பிரமாணவியல் முதற் சூத்திரம்
பண் :
பாடல் எண் : 1
அவன் அவள் அதுஎனும் அவைமூ வினைமையில்
தோற்றிய திதியே ஒடுங்கிமலத் துள தாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்.
பொழிப்புரை :
சூத்திரம் என்னுதலிற்றோவெனின் சங்காரகாரணனாயுள்ள முதலையே முதலாகவுடைத்து இவ்வுலகம் என்பதுணர்த்துதல் நுதலிற்று. (வார்த்திகம் 1)
இது சூத்திரக் கருத்துரைக்கின்றது. இள் நிவிர்த்திகலை முதலிய பஞ்ச கலைகளுட்பட்ட ஐவகைச் சங்காரத்துள் இறுதிக் கண்ணதாகிய மாசங்காரத்தைச் செய்யும் வினைமுதலாயுள்ள முதல்வனையே தனக்கு முதற்கடவுளாக வுடைத்து அவனவளது என்று இவ்வாறு சுட்டி யுணரப்படுவதாய உலகம் என வேதாக மங்களுட் கூறப்படுவதனை அநுமான அளவையா லுணர்த்துதலைக் கருதிற்று இச்சூத்திரம் என்றவாறு.
குறிப்புரை :
ஈண்டு ஆசிரியர், முதனூலிற் கூறியவாறே சிவாகமங்களி னோதப்படும் ஞானபாதப்பொரு ளெல்லாவற்றையும் பொது, உண்மையென்று இரண்டாகத் தொகுத்து, பிரமாணவியல் இலக்கணவியல் சாதனவியல் பயனியலென நால்வகைப்படுத்து, பிரமாணவியல் மூன்று பாதத்தாற் கூறுவான்தொடங்கி, முதற்கண் உலகிற்கு முதற்கடவுள் சிறப்புவகையான் உண்டென்னும் ஆகமப் பிரமாணத்தை வலியுறுத்துவதாய அநுமானப் பிரமாணங் கூறுகின்றார்.
ஏகாரம், இயைபின்மை நீக்குதற்கும் பிறிதினியைபு நீக்குதற்கும் பொதுவாய்நின்ற பிரிநிலை.
இதன்பொழிப்பு உரைத்துக்கொள்க. (வா 2)*
இஃது இவ்வுரைமுகத்துக் கேட்போரால் உரைவகைபற்றிச் செய்து கோடற்பாலதொன்றனை அறிவுறுத்துகின்றது. இதன் பொருள் இச்சூத்திரத்தின் பிண்டப்பொழிப்பு முன்னர்க் கண்ணழித்துரைக்கும் பொழிப்புரைபற்றி உரைத்துக்கொள்க. என்றவாறு.
எனவே, இங்ஙனம் இருவகைப்படும் பொழிப்புரையுட் கண்ணழித்துக் கடாவிடைகளானுரைக்கும் வார்த்திகமாய பொழிப்புரை மாத்திரையே யாமீண்டுரைக்கின்றாம்; பிண்டமாகக் கொண்டுரைப்பதாய பொழிப்புரை இதுபற்றி யுணர்ந்துகோடல் எளிதாகலின், அஃதியாமுரைக்கின்றிலம் என உரைமுகத்து மாணாக்கர்க்கு அறிவுறுத்தவாறாயிற்று. இஃது, ஏனைச் சூத்திரங்களினும் உய்த்துக் கொண்டுணர்தற்பொருட்டு, முதற்கண் வைக்கப்பட்டது.
இவ்வாறு ஆசிரியர் ஆணைதந்தமையின், கண்ணழித் துரைபற்றிச் சூத்திரத்திற்குப் பதப்பொருள் கூறுதும். அவன் அவள் அது எனும் அவை புலவர் என்பது. அவனென்றும் அவளென்றும் அதுவென்றும் இவ்வாறு பகுத்துப் பலவாய்ச் சுட்டியுணரப்படுஞ் சொல்லும் பொருளுமாய இருகூற்றுப் பிரபஞ்சத்தொகுதி; தோற்றம் நிலை இறுதியென்னும் முத்தொழிலுடைமையால், ஒருவனாற் றோற்றப்பட்டதாய உள்பொருளேயாம். அது, தோன்றுங்கால், தானொடுங்குதற்கு ஏதுவாய் நின்ற கடவுளினின்றும், சகசமல நீங்காமையால், அது நீங்குதற்பொருட்டு மீளத்தோன்றுவதாம். இவ்வாறாகலின், சங்காரத்தொழிலைச் செய்யுங் கடவுளே உலகிற்கு முதற்கடவுள்; ஏனையோர் அன்னரல்லர் எனக் கூறுவர் அளவை நூலுணர்ந்தோர் என்றவாறு.
