கழுக்குன்றம் (திருக்கழுக்குன்றம்)
இக்கோயிலின் காணொலி மூடுக / திறக்க
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535,
5370535. தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
இக்கோயிலின் படம் மூடுக / திறக்க
அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை பக்தவத்சலர்
மரம்: வாழை குளம்: சங்கு பிறந்த குளம், பட்சி தீர்த்தம்
பதிகங்கள்: தோடுடையானொரு -1 -103 திருஞானசம்பந்தர்
மூவிலைவேற் -6 -92 திருநாவுக்கரசர்
கொன்றுசெய்த -7 -81 சுந்தரர்
முகவரி: திருக்கழுக்குன்றம் அஞ்சல் செங்கல்பட்டு வட்டம் காஞ்சிபுரம் மாவட்டம், 603109 தொபே. 044 27447139
தொண்டை நாட்டுத்தலம். இத்தலம் செங்கற்பட்டிலிருந்து தென்கிழக்கே 14.கி.மீ. தூரத்தில் உள்ளது. பேருந்துகள் உள்ளன. கழுகுகள் பூசித்துப் பேறுபெற்றமையின் கழுக்குன்றம் எனப்பெறும். முதல்யுகத்து, சாபமெய்திய சண்டன், பிரசண்டன் என்னும் கழுகுகளும், இரண்டாம் யுகத்து, சம்பாதி, ஜடாயு என்னும் கழுகுகளும், மூன்றாம் யுகத்து, சம்புகுத்தன், மாகுத்தன் என்னும் கழுகுகளும், நான்காம் யுகத்து சம்பு, ஆதி என்னும் கழுகுகளும் பூசித்து முறையே பேறுபெற்றன. வேதங்கள் மலையுருவாய்ச் சுவாமியைத் தாங்கலின் வேதகிரி எனவும் வழங்கும். வடதேசத்தினர் பட்சி தீர்த்தம் என்பர். இன்றும் இரண்டு பட்சிகள் தினந்தோறும் அன்னத்தை உண்டு வலம் வருகின்றன. 12 ஆண்டுக்கொருமுறை சங்கு பிறத்தலின் சங்கு பிறந்த குளம் என்னும் மகிமையைப்பெற்றுள்ளது. மாணிக்க வாசக சுவாமிகளுக்கு இறைவன் குருமூர்த்தி வடிவமாய்த் தரிசனங்கொடுத்த தலம். இவரன்றி நந்தி, இந்திரன், கோடிருத்திரர் முதலியோர் பூசித்துப் பேறு பெற்றனர். இறைவன் வேதபுரீசுவரர். இறைவி பெண்ணினல்லாளம்மை, மலைச்சொக்கநாயகி. அடிவார இறைவன் பெயர் பக்தவத் சலர். இறைவி திரிபுரசுந்தரி. தீர்த்தம் சங்கு பிறந்த குளம், சங்க தீர்த்தம், பட்சி தீர்த்தம்.
கல்வெட்டு:
பாண்டியமன்னன் ஜடாவர்மன் என்கிற திரிபுவனச் சக்ரவர்த்தி வீரபாண்டியதேவன் காலத்தில் செயங்கொண்ட சோழ மண்டலத்தில் களத்தூர் கோட்டத்துத் திருக்கழுக்குன்றம் என்றும்(59 of 1909), சோழர் காலத்தில் களத்தூர் கோட்டத்தில் களத்தூர் நாட்டிலுள்ள உலகளந்த சோழபுரம் என்றும் வழங்கப்பெற்றது. இறைவன் திருக்கழுக்குன்றமுடைய நாயனார் ( 61 of 1909)என்று வழங்கப்படுவர். சண்முகப் பிள்ளையார் குறிக்கப்பட்டுள்ளார்( 62 of 1909). இராஷ்டிரகூட அரசன் கன்னரதேவன் காலத்தில் கருப் பக்கிருகத்தின் முன் மண்டபங்கட்ட ஈசானசிவா விடமிருந்து ஒருபட்டி நிலம் வாங்கப்பட்டது( 170 of 1894). இராஜராஜ புரத்தில் வசிக்கும் ஒருவர் 10 காசுகள் கொடுக்கத் தான் வாங்கின நிலத்தை 63 நாயன்மாரில் ஒருவரான நமிநந்தியடிகள் பிதாவிடம் கொடுத்துள்ளார்கள்(179 of 1894). பக்தவத் சலக் கோயில் குன்றத்தின் மேலுளதாக(189 of 1894, 57 of 1909) இரண்டு கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. கோயிலைப் பழுதுபார்க்க விஜயநகர அரசன் பிரதாபபுக்கராயர் நிலம் தந்துள்ளார். மேலும் தம் பெயராகிய புக்கராயன் சந்தி விழாவிற்காகவும் நிலம் தானம் செய்யதுள்ளார்( 57 of 1909). ஆயிரப்பிரிவிலுள்ள மக்களால் திருமலை ஆளுடை நாயனார் கோயிலுக்கு நிலம் தானம் செய்யப்பட்டுள்ளது(58 of 1909). களத்தூர் பிரிவிலுள்ள மக்களால் அதே கோயிலுக்கு காளிங்கராயன் சந்தி விழாவிற்காக நிலம் தானஞ்செய்யப்பட்டது(59 of 1909). மாறவர்மன் திரிபுவனச் சக்ரவர்த்தி வீரபாண்டியதேவன் காலத்தில் ஒரு நபரால் சண்முகப் பிள்ளையார் கர்ப்பக்கிருகத்திற்கு விளக்கிடப் பசுக்கள் தானஞ் செய்யப்பட்டுள்ளன( 62 of 1909). விஜய நகர அரசன் வீரவிஜய பூபதிராயரது ஆட்சியில் அரசனுடைய அதிகாரியான நாகேசுவரமுடையான் விழாவிற்காக வரியைத் தள்ளுபடி செய்துள்ளான்(63 of 1909). 17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஒல்லாந்து நாட்டு அதிகாரிகளைப்பற்றிய அடையாளச் செய்திகள் குன்றின் ஒருகால்மண்டபத்தின் கீழ்த்தாழ்வாரத்தின் 8 சுவர்களின் மேல் பொறிக்கப்பட்டுள்ளன(66 to 73 of 1909). இவையன்றி விளக்கு முதலானவற்றுக்குப் பொன், நிலம், ஊர், ஆடுகள், பசுக்கள் முதலியன அளிக்கப்பட்ட செய்திகளும் அறியப்படுகின்றன.
|