திருமால் முதலிய தேவர்கள் தூயதோர் இடத்தில் உண்ண வேண்டுமென்று அமுதகடத்தை இங்குக் கொண்டுவந்து வைத்தமையால் இத்தலம் கடபுரி அல்லது கடவூர் என்று ஆயிற்று என்பர். இயமவாதனையைக் கடத்தற்கு உதவும் ஊர் என்றும் கூறுவர்.
இது மயிலாடுதுறை - தரங்கம்பாடி தொடர்வண்டிப் பாதையில், திருக்கடவூர் நிலையத்திற்குக் கிழக்கே 1 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இது காவிரித் தென்கரைத் தலங்களுள் 47 ஆவது ஆகும். மயிலாடுதுறையிலிருந்து பேருந்து வசதி உளது.
இறைவர் திருப்பெயர்:- அமிர்தகடேசர். திருமால் முதலிய தேவர்கள் தூய்மையான இடத்தில் உண்ணும் பொருட்டு இங்குக் கொண்டுவந்து வைத்த அமுதகடம் அமுதலிங்கமாகத் திருவுருவம் பெற்றமையால் இப்பெயர் ஏற்பட்டது. இறைவியின் திருப்பெயர் - அபிராமி அம்மை. தலப்பிள்ளையார் - கள்ளவாரணப்பிள்ளையார். மரம் - வில்வ மரமும், சாதிமுல்லைக் கொடியும்.
தீர்த்தம் - அமிர்தபுட்கரணி, காலதீர்த்தம் முதலியன. மூலம் + ஸ்தானம் = மூலஸ்தானம்; அது மூலட்டானம் என வருவதுபோல, வீரம் + ஸ்தானம் = வீரட்டானம் எனவரும். இத்தகைய தலங்கள் எட்டு உள்ளன. அவை.
``பூமன் சிரங்கண்டி, அந்தகன் கோவல், புரம் அதிகை,
மாமன் பறியல், சலந்தரன் விற்குடி, மாவழுவூர்,
காமன் குறுக்கை யமன் கடவூர் இந்தக் காசினியில்
தேமன்னு கொன்றையும் திங்களுஞ் சூடிதன் சேவகமே.``
என்னும் பாடலால் அறியத்தக்கன.
திருக்கண்டியூர் - பிரமன் தலைகளில் ஒன்றை அறுத்தது. திருக்கோவலூர் - அந்தகாசுரனைக் கொன்றது. திருவதிகை - திரிபுரத்தை எரித்தது, திருப்பறியலூர் - தக்கன் தலையைக் கொய்தது. திருவிற்குடி - சலந்தராசுரனைக் கொன்றது. வழுவூர் - யானையை உரித்தது. திருக்குறுக்கை - காமனை எரித்தது. திருக்கடவூர் - இயமனை உதைத்தருளியது. இது மார்க்கண்டரைக் காக்கும் பொருட்டுக் கூற்றுவனை உதைத்தருளிய வீரம் நிகழ்ந்த தலமாதல் பற்றி வீரட்டானம் எனப்பெயர்பெற்றது. இச்செய்தியைக் ``கரிதரு காலனைச் சாடினானும்``, ``மார்க்கண்டர்க்காக அன்று காலனை உதைப்பர்போலும் கடவூர் வீரட்டனாரே``, ``கொன்றாய் காலன் உயிர் கொடுத்தாய் மறையோனுக்கு`` என முறையே காணப்பெறும், சம்பந்தர், அப்பர், சுந்தரர் இவர்களின் தேவார அடிகளால் அறியலாம். அதற்கு ஏற்பக் கால சம்ஹாரமூர்த்தி தனியே எழுந்தருளியிருக்கின்றார். அவர் சந்நிதிக்கு எதிரில் அருள் பெற்ற இயமனது உருவமும் இருக்கின்றது.
பரஞ்சோதியார் திருவிளையாடற் புராணத்திலும் (அருச் சனைப்படலம்.),
``கறுவிவீழ் காலன் மார்பிற் சேவடிக் கமலம் சாத்திச்
சிறுவனுக் காயு ளீந்த சேவகப் பெருமான் மேய
அறைபுனற் பழனமன்ன மூதூர்``
எனக் கூறப்பெற்றுள்ளது.
ஏழுகன்னிகள், துர்க்கை முதலானோர் வழிபட்டுப் பேறு பெற்றதலம். இப்பதியில் அவதரித்த குங்கிலியக்கலயநாயனார் வறுமையுற்ற காலத்தும், தம் மனைவியாரின் தாலியை விற்றுக் குங்கிலியத் தொண்டைச் செய்தும், காரி நாயனார் அவதரித்து அரசனிடம் சென்று பொருள் பெற்றுப் பல திருப்பணிகள் புரிந்தும் வீடுபேறு அடைந்த பதி இதுவே. சைவப்பெருமக்களாகிய அப்பரும், சம்பந்தரும் இவ்வூர்க்கு ஒருசேர எழுந்தருளி, கூற்று அடர்த்த பொன்னடிகளைத் தொழுதேத்திக் குங்கிலியக் கலைய நாயனார் திருமடத்தில் தங்கியிருந்த பெருமையும் இப்பதிக்குரிய பெருஞ்சிறப்பாகும். இத்தலத்திற்குச் சம்பந்தர் பதிகம் ஒன்று, அப்பர் பதிகங்கள் மூன்று, சுந்தரர் பதிகம் ஒன்று ஆக ஐந்து பதிகங்கள் இருக்கின்றன.
இத்திருக்கோயில் சோழமன்னர்களில் முதலாம் இராஜராஜ சோழன், முதலாம் இராஜேந்திரசோழன், முதற்குலோத்துங்கன், விக்கிரமசோழன், இரண்டாம் இராஜாதிராஜதேவன், மூன்றாங் குலோத்துங்கன், மூன்றாம் இராஜராஜன் இவர்கள் காலங்களிலும்; பாண்டியமன்னர்களில் மாறவர்மன் திரிபுவனச்சக்கரவர்த்தி, எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகரதேவன், கோனேரின்மை கொண்டான், பெருமாள் சுந்தரபாண்டியன் என்போர் காலங்களிலும்; விஜயநகரவேந்தர்களில் கிருஷ்ணதேவமகாராயர், வீரவிருப்பண்ண உடையார் என்போர் காலங்களிலும் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இக் கல்வெட்டுக்களில் இறைவர் திருவீரட்டானத்துப் பெருமானடிகள், திருவீரட்டானமுடையபரமசுவாமி, காலகாலதேவர் என்னும் பெயர்களால் கூறப்பெற்றுள்ளனர்.