கச்சிஏகம்பம் (காஞ்சிபுரம்)
இக்கோயிலின் காணொலி மூடுக / திறக்க
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535,
5370535. தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
இக்கோயிலின் படம் மூடுக / திறக்க
அருள்மிகு ஏலவார்குழலி உடனுறை தழுவக்குழைந்தநாதர்
மரம்: மா மரம் குளம்: கம்பைமாநதி, சிவகங்கை
பதிகங்கள்: வெந்தவெண்பொடி -1 -133 திருஞானசம்பந்தர்
மறையானை -2 -12 திருஞானசம்பந்தர்
கருவார்கச்சி -3 -41 திருஞானசம்பந்தர்
பாயுமால் -3 -114 திருஞானசம்பந்தர்
கரவாடும் வன் -4 -7 திருநாவுக்கரசர்
நம்பனை நகரமூன் -4 -44 திருநாவுக்கரசர்
ஓதுவித்தாய் -4 -99 திருநாவுக்கரசர்
பண்டுசெய்த -5 -47 திருநாவுக்கரசர்
கூற்றுவன் -6 -64 திருநாவுக்கரசர்
உரித்தவன் -6 -65 திருநாவுக்கரசர்
ஆலந்தான் -7 -61 சுந்தரர்
மெய்த்தொண்டர் -11 -29 பட்டினத்தடிகள்
முகவரி: காஞ்சிபுரம் வட்டம் காஞ்சிபுரம் மாவட்டம், 631502 தொபே. 044 27222084
மாமரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ளமையால் இப் பெயர்பெற்றது ஆம்ரம் என்பது வடசொல், அது தமிழில் வழங்கும்போது, தமிழ் இலக்கணத்திற்கு ஒத்தவாறு மகரத்துக்கு இனமாகிய பகரத்தைப்பெற்று ஆம்பரம் என்று ஆயிற்று. மகரத்தின் பின் ரகரம் தமிழில் மயங்காது. ஆம்ரம் என்பது ஏகமென்னும் சொல்லொடு புணர்ந்து ஏகாம்பரம் என்று (வடமொழி விதிப் படி) ஆயிற்று. ஏகாம்பரம் என்பது ஏகம்பம் என்றும், கம்பம் என்றும் மருவிற்று. கள்ளக்கம்பனை, நல்லகம்பனை என்பவைகளில் காண்க.
காஞ்சிபுரம் தொடர்வண்டி நிலையத்திற்கு மேற்கே சுமார் 2-5.கி.மீ. தூரத்தில் இருக்கின்றது.சென்னை, செங்கற்பட்டு, திண்டிவனம், அரக்கோணம், வேலூர் முதலிய பல நகரங்களிலிருந்தும் காஞ்சிபுரம் வரப் பேருந்துகள் உள்ளன.
இறைவரின் திருப்பெயர்: தழுவக்குழைந்தநாதர். உலகம் உய்ய ஆகமவழியின்படி இறைவரைப் பூசிக்க இறைவியார் கயிலையினின்று காஞ்சிபுரத்திற்கு எழுந்தருளினார். அங்கே கம்பையாற்றின் கரையில் திருவருளால் முளைத்து எழுந்த சிவலிங்கத் திருவுருவைக் கண்டு பூசித்தார். அதுபொழுது கம்பை மாநதி பெருக்கெடுத்து வந்தது. அம்மையார் பயந்து பெருமானை இறுகத் தழுவிக்கொண்டார். அது பொழுது இறைவர் திருமேனி குழைந்து வளைத்தழும்பும் முலைத் தழும்பும் தோன்றக் காட்சியருளினார். அதுகாரணம்பற்றித் தழுவக் குழைந்தநாதர் என்னும் பெயர் உண்டாயிற்று. திருவேகம்பர் என்ற வேறு பெயரும் உண்டு. இறைவியாரின் திருப்பெயர்: ஏலவார்குழலி, காமாட்சியம்மை. விநாயகர்பெயர்: விகடசக்கர விநாயகர்.
