ஒற்றியூர் (திருவொற்றியூர்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு வடிவுடையம்மை உடனுறை படம்பக்கநாதர்


மரம்: மகிழ மரம்
குளம்: பிரம தீர்த்தம்

பதிகங்கள்: விடையவன் -3 -57 திருஞானசம்பந்தர்
வெள்ளத்தைச் -4 -45 திருநாவுக்கரசர்
ஓம்பினேன் -4 -46 திருநாவுக்கரசர்
செற்றுக்களிற்றுரி -4 -86 திருநாவுக்கரசர்
ஒற்றியூரு -5 -24 திருநாவுக்கரசர்
வண்டோங் -6 -45 திருநாவுக்கரசர்
அழுக்குமெய் -7 -54 சுந்தரர்
பாட்டும்பாடி -7 -91 சுந்தரர்
இருநில மடந்தை -11 -30 பட்டினத்தடிகள்

முகவரி: திருவொற்றியூர்க் கோயில்
சென்னை மாவட்டம் 600019
தொபே. 044 25733703

ஒரு காலத்தில் தலங்கள் உள்பட எல்லா ஊர்களுக்கும் இறை விதித்து அரசன் சுற்றோலை அனுப்பியபொழுது அவனுக்கும் ஓலை நாயகத்திற்கும் தெரியாதபடி வரி பிளந்து ``இவ்வாணை ஒற்றியூர் நீங்கலாகக் கொள்க`` என்று அவ்வோலையில் எழுதப்பட்டிருந்ததை வியந்து அவ்வூர்க்கு ஒற்றியூர் (விலக்கு அளிக்கப்பட்ட ஊர்) என்றும், பெருமானுக்கு எழுத்தறியும் பெருமான் என்றும் பெயர் ஆயிற்று. ``ஏட்டுவரியில் ஒற்றியூர் நீங்கல் என்ன எழுத்தறியும் நாட்ட மலரும் திருநுதலார்`` என்னும் பெரியபுராணச் செய்யுளும் காண்க.

இது திருவொற்றியூர் தொடர் வண்டி நிலையத்திற்குக் கிழக்கே 1. கி.மீ. தூரத்தில் இருக்கிறது. சென்னை மாநகரின் வடபகுதியாக விளங்குவது. பேருந்து வசதி உளது. இது தொண்டை நாட்டுத் தலங்களுள் ஒன்றாகும்.

இறைவரின் திருப்பெயர்:
(1) படம்பக்கநாதர்: உபமன்யு முனிவரிடத்துச் சிவதீட்சை பெற்றுத் தம்மை வழிபட்ட வாசுகியைத் இறைவர் தம் திருமேனியில் ஐக்யம் செய்து கொண்டமையால் இப்பெயர் பெற்றார். அப்பாம்பின் வடிவத்தை இறைவர் திருமேனியில் இன்றும் காணலாம்.
(2) தியாகேசர்: அரசனுக்குக் கொடுக்கும் பொருட்டுத் தம்மிடம் நிறைந்த அன்புடைய ஏலேலே சிங்கருக்கு மாணிக்கம் கொடுத்தருளினமையால் இப்பெயர் ஏற்பட்டது. இவைகளன்றி,
(3) ஆதிபுரீசுவரர்
(4) புற்றிடங்கொண்டார்
(5) எழுத்தறியும் பெருமான்
என்னும் வேறு பெயர்களும் உண்டு.

இவற்றுள் எழுத்தறியும் பெருமான் என்பதற்குக் காரணம் முன் கூறப்பட்டது.

இறைவியின் திருப்பெயர் - வடிவுடையம்மை. மரம் - மகிழ மரம். தீர்த்தம் - பிரம தீர்த்தம்.

