கச்சூர்ஆலக்கோயில்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு உமையம்மை உடனுறை விருந்திட்டநாதர்


மரம்:ஆலமரம்
குளம்: கூர்ம தீர்த்தம்

பதிகம்: முதுவாய்ஓரி -7 -41 சுந்தரர்

முகவரி: திருக்கச்சூர் அஞ்சல்
சிங்கப்பெருமாள் கோயில்
காஞ்சிபுரம் மாவட்டம், 603204
தொபே. 044 27463514

திருமால் அமுதம்வேண்டி ஆமையாயிருந்து பூசித்த காரணத்தாலும், ஆலமரம் இத்தலத்துக்குரிய விருட்சமாக இருத்தலாலும், இப்பெயர் பெற்றது. (கச்சபம் - ஆமை) கச்சபஊர் - கச்சூர் என்றாயது போலும் என்பர் கயப்பாக்கம் திரு. சதாசிவச் செட்டியாரவர்கள்.

செங்கற்பட்டுக்கு வடக்கேயுள்ள சிங்கப் பெருமாள் கோயில் தொடர்வண்டி நிலையத்துக்கு வடமேற்கே இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது.

தொண்டை நாட்டில் உள்ள தியாகராஜர் சந்நிதிகளில் இவ்வூர் ஒன்று. சுந்தரமூர்த்தி நாயனார் திருக்கழுக்குன்றத்தினின்று, இங்கு உச்சியம்போதையில் எழுந்தருளினார்; அவருடைய பரிசனங்கள் வரக் காலந்தாழ்த்தமையால் சுந்தரமூர்த்தி நாயனார் பசியால் வருந்தினார்.

பரமசிவன் பிராமண வடிவங் கொண்டு எழுந்தருளி அந்தணர்கள் வீடு தோறும் சென்று, சோறு இரந்து வந்து இட்டுப் பசியாற்றி மறைந்தருளினார். அதுபொழுது சுந்தரமூர்த்தி நாயனார் மனங் குழைந்து பாடியருளிய தலம். திருக்கோயிலுக்கு மேற்கே மலையடியில் அமுதம் (மருந்து) அளித்த மருந்தீசர் எழுந்தருளியிருக்கின்றார். மலைமேல் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு இரந்து இட்ட ஈசர் வீற்றிருக்கின்றார்.கல்வெட்டு:

(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1909-261-319.)

இக்கோயிலில், சோழமன்னர்களில் முதற்குலோத்துங்க சோழன், திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜாதி ராஜதேவன், திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவர், மூன்றாங் குலோத்துங்கசோழன் இவர்கள் காலங்களிலும் பாண்டிய மன்னர்களில் ஜடாவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி சுந்தர பாண்டியன், மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி சுந்தரபாண்டியன் மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி வீரபாண்டியன், இவர்கள் காலங்களிலும்; விஜயநகரவேந்தரில் அரியண்ண உடையார் மகன் விருப்பண்ண உடையார் காலத்திலும்; சாளுவ மன்னரில் நரசிங்கராயர் காலத்திலும் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களில் மூன்றாங்குலோத்துங்க சோழன் கல்வெட்டுக்கள்தான் மிகுதியாக உள்ளன.

இக்கல்வெட்டுக்களில் இறைவர் திருஆலக்கோயில் உடையார் என்னும் பெயரால் குறிக்கப்பட்டுள்ளார். இவ்வூர் ஜெயங்கொண்ட சோழமண்டலத்துக் களத்தூர்க் கோட்டத்து, செங்குன்ற நாட்டுத் திருக்கச்சூர் என்று குறிக்கப்பட்டுள்ளது. திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவரின் 14 ஆம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டு, திருக்கச்சூர்க்கு நித்தவிநோத நல்லூர் என்னும் வேறு பெயரைக் குறிப்பிடுகின்றது.

மூன்றாங் குலோத்துங்கசோழ தேவரது கல்வெட்டு, இத்திருக் கோயிலில் திருநாவுக்கரசு தேவரை எழுந்தருளுவித்த செய்தியைக் குறிப்பிடுகின்றது. அவர் எழுந்தருளுவிக்கப்பட்ட ஆண்டு, கல்வெட்டில் சிதைந்துவிட்டது.

மூன்றாங் குலோத்துங்க சோழனின் 35 ஆம் ஆண்டில் நந்திவர்மன் கட்டளைப்படி, திருஆலக்கோயில் உடைய இறைவர்க்கு அறுபத்து ஏழு வேலி நிலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டானின் முப்பத்தாறாம் ஆண்டில் செங்குன்றமாகிய அருமொழிதேவ நல்லூரிலும், நிலங்கள் விடப்பட்டுள்ளன. ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டு, தேவாரத்து ஈஸ்வர முடையார் திருக்கோயிலையும், மணற்குடி என்னும் ஊர், திருக்கச்சூர் ஆலக்கோயில் உடையார்க்குத் தேவதானமான ஊர் என்பதையும், குறிப்பிடுகின்றது.

சாத்தனார் என்பவர் முத்தமிழ் ஆசிரியர் என்றும் அவரது தமிழ்ப்புலமை பெரிதும் பாராட்டத்தக்கது என்றும், அவர் வழியில் வந்த பெருநம்பி என்பவர் பொய்யாமொழி மங்கலம் என்னும் ஊரைக் காணியாகவுடையவர் என்றும், அவர் கச்சூர்க் கடிகை (கற்றோர் அவை) யாரில் ஒருவர் என்றும் ஒரு கல்வெட்டு அறிவிக்கின்றது.

திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவரின் எட்டாம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டு, எண்ணெய் வியாபாரம் செய்யும் செக்காளர்கள், காஞ்சிமகாநகரத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி உடையார் கோயிலில்கூடி, திருக்கச்சூர் செக்காளர்கள், திருக்கச்சூர் கோயிலுக்குத் திருவிளக்குகளுக்கு எண்ணெய் கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்ததை ஒரு கல்வெட்டுத் தெரிவிக்கின்றது.

 
 
சிற்பி சிற்பி