அவை தொகுதி ; சுட்டுப் பெயரெனக் கொள்ளின், உளவெனப் பிரித்துப், பயனிலையாக்கித், தாமென்பதனை அசை நிலையாக வைத்துரைத்து, ஆக்கச்சொல் வருவித்துக்கொள்க. வினைமை வினையுடைமை. தோன்றியவென்னாது தோற்றியவெனப் பிறவினை வாய்பாட்டானோதுதலின், அதற்குரிய வினைமுதல் அவாய் நிலையான் வந்தது. தோற்றியவென்னும் பெயரெச்சந் திதியென்னுஞ் செயப்படு பொருட்பெயர் கொண்டது. திதியா யொருவனால் தோற்றப்பட்டதென்பார் தோற்றிய திதியென்றார். திதியென்றது ஈண்டு உள்பொருளென்னுந் துணையாய் நின்றது. மூவினையுடைமையால் உள்பொருளாதலும், அவ்விரண்டு முடைமையால் நிமித்த காரணனை யுடைத்தாதலுந் துணியப்படுமென்பார், மூவினைமையிற் றோற்றிய திதியென்றார். ஏகாரந் தேற்றம். ஒடுங்கியென்பது பெயர். உருபுகள் தொக்கு நின்றன. அந்தத்தைச் செய்யுங் கடவுளை அந்தமென்றது உபசாரம். காணப்பட்டவுலகாற் காணப்படாத கடவுட்குண்மை கூறவேண்டுதலின், தோற்றிய திதியே யெனவும், ஒடுங்கியுள தாமெனவும், உலகின்மேல் வைத்துக் கூறினார். கருத்துரையுட் கூறியதும் அது நோக்கி.
இச்சூத்திரத்துள் அவனவளதுவெனு மவை மூவினைமையின் என்பது ஓரதிகரணம்; தோற்றிய திதியே யொடுங்கியுளதாம் என்பது மூன்றதிகரணத்தை யுள்ளடக்கி நிற்பதோ ரதிகரணம்; அந்தமாதி யென்மனார் புலவர் என்பது ஓரதிகரணம்; ஆக முக்கூற்றது இச்சூத்திரமென்றுணர்க. இம்மூன்றும் முறையே ஒன்றற்கொன்றேதுவும் பயனுமாய் ஒரு பொருள்மேல் வருதலின், ஒரு சூத்திரத்தாற் கூறினார். தன்னாற் கூறப்படும் பொருளும், அதன்கண் ஐயப்பாடும், அதற்குப் பிறர் கூறும் பக்கமும், அதனை மறுத்துரைக்குஞ் சித்தாந்தத் துணிபும், இயைபுமென்னும் இவற்றது நிலைக்களம் ஈண்டு அதிகரணமெனப்படும்.
பண் :
பாடல் எண் : 2
பூதாதி ஈறும் முதலும் துணையாகப்
பேதாய் திதியாகும் பெற்றிமையின் - ஓதாரோ
ஒன்றொன்றிற் றோன்றி உளதாய் இறக்கண்டும்
அன்றென்றும் உண்டென்ன ஆய்ந்து.
பொழிப்புரை :
மேற்கோள் : ஈண்டு உளதாய் ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்பட்ட பிரபஞ்சம் உற்பத்தி திதி நாசமுடைத்து என்றது. (வா 3 )
என்பது மேற்கொள் என்னுதலிற்றோவெனின், மூவினையுடைத்தோ அன்றோ என்னும் ஐயப்பாட்டின்கண் நித்தமாய்க் காணப்படும் பிரபஞ்சத்தை மூவினையுடைத்தென்றல் பொருந்தாது என மீமாஞ்சகரும் உலோகாயதருங் கூறுங்கடாவை யாசங்கித்துச் சூத்திரத்தின் முதற் கூற்றைக் கண்ணழித்துரைத்து மேற்கோடனுதலிற்று. இதன் பொருள் வெளிப்படை.
(சுப்பிரமணிய தேசிகர் உரை : ஈண்டு இம்மூன்று அதிகரணங்களின் வைத்து இம்முதல் அதிகரணத்துள்; ஒருவன். பிரபஞ்சம் ஒருவனென்றும் ஒருத்தி யென்றும் ஒன்றென்றும் இவ்வாறு அவயவப்பகுப் புடைத்தாயும் பல வேறுவகைத்தாய்ச் சடமாயும் முயற்கோடு முதலியன போலத் திரிவையங்களானன்றி மெய்யாகச் சுட்டி யறியப்பட்ட பிரபஞ்சம் இம்மூன்று ஏதுவானும் ; உற்பத்தி . . . என்றது தோன்றி நின்று அழிதலை யுடைத்து என்றவாறு.)
ஒருவனென்றும் ஒருத்தி யென்றும் ஒன்றென்றும் இவ்வாறு அவயவப்பகுப்புடைத்தாயும் பல வேறு வகைத்தாய்ச் சடமாயுஞ் சுட்டியறியப்படுவதாயு மிருத்தலின் இம்மூன்றேதுவானும் பிரபஞ்சந் தோன்றிநின்றழியுமென்பது துணியப்படுமென்பார், உளதா யொருவனொருத்தி யொன்றென்று சுட்டப்பட்ட பிரபஞ்சமென உடம்பொடு புணர்த்தோதினார்.
உளதாய்ச் சுட்டப்பட்ட வெனவியையும். உளதாகச் சுட்டப்படுதல் முயற்கோடு முதலியனபோலத் திரிவையங்களானன்றி மெய்யாகச் சுட்டப்படுதல்.