இவர் தெற்குத் திருவாசலில், ஆயிரக்கால் மண்டபத்தின் முன் புறத்தில் எழுந்தருளியிருக்கின்றார்.
தலப்பெருமை: இது முத்திதரும் தலங்கள் ஏழனுள் முதன்மை பெற்றது. சூளுறவு பிழைத்ததின் காரணமாகத், திருவொற்றியூர் எல்லையைத் தாண்டிய அளவில் இருகண்பார்வைகளும் மறையப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனார்க்கு இடக்கண் பார்வையை இறைவர் கொடுத்தருளிய தலம். கே்ஷத்திர வெண்பாக்களைப் பாடிய ஐயடிகள் காடவர்கோன் நாயனார், திருக்குறிப்புத்தொண்ட நாயனார், சாக்கிய நாயனார், இவர்கள் அருள்பெற்ற பதி. இதில் பிர்மா, விஷ்ணு, உருத்திரர் என்னும் மூவரும் பூசித்த இலிங்கங்கள் இருக்கின்றன. அவைகள் முறையே வெள்ளக்கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம் என்னும் பெயர்களுடன் விளங்குகின்றன.
இக்கச்சிஏகம்பத்திற்கு மாத்திரம் பன்னிரண்டு பதிகங்கள் இருக்கின்றன. இவை மூவராலும் பாடப் பெற்றவை. இவ்வூரில் (காஞ்சிபுரத்தில்) கச்சியேகம்பத்துடன் கச்சி மேற்றளி, கச்சிஓணகாந்தன்றளி, கச்சிநெறிக்காரைக்காடு, கச்சியநேகதங்காவதம் என்னும் தேவாரம் பெற்ற கோயில்களும் கச்சி மயானம் என்னும் ஒரு வைப்புத்தலமும் ஆக ஆறுகோயில்கள் இருக்கின்றன. இவைகளுள் கச்சிமயானம், திருக்கச்சி ஏகம்பத்தினுள் கொடி மரத்தின் முன்னுள்ளது.
இக்கோயிலின் வெளிமதில் கி.பி.1799 இல் ஹாச்ஸன் என்பவரால் புதுப்பிக்கப்பட்டது. அதில் புத்தர் மகாநிர்வாணம் முதலிய உருவங்கள் எல்லாம் சேர்ந்துவிட்டன. இச்சிலையில் சில பகுதியில் மகேந்திரன் காலத்து எழுத்துக்கள் சில இருக்கின்றன. சில இடங்களில் விஜயநகரச் சின்னங்கள் (வராகமும் கட்கமும்) இருக்கின்றன. முன்மண்டபத்தில் இருக்கும் ஒரு சிலை கரிகாலன் உருவம் என்பர். அதற்குத் தாடி இருக்கிறது. சுவாமிசந்நிதி கிழக்கு. ஆனால், கோபுரவாயில் தெற்கே இருக்கின்றது.
திருவாவடுதுறை ஆதீனத்து மாதவச்சிவஞானயோகிகள் அருளிய காஞ்சிப்புராணமும், கச்சியப்பமுனிவர் அருளியதும், அதனுடைய இரண்டாங்காண்டமென்று சொல்லப்படுவதுமாகிய காஞ்சிப்புராணமும், கச்சியப்பமுனிவர் இயற்றிய கச்சி ஆனந் தருத்திரேசர் வண்டுவிடுதூதும், இரட்டையர்கள் பாடிய ஏகாம்பர நாதர் உலாவும், பட்டினத்துப்பிள்ளையார் அருளிய திருவேகம்ப முடையார் திருவந்தாதியும், மாதவச்சிவஞான யோகிகள் அருளிய கச்சி ஆனந்தருத்திரேசர் பதிகம், திருவேகம்பர் ஆனந்தக்களிப்பு, திரு ஏகம்பர் (யமக) அந்தாதி ஆகிய இவைகளும் இத்தலத்தைப்பற்றிய நூல்களாகும்.