துர்க்கையாரின் பெயர் - வட்டப் பாறையம்மை. மக்கள் இவரைச் சிறப்பாக வழிபட்டு வருகின்றனர். நந்திதேவர், திருமால், பிரமதேவர், வான்மீகி முனிவர், சந்திரன் முதலானோர் வழிபட்டுப் பேறு பெற்றனர்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் இங்கு எழுந்தருளி ஞாயிறுகிழாரின் மகளாய்த் தோன்றிய சங்கிலியாரை மகிழ மரத்தடியில் சத்தியஞ் செய்து கொடுத்து மணந்த வரலாற்றை முன்னிட்டு இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் மகிழடித் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. தைலவினைத்தொழில் மரபினராகிய கலிய நாயனார் அவதரித்து, கோயிலின் உள்ளும் புறம்பும் திருவிளக்கு எரித்து வரும் திருத்தொண்டை வறுமைக் காலத்தும் விடாது நடத்தி வந்தும், ஒருநாள் முட்டுப்பட அது காரணமாகத் தம் கழுத்தை அரிந்து கொள்ளத் தொடங்கிய பொழுது இறைவன் தடுத்து அருள்செய்ததும் இப்பதியாகும்.

``பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளையைப்போல் ஆரும் துறக்கை அரிது அரிது` என்று தாயுமானாரால் பாடப்பெற்ற பட்டினத்துப் பிள்ளையார் பேறு பெற்றதும் இப் பதியிலேதான். இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று; திருநாவுக்கரசர் பதிகங்கள் ஐந்து, சுந்தரர் பதிகம் இரண்டு ஆக எட்டுப் பதிகங்கள் இருக்கின்றன.


கல்வெட்டு:

இவ்வூர்க்கோயிலில் சோழ மன்னர்களுள் மதுரைகொண்ட கோப்பரகேசரி வர்மன், உத்தமசோழதேவன், முதலாம் இராஜராஜ சோழன், முதலாம் இராஜேந்திரசோழன், முதலாம் இராஜாதிராஜ சோழன், முதற் குலோத்துங்கசோழன், முதலானோர் காலங்களிலும், கங்க பல்லவமன்னர்களில் விஜய அபராஜித போத்தரையர், கோவிஜய நிருபதுங்கவர்மர், கோவிஜயகம்பவர்மர், முதலானோர் காலங்களிலும் பாண்டியர்களில் ஜடாவர்மனாகிய திரிபுவனச் சக்கரவர்த்தி சுந்தரபாண்டிய தேவன் காலத்தும், இராஷ்டிரகூட மன்னர்களில் காஞ்சி, தஞ்சை இவைகளைக்கொண்ட கன்னர தேவர் காலத்தும், விசயநகர வேந்தர்களில், சாயண்ண உடையார், தேவராய மகாராஜா குமாரர் புக்கண்ண உடையார், வீரப்பிரதாப தேவராய மகாராயர் முதலானோர் காலங்களிலும், சம்புவராய மன்னர்களில் சகல புவன சக்கரவர்த்தி ராஜ நாராயண சம்புவராயர் காலத்திலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1892, 104 - 110, year 1896, 399 - 405. year 1911 366 - 372, year 1912 98 - 246, year 1938 162 -167, year 1892 104.

See also Epigraphica Indica Vol. VII, page 148, year 1892 105, Vol. V page 106, year 1892 110.

See also South Indian Inscriptions, Vol. IV 553 year 1892 106, Vol. III No. 64 year 1892 107 - 8, Vol.
IV 555 - 556 year 1892, 109, Vol. IV 558 year 1896 399 - 405, Vol. V 1354 - 1360 year 1912 160, Vol. III 108 year 1912 164, Vol. III 105, year 1912 166, Vol. III 143 year 1912 245 Vol. III 145, year 1912 246 Vol. III 115.)

இறைவரின் திருப்பெயர்: இக்கோயில் கல்வெட்டுக்களில் இறைவர் மகாதேவபட்டாரர், திருவொற்றியூர் மகாதேவர், ஒற்றியூர் ஆழ்வார், திருவொற்றியூருடைய நாயனார், படம்பக்க நாயகதேவர், என்னும் பெயர்களால் கூறப்பெற்றுள்ளனர்.

இவற்றுள் படம்பக்க நாயக தேவர் என்னும் பெயர், திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீராஜாதி ராஜ தேவரின் ஒன்பதாம் ஆண்டுக் கல்வெட்டிலும், மகாதேவபட்டாரர் என்னும் பெயர் தெள்ளாறெறிந்த நந்திபோத்தரையர் கல்வெட்டிலும் காணப்படுகின்றன.