ஏது : தோற்றமும் ஈறும் உள்ளதன்பாலே கிடத்தலின். (வா 3)
என்பது ஏது என்னுதலிற்றோவெனின் காட்சியளவைக்கு எய்தாதுரைப்பன வெல்லாம் பிரமாணமாகாவென உலோகாயதர் கூறுங்கடாவை யாசங்கித்துக் காட்சியளவைபற்றியும் மேற்கோளைச் சாதித்தனுதலிற்று. இதன் பொருள். உற்பத்தியும் நாசமுங் காணப்பட்ட திதியின் பக்கத்தே காணக் கிடத்தலின் உளதா யொருவ னொருத்தியொன் றென்று சுட்டப்பட்ட பிரபஞ்சம் உற்பத்தி திதி நாசமுடைத்து என மேற்கொண்டது என்றவாறு.
குறிப்புரை :
என்பது உம் என்னுதலிற்றோவெனின், உள்ளதன்பால் அவ்விரண்டுங் கிடத்தல் யாங்ஙனம் என்னுங் கடாவை யாசங்கித்து ஏதுவை வலியுறுத்துத னுதலிற்று. இதன் பொருள். பேதாய் என்பது காட்சியளவைகளானும் அறியப்படாத மடவோனே, பூதாதி என்பது பூதமுதற் காரணமாகவுடைய பிரபஞ்சத்திற்கு, திதி ஈறும் முதலும் துணை ஆக ஆகும் என்பது திதி நிகழ்வழி, நாசமும் உற்பத்தியுந் தனக்குத் துணைக்காரணமாகக்கொண்டே நிகழாநிற்கும். அற்றாயினும். ஒன்று தோன்ற நிற்ப ஒன்றழிவதன்றி ஒருங்கே தோன்றி ஒருங்கே நின்று ஒருங்கே யழியக் கண்டிலமாலெனின்; ஒன்று ஒன்றின் பெற்றிமையின்தோன்றி உளதாய் இறக்கண்டும் என்பது ஒவ்வொரு காலவிசேடத்திற் சாதிபற்றி ஒருங்கே தோன்றி ஒருங்கே நின்று ஒருங்கே யழிவதனைக் கண்டு வைத்தும், என்றும் அன்று உண்டு என்ன ஆய்ந்து ஓதாரோ என்பது என்றாயினும் அதற்குரிய காலம் வருமென்று உலகத்திற்கும் அங்ஙனமாத லுண்டென்று அக்காட்சிபற்றி ஆராய்ந்து சொல்லார்களோ உன்னைப்போலும் மடமையில்லாதோர் என்றவாறு.
பூதாதி அன்மொழித்தொகை. பூதத்துக்கு மேலுளவாய தத்துவங்கள் உலோகாயதருக்கு உடம்பாடன்மையின், பூதமுதலாய தத்துவங்களென வுரைத்தல் ஈண்டைக்கேலாமையறிக. பூதாதிக்கென நான்கனுருபு விரித்துரைக்க; அது பின்னருஞ் சென்றியையும். ஆகுமென்பது முற்றுவினை. ஈண்டுப் பெற்றிமை என்றது சாதியை. ஓகாரம் எதிர்மறை. ஒன்றொன்றினென்பது சூசூஒன்றொன்றாப் பார்த்துணர்வ துள்ளமே” என்றாற்போல அடுக்கு மொழி. அது காலவிசேடமாதல் என்று மன்றெனப் பின்வருதலாற் பெற்றாம். ஒருங்கேயென்பது சொல்லெச்சம். ஒன்றொன்றிற்றோன்றி யுளதாயிறுதலாவது சூசூபயில்வித்தெல்லாங் காரிடமதனிற் காட்டுமங்குரங் கழியும் வேனில்” இந்நூல் உதாரணம் 68, சிவஞானசித்தி, 19 என்பதனானறிக. சூசூகண்டும்” உம்மை சிறப்பு.
பண் :
பாடல் எண் : 3
வித்துண்டா மூல முளைத்தவா தாரகமாம்
அத்தன்தாள் நிற்றல் அவர்வினையால் - வித்தகமாம்
வேட்டுவனாம் அப்புழுப்போல் வேண்டுருவைத் தான்கொடுத்துக்
கூட்டானே மண்போற் குளிர்ந்து.
பொழிப்புரை :
மேற்கோள் : இனி ஒடுங்கின சங்காரத்தினல்லது உற்பத்தியில்லையென்றது
என்பது மேற்கொள் என்னுதலிற்றோவெனின், இத்துணையுங் கூறியவாற்றான் உலகத்தைத் தோற்றுவிப்பான் உண்டெனப்பட்ட கருத்தாத் திதிகருத்தா, சிருட்டிகருத்தா முதலியோரில் ஒருவனே யாதலமையும் எனப் பாஞ்சராத்திரி முதலியோர் கூறுங்கடாவை யாசங்கித்து ஒடுங்கியுளதாமென்னுஞ் சூத்திரக்கூற்றைக் கண்ணழித்துரைத்து மேற்கோடனுதலிற்று. இதன் பொருள், உலகம் தானொடுங்குதற்கு நிலைக்களமான சங்காரகருத்தாவினின்றன்றி உளதாகாது என்றவாறு.
ஒடுங்கினவென்னும் பெயரெச்சஞ் சங்காரமென்னும் இடப்பெயரோடு முடிந்தது. சங்காரம் ஆகுபெயர். அல்லதில்லை என்று எதிர்மறைமுகத்தாற்கூறியது, ஏனைக் கடவுளரின் உளதாகாமை யாப்புறுத்தற்பொருட்டு. இதனுள் ஒடுங்கின என்பதனாற் போந்த குறிப்பேதுவைப் புலப்படக்காணுமாறு.