கல்வெட்டு:
1. திருக்கோயிலுள் முன்னால் இருப்பதும் மேற்குப் பார்வையுள்ளதும் மயானேசுவரர் ஆலயம். அதில் மட்டும் பதினைந்து கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டன. அவைகளில் காகதீயகணபதி (கி.பி.1250) சோழர்களில் உத்தமன், இராசராசன், இராசாதிராசன், குலோத்துங்கன், இராசராசன்ருருபிறரில் விஜயகண்ட கோபாலன், விஜயநகரசதாசிவன் முதலியோர்களின் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. உத்தம சோழன் கல்வெட்டில் வீரராணியார் அவன் தேவி எனக் கூறுகிறது.
2. நடராசர் மண்டபத்தில் புக்கராயன் (கி.பி. 1406) கல்வெட்டு மூன்று இருக்கின்றன.
3. ஆயிரக்கால் மண்டபத்தில் வடமொழி சுலோகம் ஒன்று செதுக்கப்பட்டிருக்கிறது.
4. சபாநாயகர் கோயிலில் உள்ள கல்வெட்டு, பாண்டிய புவனேஸ்வரன் சமரகோலாகலன் (கி.பி.1469) ஏகம்பர் காமாட்சியம்மன் ஆலயங்களுக்குப் பாண்டிநாட்டு ஊர்கள் இரண்டு கொடுத்தான் எனத் தெரிவிக்கிறது. காகதீயகணபதி (கி.பி.1250) காலத்தில் அவர் மந்திரி சாமந்தபோஜன் ஓர் ஊரைத் தானம் செய்தான். மற்றும் விஜயகண்ட கோபாலனது கல்வெட்டு ஒன்றில் அவன் அரசுபெற்றது கி.பி.1250 எனத் தெரிகிறது.
5. ராயர்மண்டபத்தில் கம்பண உடையார் ஆனந்த ஆண்டுக் கல்வெட்டு இருக்கிறது.
6. காமாட்சி அம்மன் கோயில் அச்சுதராயன் (கி.பி.1534) படையெடுத்து வெற்றியடைந்து கோயிலுக்கு எட்டு ஊர்கள் கொடுத்த செய்தி கண்டிருக்கிறது.
7. கோபுரம்: விஜயநகரமல்லிகார்ச்சுனனுடைய (கி.பி.1456) கல்வெட்டு இருக்கிறது.
ஏகாம்பரநாதருக்கும், நாச்சியார் காமாட்சிக்கும் தேவை காவலன், திருவணைகாவலன், வேதியர்காவலன், வீரகஞ்சுகன், புவனேகவீரன், சமரகோலாகலன் சகாப்தம் 1391 இல் தன்பெயரால் புவனேகவீரன் சந்தியாக ஒருசந்தி பூசைக்கும், மாதம் பிறந்த நட்சத்திரத்திற்கும் விசேட பூசை நடக்கும்படிக்கு அமுதுபடி, கறியமுது, இலையமுது, அடைக்காயமுது, திருப்பரிவட்டம், சாத்துப்படி திருவிளக்கு உட்பட வேண்டும் நிவந்தங்களுக்குப் பாண்டி மண்டலத்து வீரநாரயண வளநாட்டுப் புவனேக வீரநல்லூரையும் சமரகோலாகல நல்லூரையும் விட்டுள்ளான்.