திருவிழா: இத்திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவும், ஆனித் திருவிழாவும், மாசி மகவிழாவும் மிகச்சிறப்பாக நடைபெற்று வந்தன. பங்குனி உத்திரத்திருவிழாவின் ஆறாம் நாளில் படம்பக்க நாயக தேவரைத் திருமகிழ மரத்தின்கீழ் திருவோலக்கஞ் செய்தருளுவித்து ஆளுடைய நம்பியின் ஸ்ரீபுராணத்தைக் கேட்டருளச்செய்வது வழக்கம்.

ஆனித்திருவிழாவின் ஆறாம் நாளில் மூன்றாங் குலோத்துங்க சோழன் இக்கோயிலிலுள்ள இராஜராஜன் திருமண்டபத்தில் திருவோலக்கஞ் செய்தருளி விநோதம் கொண்டருளினான் என்று அம் மன்னனது 19 -ஆம் ஆண்டுக் கல்வெட்டில் குறிப்பிடப் பெற்றுள்ளது. மாசி மகவிழாவின் பொருட்டு சிறுவப்பேடாகிய மும்முடிச் சோழ நல்லூர்ப் புறவுவரித்திணைக் களத்துக் கணக்காளன் நிவந்தம் அளித்திருந்தான். இந்நிவந்தம் அளிக்கப்பெற்ற காலம் மூன்றாங் குலோத்துங்க சோழ தேவரின் முப்பத்தொன்றாவது ஆண்டாகும்.
மண்டபங்கள்: இக்கோயிலில் இராஜராஜ மண்டபம் என்னும் பெயருடைய மண்டபம் ஒன்று இருந்தது. அம்மண்டபத்தில் இருந்து கோயில் கருமங்களை ஆராய்ந்து வந்தனர்.

குலோத்துங்கசோழன் மண்டபம்: இதுவும் கோயிலுக்குள் இருந்த ஒரு மண்டபமாகும். இதில் நாடோறும் ஐம்பது அடியார்களுக்கு அன்னமளிக்கப்பெற்று வந்தது. இதன் பொருட்டுப் பையூர்க் கோட்டத்து அரசூருக்கு அருகில் உள்ள ஊராகிய பவனம்பாக்கத்திற்கு எழுத்தறிவார் நல்லூர் என்னும் பெயரை இட்டு அதில் ஒரு பகுதியை அன்னம் அளிப்பதற்கு நிவந்தமாக முதற்குலோத்துங்க சோழன் அளித்திருந்தான். இந்த ஏற்பாட்டை முதற்குலோத்துங்க சோழன் தன் தலைநகராகிய கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து செய்தருளினான்.

வியாகரணதான வியாக்கியான மண்டபம்: இதுவும் கோயிலுக்குள் இருந்த மண்டபமாகும். இது சித்தரசன் பொருட்டு துர்க்கையாண்டி நாயக்கனால் கட்டப் பெற்றதாகும். இம்மண்டபத்திற்கும் மற்றுமுள்ள திருப்பணிகளுக்கும் உடலாக ஒற்றியூர் வடகரை, தென்கரையில் பொன்வரி வகுப்பால் உள்ள மாடையைப் புழல்கோட்டத்து நாட்டவர் அளித்துள்ளனர்.

மண்ணைக்கொண்ட சோழன்: இப்பெயருள்ள மண்டபம் ஒன்று இக்கோயிலில் இருந்தது. வளவன் மூவேந்தவேளார், விக்கிரமசிங்க மூவேந்த வேளார் என்னும் இரண்டு அதிகாரிகள் இம்மண்டபத்திலிருந்து கோயில் சம்பந்தமான ஒரு வழக்கை விசாரித்ததாக முதலாம் இராஜாதிராஜதேவரின் 26-ஆம் ஆண்டுக் கல்வெட்டு அறிவிக்கின்றது.

திருமடங்கள்: இவ்வூரில் சதுரானன பண்டிதற்குத் திருமடம் ஒன்று இருந்தது. அதற்குத் திருமயானமடம் என்று பெயர் வைக்கப்பெற்றிருந்தது. இச்செய்தி முதலாம் இராஜேந்திர சோழதேவரின் 31-ஆம் ஆண்டுக் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளது.