ஏது : ஆண்டு ஒடுங்குதலின்.
என்பது ஏது என்னுதலிற்றோவெனின், அதற்குப் பிரமாணமென்னை என்னுங் கடாவை யாசங்கித்து மேற்கோளைச் சாதித்தனுதலிற்று. இதன் பொருள் யாது யாண்டொடுங்கும் அஃததனிலுற்பத்தியாம் மண்ணிற் குடம்போலும் என்னும் அவினாபாவத்தாற், பிரபஞ்சஞ் சங்கார காரணன்மாட் டொடுங்குதலின் மீளத்தோன்றுங்கால் ஆண்டுநின்றுந் தோன்றுதலே பொருத்தமுடைமையின் அவ்வாறு மேற்கொண்டது என்றவாறு.
இவ்வாறு மூன்றதிகரணப்பொருளும் இதன்கட் போந்தவாறும் இவ்வாறுரையாக்காற் பொருளியையு படாமையும் நுண்ணுணர்வாற் கண்டுகொள்க.
உதாரணம் :
இலயித்த தன்னில்இல யித்ததாம லத்தால்
இலயித்த வாறுளதா வேண்டும் -
என்பது உம் என்னுதலிற்றோவெனின், உலகம் உள்ளதாயின் உள்ளதற்கு உண்டாக வேண்டுவதில்லையாகலாற் சற்காரியவாதம் அடாது எனப் புத்தர் கூறுங்கடாவை யாசங்கித்து இல்லதற்குத் தோற்ற மின்மையினென்ற ஏதுவை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள். இலயித்தது இலயித்த தன்னில் ஆம் என்பது உள்ளதாயினுஞ் சங்காரகாலத்தினொடுங்கிய தாகலான் அவ்வொடுங்கிய உலகம் தானொடுங்குதற்கு நிலைக்களமான சங்காரகருத்தாவினின்றும் படைப்புக்காலத்தின் மீளவுளதாம்; அற்றேல் ஒடுங்கியது ஒடுங்கியவாறேயொழியாது மீளவுண்டாகவேண்டாம்: வேண்டுமாயின்; முன்னொடுங்காது நிலைபெறவேயமையும்; அவ்வாறன்றி ஒடுங்கி மீளவுளதாவது ஏற்றுக்கெனின் ; மலத்தால் என்பது உள்ளதாகிய உலகம் கருமமலம் பரிபாகமாதற்பொருட்டு ஒடுங்கி ஆணவ மலம் பரிபாகமாதற் பொருட்டு மீளவுமுண்டாம்; அற்றேல் முன்னின்ற பிரபஞ்சம் நாசமாக வேறு தோன்றுமென்னாமல் அதுவே ஒடுங்கி நின்று மீளவுளதாமென்றற்குப் பிரமாணம் என்னை யெனின் ; இலயித்தவாறு உளது ஆ வேண்டும் என்பது எஃதெவ்வாறு நின்றொடுங்கிற்று; அஃதவ்வொடுங்கியவாறே உளதாதல் எல்லாரானும் விரும்பப்படும் என்றவாறு.
எனவே அந்நியமமில்லையாயின் நெற்கமுகாய் நீளாது நெல்லாய் நீளுதற்கு ஏதுவென்னையென்னுந் தருக்கமே அதனையறிவுறுத்து மென்றவாறாயிற்று. சற்காரியவாதத்தின் இயல்பு சூசூதந்து முதல் காரகம்’’ என்னும் ஞானாமிர்தத்தினுங் காண்க.
இதனானே, இல்லது முள்ளதுமல்லாத பொருள் தோன்று மென்னுஞ் சூனியவாதிகளும், இல்லதுமுள்ளதுமாய பொருள் தோன்றுமென்னும் அநேகாந்த வாதிகளும் மறுக்கப்பட்டவாறறிக.
உதாரணம் :
இலயித்த
தத்திதியில் என்னின் அழியா தவையழிவ
தத்திதியும் ஆதியுமாம் அங்கு.
என்பது உம் என்னுதலிற்றோவெனின், இனிச் சற்காரியவாதத்தின் அவ்வக்காரியங்கள் தத்தமுதற்காரணத் தொடுங்குமெனவே கோடலின் உலகிற்கு முதற்காரணமாகிய மூலப்பகுதி வாசுதேவனுருவாகலான் உலகம் அவன் மாட்டொடுங்குமென்றலே அமைவுடைத்தன்றி முதற்காரணத்தின் வேறாய நிமித்தகாரணமெனக் கொண்ட சங்கார கருத்தாவின் மாட்டொடுங்குமென்றல் பொருந்தாதெனப் பாஞ்சராத்திரிகள் கூறுங்கடாவை யாசங்கித்து ஒடுங்கின சங்காரத்தின் எனவும் இலயித்ததன்னில் எனவுங் கூறிப்போந்த குறிப்பேதுவை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள். இலயித்தது அத்திதியில் என்னின் என்பது உலகமொடுங்கியது அந்த மூலப்பகுதி வடிவாய திதிகருத்தாவின்கண் என்பையாயின்; அவை அழியாது என்பது நீ அங்ஙனங்கொள்ளினும் மூலப்பகுதிக்கு மேலுள்ள புவனங்கள் அதனால் வியாபிக்கப்படாமையிற் கீழுள்ள ஏகதேசமாத்திரையே ஆண்டொடுங்குவதன்றி மாயாகாரியத்தொகுதி முழுவதும் ஆண் டொடுங்காது ; அற்றேல், மாயாகாரியத்தொகுதி முழுவதும் யாண் டொடுங்குவதெனின் ; அத்திதியும் ஆதியும் ஆம் அங்கு அழிவது என்பது அந்தத் திதிக்கடவுளும் படைப்புக்கடவுளும் தோன்றுதற்குக் காரணமாகிய அச்சங்காரக் கடவுளிடத்தே அவ்விருவரோடுங் கூட அழிவதாம் அத்தொகுதி என்றவாறு.
