கபிலதேவ நாயனார்

படம்



சிவமயம்

நாயன்மார் வரலாறு

பதினொன்றாம் திருமுறை

பதினொன்றாம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களை அருளிச்செய்த ஆசிரியர்கள் திருவாலவாயுடையார், காரைக்கால் அம்மையார் ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீரதேவர், கல்லாட தேவர், கபிலதேவர், பரணதேவர், இளம் பெருமான் அடிகள், அதிரா அடிகள், பட்டினத்து அடிகள் நம்பியாண்டார் நம்பிகள் ஆகிய பன்னிருவராவர்.

இவர்களுள் திருவாலவாயுடையார் மதுரைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக் கடவுள் ஆவார். ஏனையோருள் காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர் கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகிய மூவர் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் திருத்தொண்டத் தொகையில் போற்றப்பெற்ற நாயன்மார்கள் ஆவர். இவர்கள் வரலாறு பெரிய புராணத்தில் விரி வாகக் கூறப்பட்டுள்ளது.

சங்கப்புலவரும் சங்கப்புலவர் பெயர் தாங்கியவர்களுமாக நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர் ஆகிய நால்வர் உள்ளனர்.

ஏனையோராக இளம் பெருமான் அடிகள், அதிரா அடிகள், திருவெண்காட்டு அடிகள் எனப்படும் பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பிகள் ஆகிய நால்வர் விளங்குகின்றனர்.

கபிலதேவ நாயனார் வரலாறு

திருநெறிச்செம்மல், நல்லிசைப்புலவர்

வித்துவான், திரு. வி. சா. குருசாமி தேசிகர் அவர்கள்

பொறுப்பு முதல்வர், தருமையாதீனப் பல்கலைக் கல்லூரி.

பதினொன்றாம் திருமுறையில் மூத்தநாயனார் திரு இரட்டை மணிமாலை, சிவபெருமான் திரு இரட்டை மணிமாலை, சிவபெருமான் திரு அந்தாதி ஆகிய மூன்று பிரபந்தங்களை அருளியவர் இவர். கடைச்சங்கப் புலவராகிய கபிலரும் இவரும் ஒருவரே எனக் கருதுவோரும் உளர்.

விநாயகர் வழிபாடு

விநாயகர் வழிபாடு தமிழகத்தில் கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் பரவலாக இடம் பெற்றிருக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுவதால் மூத்த நாயனாராகிய விநாயகர் மீது பிரபந்தம் அருளிய இவர் கி.பி. 8-ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் என்பர் சிலர். மேலும் இவர் அருளிய யாப்பு வகைகள் பிற்காலத்தன ஆதலினானும் இவர்தம் நூல்களின் சொல்லாட்சிகள் பிற்காலத்தனவாய் இருத்தலானும் இவரும் கி.பி. 9-ஆம் நூற்றாண்டினை அடுத்து வாழ்ந்தவர் ஆதல் கூடும் எனப் பேராசிரியர் திரு. க வெள்ளைவாரணனார் ஆராய்ந்து நிறுவியுள்ளார்.

இளம்பூரணர் தொல்காப்பியப் பொருள் அதிகாரச் செய்யுளி யலில், கபிலர் இயற்றிய இரண்டு செய்யுட்களை மேற்கோள் காட்டியிருத்தலின் இக்கபிலர் இம்பூரணர்க்கு முற்பட்டவர் எனக் கொள்ளலாம்.

சங்கப்புலவராகிய கபிலர் வேள்பாரியின் இனிய நண்பர். அந்தணர், `பொய்யா நாவிற் கபிலன்` எனப் போற்றப்பட்டவர். ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்திக் குறிஞ்சிப்பாட்டுப் பாடியவர். செல்வக்கடுங்கோ வாழியாதன் மீது பதிற்றுப் பத்துள் ஒரு பத்துப் பாடிப் பரிசில் பெற்றவர். கலித்தொகையில் குறிஞ்சித்திணை பாடிக் `குறிஞ்சிக் கபிலன்` என்ற பெயரைப் பெற்றவர்.