குலோத்துங்கசோழன் மடம்: இது கோயிலுக்குள் இருந்தது. இச்செய்தி முதற்குலோத்துங்க சோழன் கல்வெட்டில் கூறப்பெற்றுள்ளது.

இராஜேந்திரசோழன் மடம்: ஆரிய தேசத்து மேகலாபுரத்து பிராமணி நாகலவ்வைச் சாநியான ஆரிய அம்மையாரால் கட்டப்பெற்றது. இம்மடத்திற்கு மடப்புறமாக இவ்வம்மையார் நிலம் வாங்கி விட்டிருந்தனர்.

இக்கோயிலின் வெளிப்பிராகாரத்துத் திருமதிலைக் கட்டியவர் ஆதிமங்கலத்து ஆட்கொண்ட நாயகனான சேதிராய தேவராவர். இது கட்டிமுடிந்தது மூன்றாங் குலோத்துங்க சோழதேவர் காலத்தில் ஆகும்.

விசயநகர பரம்பரையைச் சேர்ந்த ஹரிஹரர் II - காலத்துக் கல்வெட்டு, அங்கராயன் மடம் ஒன்றைக் குறிப்பிடுகிறது.

அளவுகருவி: கோயிலுக்கு நெய்கொண்டு வந்து அளந்தவர்கள் அருமொழித்தேவன் நாழியால் அளந்து வந்தனர். எனவே இக்கோயிலில் வழங்கி வந்த அளவு கருவி அருமொழித்தேவன் நாழி என்னும் பெயர் பெற்றிருந்தது.

இறைவர் திருப்பெயரை இட்டு வழங்கல்: படம்பக்க நாயகர் என்னும் இறைவரது திருப்பெயரை, கோயில் நாயகம் செய்துவந்த ஒருவனுக்கு படம்பக்க நாயக பட்டன் எனவும், திரிபுவன சுந்தரத்தெரு மன்றாடிகளில் ஒருவனுக்குப் படம்பக்கன் எனவும் இட்டு அழைக்கப்பெற்றிருந்தனர். எழுத்தறிவார் என்னும் திருப்பெயரை, பையூர்க் கோட்டத்தில் உள்ள அரசூர்க்கு அருகில் இருக்கும் பவனம் பாக்கத்திற்கு எழுத்தறிவார் நல்லூர் என்று வைக்கப்பெற்றிருந்தது. விசயநகர வேந்தனாகிய வீரப்பிரதாப தேவராயர் காலத்தில் அதாவது சகம் 1346 - இல் புழல்நாட்டு மணலி என்னும் ஊரினர் ஒற்றியூருடைய நாயனார்க்கு உப்புத்தட்டு ஒன்றைக் கொடுத்திருந்தனர். அதற்குப் படம்பக்க நாயகப் பேரளம் என்னும் பெயர் வைக்கப்பெற்றிருந்தது.

அரசர்களின் சிறப்புப்பெயர்கள்: கோப்பரகேசரி வர்மராகிய உத்தமசோழதேவர், சென்னி எறிபடைச்சோழன், உத்தமசோழன் எனவும் முதற்குலோத்துங்க சோழன் ஜெயதரன் எனவும், மூன்றாங்குலோத்துங்க சோழதேவர், வீரராஜேந்திர சோழதேவர், உலகுய்யவந்த பெருமாள், கோனேரின்மை கொண்டான் எனவும் இக்கோயில் கல்வெட்டுகளில் குறிக்கப் பெற்றுள்ளனர்.

ஒற்றியூரைத் தன்னகத்துக்கொண்டுள்ள நாடு: இவ்வூர், கங்கைகொண்ட சோழன் காலம் முதல், முதற் குலோத்துங்க சோழன் காலம் வரையில் சயங்கொண்ட சோழ மண்டலத்துப் புழற்கோட்டத்துப் புழல் நாட்டில் உள்ள ஊர்களில் ஒன்றாய் இருந்தது. முதற்குலோத்துங்கன் காலத்தில் சயங்கொண்ட சோழமண்டலத்து, இராஜேந்திர சோழவள நாட்டுப் புழல்நாட்டு ஊர்களில் ஒன்றாய் விளங்கிற்று.