இவ்வெண்பாவினைச் \"இது மாபுராணச் செய்யுள் என்று நச்சினார்க்கினியர் கூறுகின்றார். செய்யுட்களோசை சிதையுங்காலீரளபு, மையப்பாடின்றியமையுமா மைதீரொற், றின்றியுஞ் செய்யுட் கெடினொற்றை யுண்டாக்கு, குன்றுமே லொற்றளபுங்கொள்’’ என்பதுபோல இரண்டதிகரணப் பொருள்படுமாறு இருதொடராக வைத்துரையாக்காற் பொருளியையு படாமையறிக. இலயித்த என்னும் பெயரெச்சம் தன்னென்னும் இடப்பெயரோடு முடிந்தது. இலயித்ததென்றது ஏதுப்பொருண்மை யுணரநின்ற பெயர். இலயித்ததெனச் சற்காரியவாதங்கூறவே இலயித்தவவத்தையின் அவ்வக்காரியசத்தி சமூகமாய்ச் சூக்குமமாய் நிற்பதொன்றுண்டு.அதுவே முதற்காரணமெனப் பிரபஞ்சத்திற்கு முதற்காரணமாகிய மாயையுண்மையும் பெறப்பட்டது. ஆ என்பது முதனிலைத்தொழிற்பெயர். வேண்டுமெனச் செயப்படுபொருளைச் செய்ததுபோலக் கூறினார். அவை தொகுதி ; அஃறிணைப் பன்மைப் பெயரென்பார்க்கு அழியாது அழிவதென்னும் ஒருமைகளோடியையாமையும் உத்தரமாகாமையுமுணர்க. திதியும் ஆதியும் ஆகு பெயர். ஆமங்கு பெயரெச்சமுடிபு. இரணிய கருப்பமதத்தையும் மறுத்தற் பொருட்டுப் படைப்புக்கடவுளையும் உடன் கூறினார்.
நிமித்தகாரணனாகிய முதல்வன் உலகிற்கு முதற்காரண னல்லனாயினும் முதற்காரணமாகிய மாயைக்கு ஆதாரமாய் நிற்றலின், உலகம் ஆண்டொடுங்கி ஆண்டு நின்று தோன்றுதல் அமையுமென்பது வருகின்ற வெண்பாவிற் பெறப்படும்.
குறிப்புரை :
இனி இல்லதற்குத்தோற்றமின்மையின் உள்ளதற்குச் செய்வோரின்றிச் செய்வினையின்மையின் ஒடுங்கின சங்காரத்தினல்லது உற்பத்தியில்லையென்றது. (வா 4)
என இங்ஙனஞ் சொற்பல்காமைப்பொருட்டுத் துணிந்ததாக வைத்துரைத்தாராயினும், பொருளியைபிற்கேற்ப இதனை மூன்றதிகரணமாக வைத்துரைப்பது ஆசிரியர் கருத்தெனக் கொள்க ; அஃதாமாறு காட்டுதும் :
மேற்கோள் : இனி உலகமுள்ளது என்றது.
என்பது மேற்கொள் என்னுதலிற்றோவெனின், உலகம் இல்பொருளாய்த் தத்தஞ் சார்பிலே தோன்றியழிதல் இயல்பென்றலே அமைவுடைமையின், அது மூவினையுடைத்தாயினும் தோற்றுவானொருவனை யுடைத்தாதல் செல்லாது எனப் புத்த நூலார் சொல்லுங் கடாவை யாசங்கித்துத் திதியென்னுஞ் சூத்திரக்கூற்றைக் கண்ணழித்துரைத்து மேற்கோடனுதலிற்று. இதன் பொருள் வெளிப்படை.
ஏது : இல்லதற்குத் தோற்றமின்மையின்.
என்பது ஏது என்னுதலிற்றோவெனின், உள்ளதாதல் யாங்ஙனம் என்னுங்கடாவை யாசங்கித்து மேற்கோளைச் சாதித்தனுதலிற்று. இதன் பொருள், இல்பொருளாகிய முயற்கோட்டிற்கு முக்காலத்து முற்பத்தியின்மையின் ஈண்டுற்பத்தி காணப்படுதலான் உலகமுள்ளது என மேற்கொண்டது என்றவாறு.
மேற்கோள் : இனி உலகஞ்செய்வோனையுடைத்து என்றது.
