அதிரா அடிகள்

படம்



சிவமயம்

நாயன்மார் வரலாறு

பதினொன்றாம் திருமுறை

பதினொன்றாம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களை அருளிச்செய்த ஆசிரியர்கள் திருவாலவாயுடையார், காரைக்கால் அம்மையார் ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீரதேவர், கல்லாட தேவர், கபிலதேவர், பரணதேவர், இளம் பெருமான் அடிகள், அதிரா அடிகள், பட்டினத்து அடிகள் நம்பியாண்டார் நம்பிகள் ஆகிய பன்னிருவராவர்.

இவர்களுள் திருவாலவாயுடையார் மதுரைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக் கடவுள் ஆவார். ஏனையோருள் காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர் கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகிய மூவர் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் திருத்தொண்டத் தொகையில் போற்றப்பெற்ற நாயன்மார்கள் ஆவர். இவர்கள் வரலாறு பெரிய புராணத்தில் விரி வாகக் கூறப்பட்டுள்ளது.

சங்கப்புலவரும் சங்கப்புலவர் பெயர் தாங்கியவர்களுமாக நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர் ஆகிய நால்வர் உள்ளனர்.

ஏனையோராக இளம் பெருமான் அடிகள், அதிரா அடிகள், திருவெண்காட்டு அடிகள் எனப்படும் பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பிகள் ஆகிய நால்வர் விளங்குகின்றனர்.

அதிரா அடிகள் வரலாறு

திருநெறிச்செம்மல், நல்லிசைப்புலவர்

வித்துவான், திரு. வி. சா. குருசாமி தேசிகர் அவர்கள்

பொறுப்பு முதல்வர், தருமையாதீனப் பல்கலைக் கல்லூரி.

பதினொன்றாம் திருமுறையில் மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவையைப் பாடியவர் அதிரா அடிகள் ஆவார்.

துளங்காத சிந்தை

இவர் எதற்கும் அஞ்சாத சிந்தையராய் வாழ்ந்தவர் ஆதலின் அதிரா அடிகள் எனச் சான்றோர் இவரைப் போற்றினர். திருநாவுக்கரசு சுவாமிகள் துளங்காத சிந்தை உடையவரை,

வரும்பயனை எழுநரம்பின் ஓசை யானை

வரைசிலையா வானவர்கள் முயன்ற வாளி

அரும்பயம்செய் அவுணர்புரம் எரியக் கோத்த

அம்மானை அலைகடல் நஞ்சு அயின்றான் தன்னைச்

சுரும்பமரும் குழல்மடவார் கடைக்கண் நோக்கில்

துளங்காத சிந்தையராய்த் துறந்தோர் உள்ளப்

பெரும்பயனைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்

பேசாத நாளெல்லாம் பிறவாநாளே. (தி.6 ப.1 பா.7)

எனப் போற்றுகின்றார். அதிர்ச்சி - நடுக்கம்.

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை

அதிர வருவதோர் நோய் (குறள்., 429)

என்ற திருக்குறளின்படி அடியவர் இடர்கடி கணபதியின் திருவடி களைப் பற்றிக்கொண்டு இடையூறுகள் இன்றி இனிதே வாழ்ந்தவர் ஆதலின் இப்பெயர் பெற்றார் எனவும் கொள்ளலாம்.

இவர் காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளலே ஏற்புடைத்தாகும்.