கண்டியூர்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு மங்களநாயகி உடனுறை வீரட்டேசுவரர்


மரம்: வில்வம்
குளம்: கபால, தட்ச, பிரம தீர்த்தங்கள்

பதிகங்கள்: வினவினேன் -3 -38 திருஞானசம்பந்தர்
வானவர்தான -4 -93 திருநாவுக்கரசர்

முகவரி: திருக்கண்டியூர் அஞ்சல்
திருவையாறு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 613202
தொபே. 04362 262322

இது தஞ்சாவூர் தொடர்வண்டி நிலையத்திலிருந்து திருவையாற்றுக்குப் போகும் பெருவழியில் தஞ்சையிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இது காவேரித் தென்கரைத் தலங்களுள் 12 ஆவதும் எட்டு வீரட்டானத் தலங்களில் ஒன்றும் ஆகும். தஞ்சை - திருவையாறு பேருந்துகளில் செல்லலாம்.

இறைவர் திருப்பெயர் - வீரட்டேசுரர். இறைவி திருப்பெயர்- மங்களநாயகி. இது, பிரமதேவரது தலையை அறுத்த வீரம் நிகழ்ந்த தலம். இச்செய்தி ``பண்டு அங்கு அறுத்ததோர் கையுடையான் படைத்தான் தலையை`` என்னும் இவ்வூர், அப்பர் பெருமான் பதிக அடியால் அறியக் கிடக்கின்றது. சூரிய பூசை நிகழும் பதிகளுள் ஒன்று. இப்பூசை ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 13 முதல் 15 முடிய நிகழப்பெறுகின்றது. திருவையாறு ஐயாறப்பர் சித்திரை மாதத்தில் ஏழு ஊர்களுக்கு எழுந்தருளும் பெருந்திருவிழாப்பதிகளுள் ஐந்தாவது ஆகும். சதாநந்தர் பூசித்துப் பேறுபெற்றார். இவருடைய பிரதிமை கோயிலில் இருக்கின்றது. இவ்வூரில் பிரமாவிற்குத் தனிக்கோயில் ஒன்று இருக்கின்றது. இத்தலத்திற்குச் சம்பந்தர் பதிகம் ஒன்று, அப்பர் பதிகம் ஒன்று ஆக இரண்டு பதிகங்கள் இருக்கின்றன.



கல்வெட்டு:

இவ்வூர்ச் சிவன்கோயிலில் பல்லவ மன்னரில் கோவிசைய நிருபதொங்க விக்கிரமவர்மன் காலத்தும்; சோழ மன்னர்களில் மதுரை கொண்ட கோப்பரகேசரி வர்மன், உத்தம சோழன், பாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரிவர்மன் `திருமன்னிவளர` எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியையுடைய முதலாம் இராஜேந்திரசோழன் இவர்கள் காலங்களிலும் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இறைவரின் திருப்பெயர்: இக்கல்வெட்டுக்களில் இக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவர் திருக்கண்டியூர் திருவீரட்டானத்து மகாதேவர், திருக்கண்டியூருடைய மகாதேவர் என்னும் பெயர்களால் கூறப்பெற்றுள்ளனர்.

திருவீரட்டானத்துப் பெருமானுக்கும் உமாதேவிக்கும் மூன்று சந்திக்குப் பருப்பமுது, தயிரமுது, கறியமுது, அடைக்காயமுது, இலையமுது இவைகட்கும், இரவு, பகல் எரியும் திருநுந்தாவிளக்கு இரண்டு சிறுகாலை எரியும் சந்தி விளக்கு இரண்டு, உச்சியம்போது எரியும் சந்தி விளக்கு இரண்டு, இராவெரியும் சந்திவிளக்கு நான்கு ஆகிய இவைகட்கு எண்ணெயின் பொருட்டும், திருச்சென்னடைக்கு ஒவ்வொரு நாளைக்கும் நெய், எண்ணெய், தயிர், கறி, விறகு இவைகட்கும் தட்சிணாயனம் ஐப்பசி விஷு, உத்தராயணம், சித்திரை விஷுஆக ஆண்டுவரை சங்கிராந்தி நான்கிற்கும், திருமெய்ப் பூச்சுக்குச் சந்தனம், திருப்புகைக்குக் குங்கிலியம் இவைகட்கும், ஆண்டுவரை திருப்பரிசட்டம் மூன்றுக்கும், திருமேற்சட்டி ஒன்றுக்கும், திருநமனிகை இரண்டிற்கும் உத்தரீயப்புடைவை நான்கினுக்கும், கிரகணமுள்ளிட்ட சிறப்புக்களுக்கும் கார்த்திகை விளக்கினுக்கும், திருவாராதனை செய்வான் ஒருவனுக்கும், பரிசாரகம் செய்யும் மாண் ஒருவனுக்கும், கரணத்தான் ஒருவனுக்கும், திருவலகு, திருமெழுக்கு இடுவாள் ஒருத்திக்கும், ஆசாரியபோகத்திற்கும் ஆக இவைகளுக்கு வேண்டும் ஐந்நூற்றுத் தொண்ணூற்று ஐங்கலனேபதக்கு நானாழி நெல்லுக்கு முதலாம் இராசேந்திர சோழன்காலத்தில் நித்தவிநோத வளநாட்டு முடிச்சோழ நாட்டு பட்டகள் கடம்பூர் உள்ளிடங்களில் ஐந்தே முக்காலே நான்குமாவின் கீழ்முக்கால் நிலம் நிவந்தம் அளிக்கப் பெற்றிருந்தது. இக்கோயிலில் நட்டுவம், மெய்மட்டு, மோர்வியம் இவைகளின் பொருட்டு நித்தவிநோத வளநாட்டுக் கிழார்க் கூற்றத்து ஆயிரத்தளிப்பால் நிலம் விடப்பெற்றிருந்தது. இவ்வூரில் சபை ஒன்று இருந்தது. நில நிவந்தங்களும், பிறவும் இக்கோயிலுக்கு அளிக்க விரும்பியவர்கள் இவ்வூர்ச் சபையாரிடத்தே கொடுத்து வந்தனர். இவ்வூர் ஆர்க்காட்டுக் கூற்றத்துக்கு உட்பட்டிருந்தது. ``அறம்மறவற்க அறமல்லது கைதராதே`` என்னும் முதலாம் இராஜேந்திரசோழன் காலத்துக் கல்வெட்டில் காணப்பெறும் காப்புரைகள் நம் உள்ளத்தைத் தளிர்விப்பனவாகும்.

அறியப்பெறும் பண்டைய வழக்கம்: ``திருப்புகைக்கு ஆண்டுவரை குங்கிலியம் தொண்ணூற்றுப் பலத்துக்கு காசு அரைக்கு நெல் இருகலம்`` -- என்னும் இக்கோயிலி லுள்ள முதலாம் இராசேந்திரசோழன் கல்வெட்டுப் பகுதியால் மிகப்பழங்காலத்தே சாம்பிராணிக்குப் பதில் குங்கிலியத்தையே உபயோகித்திருந்த செய்தி பெறப்படுகின்றது. (இன்றும் திருவையாற்றில் ஸ்ரீ ஆட்கொண்டார் சந்நிதியில் உள்ள குங்கிலியக் குழியில் மக்கள் குங்கிலியம் இடும் வழக்கம் இருந்து வருகிறது.

( See the Annual Reports on South Indian Epigraphy for the year 1895 13 - 23.See also the South Indain Inscriptions, Volume III Numer 134, and Volume VI 568 - 579.)

 
 
சிற்பி சிற்பி