பிறசெய்திகள்: முதலாம் இராஜேந்திரனின் பிறந்த நட்சத்திரம் மார்கழித் திருவாதிரையாகும். இச்செய்தி அம்மன்னனது 31-ஆம் ஆண்டுக் கல்வெட்டில் காணப்பெறும். ``திருவொற்றியூருடைய மகா தேவர்க்கு ராஜேந்திரசோழர் திருநாள் மார்கழித் திருவாதிரை நாளன்று நெய்யாடியருளவேண்டு மிடத்து திருவொற்றியூர் திருமயான மடமுடைய சதுரானன பண்டிதன் தேவர் பண்டாரத்து வைத்தகாசு நூற்றைம்பது`` கல்வெட்டுப் பகுதியால் அறியக்கிடக்கின்றது.

இக்கோயிலில் வீரராஜேந்திரன் திருப்பள்ளியெழுச்சி, திரிபுவன வீரதேவன் சந்தி இவைகளுக்கு நிவந்தங்கள் அளிக்கப் பெற்றிருந்தன. இவற்றுள் திரிபுவன வீரதேவன் என்பது மூன்றாங் குலோத்துங்க சோழனுக்குரிய சிறப்புப் பெயராகும். அவன் பேரால் ஏற்படுத்தப்பெற்ற இச்சந்திக்கு குலோத்துங்க சோழவள நாடான புலியூர்க் கோட்டத்தில் சிவபாத சேகரநல்லூராகிய குளப்பாக்கத்தில் நூறுவேலி நிலம் விடப்பெற்றிருந்தது. இவ்வூரில் சாலியர்கள் வசித்து வந்த தெருக்கள், ஜெயசிங்ககுல காலப்பெருந்தெரு என்றும், இராஜராஜப்பெருந்தெரு என்றும், மன்றாடிகள் வசித்துவந்த தெருக்கள் திரிபுவனச் சுந்தரச்சேரி, திரிபுவனநகரத்தெரு என்னும் பெயர்களைப் பெற்றிருந்தன. மன்றாடிகள் என்பார் திருவிளக்குக் குடிகளாவார். இவர்கள் நுந்தா விளக்கினுக்கு விடப்பெறும் சாவாமூவாப் பசுக்களையோ அல்லது ஆடுகளையோபெற்று, உரிய திட்டப்படி, தவறாது நெய் அளப்போராவர். இக்கோயிலில் உத்தம சோழதேவர் காலத்தில் கவரிப்பிணாக்கள் இருபத்து நால்வரும், காளம் ஊதுபவர் எண்மரும் இருந்தனர்.

இக்கோயிலிலுள்ள கிரந்தக் கல்வெட்டுக்கள், ஒற்றியூரை ஆதிபுரி என்றும், இறைவரை, ஆதிபுரீஸ்வரர் என்றும் கூறுகின்றன. கங்க பல்லவவம்சத்து விஜயகம்பவர்மனின் 19ஆம் ஆண்டுக் கல்வெட்டு, ஒற்றியூரில் நிரஞ்சனீஸ்வரத்து மகாதேவருக்கு நிரஞ்சன குரவரால் கோயில் கட்டப்பெற்ற செய்தியை உணர்த்துகின்றது. சோழ நாட்டுத் தென்கரை நாட்டு, பொய்யில் கூற்றத்து சிறுகுளத்தூருடையான் மாறன் செம்பியன் சோழியவரையன், சீட்புலியையெறிந்து நெல்லூரை அழித்துத் திரும்பியவன் திருஒற்றியூர் மகாதேவர்க்குத் திருநுந்தா விளக்கு எரிப்பதன் பொருட்டு 96 சாவாமூவாப் பேராடுகளை அளித்தான் என்பதை மதுரை கொண்ட கோப்பரகேசரிவர்மனின் முப்பத்து நான்காவது ஆண்டுக் கல்வெட்டுத் தெரிவிக்கின்றது.

 
 
சிற்பி சிற்பி