழலி சிங்கவிளாகம் என்னும் பெயர்கள் வாய்ந்த நிலங்களில் மூன்றேமுக்காலே நாலுமா அரைக் காணி நிலத்தை வாங்கி இந்நாயனார்க்குத் திருநாமத்துக் காணியாகக் கொடுத்துள்ளான். இது நிகழ்ந்தது சுந்தரபாண்டிய தேவர்க்குயாண்டு பதினொன்றாவது இடபநாயிற்று அபர பட்சத்து ஞாயிற்றுக் கிழமையும் சதுர்த்தி திதியும் பெற்ற ரோகிணி நாளாகும்.
இத்திருஎதிர்கொள்பாடிக் கோயிலுக்கு அளிக்கப் பட்டனவாகத் திருவேள்விக்குடிக் கல்வெட்டினால் அறியப்படும் நிவந்தங்கள்: இராசேந்திர சிங்கவளநாட்டுக் குறுக்கைநாட்டு இடையாற்று வெள்ளான் வெண்காடன் சாத்தனும், மந்தி மன்றனும், குப்பை கூத்தனும், அவனி மாதேவடிகளும், மணஞ்சேரி அழகனும், மணஞ்சேரிசோலைகேசனும் ஆகிய இவர்கள் `இடையாற்று மணம்பு` என்று பேர் கூவப்பட்ட நிலத்தில் நான்குமா முக்காணி நிலத்தை இறையிலியாகக் கொடுத்துள்ளனர்.
இராசேந்திரசிங்க வளநாட்டு நல்லாற்றூர் நாட்டு ஆலங் குடியில் `முடப்பந்தூறு` என்று பேர் கூவப்பட்ட நிலத்தின் வடக்கில் ஒன்றே இரண்டுமாவில் கீழ்க்கடை நிலம் ஆறுமா ஸ்ரீ பலி புறமாகக் கொடுக்கப்பட்டுள்ளது (புறம் - நிவந்தம்). இந்நிலத்தின் நான் கெல்லையாவது - கீழ் பாற்கெல்லை மூலங்குடி கண்ணாற்றுக்கு மேற்கும், தென்பாற்கெல்லை ஆலங்குடி நிலத்துக்குவடக்கும், மேல் பாற்கெல்லை ..... நிலத்துக்குக் கிழக்கும், வடபாற்கெல்லை குறுக்கை நாட்டுப் பிரமதேயம் முருகவேள் மங்கலத்துக்குத் தெற்கும் இவ் விசைந்த பெருநான்கெல்லையுள் அகப்பட்டதாகும். இராசேந்திரசிங்க வளநாட்டுக் குறுக்கை நாட்டுச் சோத்தமங்கலத்தில் ஏழுமாநிலம் இத்திருவெதிர்கொள்பாடி உடையார்க்குத் திருநந்தவனப் புறமாகப் பாண்டூர்க்கிழவன் குணதீரன் என்னும் வாணதேவன் முதலானோரால் கொடுக்கப்பட்டுள்ளது.
உய்யக்கொண்டார் வளநாட்டுப் பேராவூர் நாட்டுக் கூடலூரில் முதல் இராசராச சோழனின் இருபத்தேழாம் ஆண்டில் அவ்வூர்க்கிழவன் மாறன் செட்டியாலும் நிலங்கள் விடப் பட்டிருந்தன.
வரலாற்றுப் பகுதிகள்: இவ்வெதிர் கொள்பாடிக்கு உரியனவாய்த் திருவேள்விக்குடிக் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ள நிவந்தங்களில் பெரும்பாலான முதல் இராசராசசோழரின் இருபது, இருபத்து நான்கு, இருபத்தேழாம் ஆண்டுகளில் விடப்பட்டனவாகும். ஆனால் அவை அம்மன்னரின் மகனாகிய கங்கைகொண்ட சோழனின் ஆறாம் ஆட்சியாண்டில் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன. இங்ஙனம் ஒரு அரசன் காலத்தில் விடப்பட்ட நிவந்தங்களின் மூல ஓலை அல்லது செப்பேடுகளைப் பார்த்து, பின்வந்த அரசர்கள் கல்லிற் செதுக்கி வைப்பது வழக்கம் என்பதைத் திருப்பனந்தாள் செஞ்சடையப்பர் கோயிற் கல்வெட்டுக்களினாலும் காணலாம்.
`உடையார் ராஜேந்திரசோழதேவர்க்கேய் யாண்டு இரண்டாவது உடையார் ராஜராஜதேவர் தேவியார் ராஜராஜ மண்டலத்துத் திருஅரங்கன் அருமொழி` என்னும் திருவேள்விக்குடி கல்வெட்டுப் பகுதியால் முதலாம் இராசராச சோழர்க்கு அருமொழி என்பார் தேவியார் என்பதும், அவர் பாண்டியர் மகளார் என்பதும் அறியலாகும். இவ்வம்மையார் திருவெதிர்கொள்பாடி இறைவர்க்கு ஐம்பது பசுக்களை விட்டிருந்தனர்.
திருவெதிர்கொள்பாடி என்னும் ஊர் திருவெருதுபாடி என்று திரிந்து வழங்கிவந்ததை திருவேள்விக்குடிக் கல்வெட்டு அறிவிக்கின்றது. |