என்பது மேற்கொள் என்னுதலிற்றோவெனின், உள்பொருளெனப்பட்ட பிரபஞ்சம் தத்தமுதற்காரணத்தினின்றுந் தானே தோன்றியழியும் இதற்கொரு நிமித்தகாரணமாய் ஒருகருத்தா வேண்டாம் எனச் சாங்கியர்கூறுங் கடாவை யாசங்கித்துத் தோற்றியவென்னுஞ் சூத்திரக்கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற்கோடனுதலிற்று. இதன் பொருள் வெளிப்படை.
(சுப்பிரமணிய தேசிகர் உரை : இனி உலகம் மேல் உள் பொருளெனச் சாதிக்கப்பட்ட பிரபஞ்சம்; செய்வோனை உடைத்து என்றது தொழிற்படுத்தும் நிமித்த காரணனாகிய முதற்கடவுளை யுடைத்து என்றவாறு.)
ஏது : உள்ளதற்குச் செய்வோரின்றிச் செய்வினையின்மையின்
என்பது ஏது என்னுதலிற்றோவெனின், அதற்குப் பிரமாணமென்னை என்னுங் கடாவை யாசங்கித்து மேற்கோளைச் சாதித்தனுதலிற்று. இதன் பொருள், மண்முதலியவற்றினுள்ளதாகிய கடமுதலிய பொருட்குக் குயவன் முதலிய செய்வோரையின்றி வனைதல் முதலிய செய்தொழில் நிகழாமையின், உலகம் இவ்வியல்பிற்றாகலான் இனியிவ்வுலகஞ் செய்வோனை யுடைத்து என மேற்கொண்டது என்றவாறு.
பண் :
பாடல் எண் : 4
நோக்காது நோக்கி நொடித்தன்றே காலத்தில்
தாக்காது நின்றுளத்திற் கண்டிறைவன் - ஆக்காதே
கண்ட நனவுணர்விற் கண்ட கனவுணரக்
கண்டவனில் இற்றின்றாங் கட்டு.
பொழிப்புரை :
என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், மேலையுதாரணத்திற் கூறியவாற்றான் உலகிற்கு முதற்கடவுள் உண்டெனக் கொள்ளினும் அவன் படைப்பு முதலியன தொழில் செய்வானாயின் விகாரமெய்தி அதனின் பந்த முறுவானென்னுமவர் மதம்பற்றி நிகழுங்கடாவை யாசங்கித்து ஏதுவை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள். இறைவன் என்பது முதல்வன் ; காலத்தில் தாக்காது நின்று என்பது இறப்பு நிகழ்வு எதிர்வு முதலியனவாய் வேறுபட்டு எல்லாத்தொழிலுஞ் செய்துந் தனக்கு விகாரமின்றி நிற்குங்காலம்போல விகாரப்படாது நின்று, ஆக்காதே கண்டு என்பது பிரபஞ்சத்தைக் கரணத்தாற் படையாது சங்கற்பமாத்திரத்தானே படைத்து, நோக்காது நோக்கி நொடித்து என்பது அவ்வாறே காவாது காத்து அழியா தழித்தலால், இன்று ஆம் கட்டு என்பது இவ்வமலனுக்குப் பந்த மின்றாதல் ; உளத்தின் கண்டநனவு உணர்வில் கண்ட கனவு உணரக்கண்டவனில் இற்று என்பது கற்றநூற் சொல்லும்பொருளும் உள்ளத்திற் றோன்றுங்கால் உள்ளம் அவற்றிற் றொடக்குண்ணாத வாறுபோலும் கனவின்கட் கண்டவற்றைப் புறத்து விடயங்களையறிந்து வந்த நனவுணர்வின்கண்ணே விளங்கவறிந்தவன் அப்பொழுது அவற்றிற் றொடக்குண்ணாதவாறு போலுமித்தன்மைத்து என்றவாறு.
எனவே, இஃதிவ்வாறாகவென்றெண்ணுதலாகிய சங்கற்ப மாத்திரையாற் செய்வதூஉம், கரணத்தாற் செய்வதூஉமென வினைமுதல் இருவகைப்படு மென்பதூஉம், கரணத்தானன்றிச் செய்யமாட்டாத குயவன் முதலியோர் சங்கற்பமாத்திரையாற் செய்யுமுதல்வனுக்கு வினைமுதலாதற் பொதுமைபற்றி ஒருபுடையுவமையாதலன்றி முற்றுவமையாதல் செல்லாமையானும் சங்கற்ப மாத்திரையாற் செய்யுஞ் செய்திக்குக் கட்டுண்டன் முதலிய குற்றங்கள் பகைப்பொருளாகலானும் அவை ஆண்டுளவாதற்கோரியை பின்றென்பதூஉம் கூறி, ஏதுவை வலியுறுத்தவாறு காண்க.
ஆக்குதல் படைத்தல் ; காண்டலும் அது. நோக்குதல் காத்தல். நொடித்தல் அழித்தல் ; அது சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு இறுதிப் பதிகம் \"நொடித்தான்மலை” என்பதனானு மறிக. ஆக்காது நோக்காது என்றமையால் நொடியாதென்பது வருவித்துரைக்கப்பட்டது. நொடித்தலானென்பது நொடித்தெனத் திரிந்தது. அன்றே அசை ; அநாதியே யெனினுமமையும். இல் மூன்றும் உவமவுருபுகள். உளத்தினென்பதற்குச் சங்கற்பத்தா லென்றுரைப்பினுமமையும். இன்றாங்கட்டு என்பது திருக்குறள் - 210 \"அருங்கேடன்” என்பதுபோல நின்றது.