சகயாண்டு 1187 இல் திருஏகம்பமுடையார் திருமுன்பு திருநொந்தாவிளக்கு ஒன்றைச் சந்திர சூரியர் உள்ளவரை எரிப் பதற்குப் புலியூர்க்கோட்டத்து வல்லங்கிழான் பள்ளி கொண்டான் கோயிற் பிள்ளைவைத்துள்ளான். சகயாண்டு 1172 இல் காஞ்சிபுரத்து உடையார் திருஏகம்பமுடைய நாயனார்க்கு ஜயங்கொண்ட சோழ மண்டலத்துத் தாமர்க்கோட்டத்துக் களத்தூரைத் திருவிடையாட்டம் நீக்கி, ஊர் அடங்கலும் கணபதிதேவன் சந்திக்குத் திருவமுதுபடிகறியமுது உள்ளிட்ட வியஞ்சனங்களுக்கும் சாத்தியருளத் திருப்பரி வட்டங் களுக்கும் திமேற்பூச்சு கற்பூரம் பனிநீர் உள்ளிட்டவற்றிற்கும் இச்சந்தி பூசிக்கும் நம்பிமார்க்கும், திருப்பரிசாரகர்க்கும், திருமஞ்சனம் எடுப் பார்க்கும், திருப்பள்ளித்தாமம் தொடுப்பார்க்கும் மற்றும் இச்சந்திக்கு வேண்டும் நிவந்தங்களுக்குக் கொடுக்கப்பட்ட செய்தியை ஒரு கல்வெட்டு அறிவிக்கின்றது. இராஜராஜதேவர்க்குயாண்டு இரண்டா வதில் சளுக்கியநாராயணன் மனுமசித்தரசன் திருஏகம்பமுடையார்க்குத் தேவதானமாக மாற்பட மடுவில் பொன்மேந்தகம்பன் வளாகம் என்னும் பெயருள்ள ஆயிரம் குழி நிலத்தை விட்டுள்ளான். இராஜராஜதேவர்க்குயாண்டு பதினைந்தில் ஏகம்பமுடையார்க்குத் திருநுந்தாவிளக்குக்குப் பால்பசு பத்து, சினைப்பசுப் பன்னிரண்டு, வறள்பசு ஆறு, கிடாரி நான்கு, ரிஷபம் ஒன்று ஆக உருக்கள் முப்பத்து மூன்று விடப்பட்டுள்ளன.
மூன்றாங்குலோத்துங்க சோழனின் இருபத் தேழாம் ஆட்சியாண்டில் சயங்கொண்டசோழ மண்டலத்து ஷ்ரீமத் குவளாலபுர பரமேஸ்வரன், கங்ககுலோற்பவன், சீயகங்கன் அமரா பரணனான திருஏகம்பமுடையான் ஏகம்ப முடையார்க்கு நொந்தா விளக்கு ஒன்றினுக்கு முப்பத்திரண்டு பசுவைக் கொடுத்துள்ளான்.
(See the South Indian Inscriptions, Volume IV)
கச்சி ஏகாம்பரநாதர் கோயிலின் கீழக்கோபுரத்திற்கு அருகில் ஆலாலசுந்தரன் மடம் ஒன்று இருந்தது. புதுக்கோடு மருந்தவள்ளலின் சிஷ்யனாகிய திருநாவலூர், கூடலுடையான் தழுவக்குழைந்தான் நிலம் அளித்திருந்தான். அம்மடத்தைப்பற்றி, சகம் 1403-இல் குறிப்பிடப் பெற்றுள்ளது. இதுவன்றி ஈசானதேவர் மடம் ஒன்றும் இருந்தது.
பதினாறு கால் சித்திரமண்டபத்திற்கு எதிரில் உள்ள தாண்டவதேவர் கோயிலும், திரயம்பகேஸ்வரர் கோயிலும் அரசனது மகளாகிய திரயம்பக்க தேவியால் கட்டப்பெற்றதாகும். சகம் 1378-இல் ஏற்பட்ட மல்லிகார்ச்சுன தேவ மகாராயர் கல்வெட்டு, புதுப்பாக்கம், வேளையூர் இவை இரண்டு ஊர்களும் திருவேகம்ப முடைய நாயனார்க்கும், காமாட்சி தேவியார்க்கும் முறையே கொடுக்கப்பட்டன என்பதைக் குறிக்கின்றது. |