குறிப்புரை :
என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், உலகந் தனக்கு முதற்காரணமாகிய மாயையினொடுங்குவதன்றி நிமித்தகாரணன் ஒருவனுண்டெனக் கொள்ளினும் அவன்மாட்டொடுங்குமென்றல் பொருந்தாமையின், யாது யாண்டொடுங்கும் அஃததனிலுற்பத்தியாம் என்னும் அவிநாபாவத்தான் மாயையினொடுங்கிய உலகத்தை மாயையே தோற்றுவிக்கும், இதற்கோரிறைவன் வேண்டா எனச் சாங்கிய நூலார் மதம்பற்றி நிகழுங்கடாவை யாசங்கித்து உள்ளதற்குச் செய்வோரின்றிச் செய்வினையின்மையின் என்னும் ஏதுவை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள் மண்போல் குளிர்ந்து வித்து உண்டா மூலம் முளைத்தவா தாரகம் ஆம் அத்தன் தாள் நிற்றல் அவர் வினையால் வித்தகம் ஆம் என்பது மாயையும் உலகமும் வித்தும் அங்குரமும் போலுமாகலின் வித்துக்கு ஆதாரமாகிய நிலங்குளிர்ந்தவழி அதன்கண் வித்துள்ளதாக அதனினின்றும் அங்குரந் தோன்றியவாறுபோல மேலை வெண்பாவின் இலயித்தது என்றதனாற் பெறப்பட்ட மாயை தனக்காதாரமாய் நின்று தோற்றுவிக்கும் இறைவனது சத்தியின்கணுள்ளதாய் நிற்றலால் அச்சத்தி சங்கற்பித்தவழி அவரவர் வினைக்கீடாக அவ்வக்காரியங்களை அவ்வவ்வியல்பிற் பிறழாமற்பயக்குஞ் சதுர்ப்பாடுடைத்தாம், அல்லுழி உடைத்தன்று; நிலங்குளிர்ந்தவழி அதன்கட் கிடந்தன்றி வித்து முளையைத் தோற்றாதவாறு போலும். ஆகலான் மாயையினொடுங்கித் தோன்றிய உலகம் அதற்காதாரமாய் நின்ற இறைவன் சத்தியினொடுங்கித் தோன்றியதேயாம் என்றவாறு.
ஆகலானென்பது முதல் குறிப்பெச்சம். இது கிழங்கினின்றுந் தோன்றிய தாமரையைப் பங்கயமென்பதனானுமறிக. வழி நூலாசிரியர் \"உயிரவை யொடுங்கிப் பின்னு முதிப்பதெ னரன்பால்” எனப்படும், \"உலகவ னுருவிற்றோன்றி யொடுங்கிடும்” எனப்படும் ஓதியதூஉம், உலகவனுருவிற்றோன்றி யொடுங்குமாறு வாதுளாகமத்தில் வகுத்தோதியதூஉம் இவ்வியல்பு நோக்கியென்க. இஃதறியாதார் இன்னேரன்னவற்றைத் தத்தமக்கு வேண்டியவாறேயுரைப்ப.
உவமவினை பொருளினும் பொருளடை உவமையினுஞ் சென்றியையும். உண்டாகவெனச் சற்காரியத்தை வலியுறுத்துதல், வித்தில்வழி நிலத்தினின்றும் அங்குரந் தோன்றாதவாறுபோல மாயையில்வழிப் பிரமத்தினின்றும் உலகந் தோன்றாதெனப் பரிணாம வாதிகளையும், மாயை அநிர்வசனமென்னும் மாயாவாதிகளையும், வித்துநிலனும் போலென்றதனான் மாயை முதல்வனின் வேறு பொருளன்றென்னுஞ் சிவாத்துவிதசைவர் பாஞ்சராத்திரிகளையும் மறுத்தவாறாயிற்று. முதல்வன் பலவேறுவகைப்படச் சங்கற்பித்த வாறென்னை என்னுங் கடாவை யாசங்கித்து, அவர்வினையா லென்றார். வித்தகம் விசித்திரமென் றுரைப்பினுமமையும்.
அற்றேல், தன்வயத்தானன்றி வினைவயத்தாற் றோற்றுவிப்பான் இறைவனாகானெனின்,
வேட்டுவன் ஆம் அப்புழுப்போல் வேண்டு உருவைத் தான் கொடுத்துக் கூட்டானே என்பது வேட்டுவனாதலை விரும்பும் புழுவிற்கு வேட்டுவன் விரும்பிய வடிவினைக் கொடுக்குமாறுபோல இறைவனும் அவரவர் வேண்டுமுருவினைக்கொடுத்து அவ்வினைக்குத்தக்க பயன்களையுங் கூட்டுவனாகலான் அதுகொண்டு சுதந்திரத்திற் கிழுக்கென்னை என்றவாறு.
ஆகலான் அதுகொண்டு சுதந்திரத்திற் கிழுக்கென்னையென்பது குறிப்பெச்சம். போல் அசை. குளிர்ந்தவழியென்பது குளிர்ந்தெனத் திரிந்துநின்றது. நிற்றலினென்னும் ஐந்தாவது விகாரத்தாற்றொக்கது. ஏகாரம் எதிர்மறை.
பண் :
பாடல் எண் : 5
ஒன்றலா வொன்றால் உளதாகி நின்றவா
றொன்றலா வொன்றிலவை யீறாதல் - ஒன்றலா
ஈறே முதலதனின் ஈறலா வொன்றுபல
வாறே தொழும்பாகும் அங்கு.
பொழிப்புரை :
என்பது உதாரணம் என்னுதலிற்றோவெனின், அங்ஙனமாயினும் சுட்டுணர்வாகிய பிரபஞ்சம் பலவாயினாற்போலச் சுட்டுணர்வின்றி நின்ற சங்காரமும் பலவுளவெனக் கோடும் ஒன்றே யென்றற்குப் பிரமாண மென்னை யென்னுங் கடாவை யாசங்கித்து ஏதுவை வலியுறுத்துதனுதலிற்று. இதன் பொருள். அவை என்பது சேதனப்பிரபஞ்சத்தொகுதி ; ஒன்று அலா ஒன்றால் என்பது உருவும் அருவுமென்னும் அவ்விரு கூற்றுப் பிரபஞ்சத்துள் ஒன்றல்லாத ஒப்பற்ற பரம்பொருளாலே; உளது ஆகி நின்றவாறு என்பது சிருட்டிப்பட்டுத் திதிப்பட்டவாறே ; ஒன்று அலா ஒன்றில் ஈறாதல் என்பது அந்தப் பரம் பொருளின்கண்ணே சங்காரப்படுதலால் ; ஒன்று அலா ஈறே முதல் என்பது அச்சங்காரக்கடவுளொருவனே உலகிற்கு முதற்கடவுள்; அற்றேல், இவ்வாறு முத்தொழிற்படுஞ் சேதனப்பிரபஞ்சம் வீடு பெற்றவழிச் சுட்டுணர்வின்றிச் சிவசமமாமென வேதத்தும் ஆகமத்தும் ஓதுதலின் அவ்வழி அவையும் முதற்கடவுளாமென்றற்கு இழுக்கென்னை யெனின்; அதனின் ஈறு அலா ஒன்று என்பது அப்பரம்பொருள்போல் அழிவின்றி நித்தமாய சேதனப் பிரபஞ்சம் ; அங்கு எது வீடுபேற்றின் கண்ணும் ; பலவாறே தொழும்பு ஆகும் என்பது பலவாற்றானும் பரம்பொருளுக்கு அடிமையாம் என்றவாறு.
இது சொற்பொருட் பின்வருநிலை. காரியப்பிரபஞ்சஞ் சடமாகாலானும், சேதனப்பிரபஞ்சம் அவிச்சையாற் கட்டுற்றுச் சுட்டுணர்விற்றாய் நிற்றலானும், இவற்றைத் தொழிற்படுத்தற்கு இவற்றின் வேறாய் ஒருமுதற்கடவு ளுண்டென்பது பெற்றாம். பெறவே, பிரபஞ்சம் விசித்திரகாரியமாய்க் காணப்படுதலின் இவ்வாறு நடாத்தும் முதற்கடவுள் முற்றுணர்வும் அளவிலாற்றலும் பேரருளுஞ் சுதந்திரமும் முதலிய நிரதிசய குணங்களுடையனென்பதூஉம் பெறப்பட்டது ; படவே, இத்தன்மையனாகிய முதற்கடவுளொருவனே அமையுமாகலின் வேறுமத்தன்மைய ருண்டெனக் கொள்ளின் மிகையென்னுங் குற்றமாம்; அல்லதூஉம், இலக்கணத்துள் ஒருவாற்றானும் வேற்றுமை யில்வழி இலக்கியம் பலவாதல் செல்லா தென்னுங் கருத்தால், ஒன்றலாவொன்று என வரையறுத்தோதினார். ஈறே முதலென்றது முடிந்தது முடித்தல். ஈறு ஆகுபெயர். இறந்ததுதழீஇய எச்சவும்மை விகாரத்தாற்றொக்கது.
பலவாறாவன, இருணீங்கிய வழியுங் கண்ணுக்குக் காட்சி ஞாயிற்றை யின்றியமையாதவாறுபோல, மலநீங்கிய முத்திநிலையினும் ஆன்மாவுக்கு அறிவு வியஞ்சகமாய் உடனின்றறிவிக்கு முதல்வனை யின்றியமையாதவாறும், கண் படிகம் ஆகாயம்போலச் சார்ந்ததன்வண்ணமாயன்றி முதல்வன்போலத் தனித்து நிற்குமியல்பில்லாதவாறும், முதல்வன்போல் ஐந்தொழிற்கும் வினைமுதலாமுரிமையின்றிச் சிவாநுபவமொன்றினுக்கே யுரித்தாயவாறும், சமவியாபக மாயினும் முதல்வனைநோக்கத் தூலவறிவாகலான் விளக்கொளியுட் கண்ணொளிபோல முதல்வனின் வியாப்பியமாயன்றி நில்லாதவாறும் முதலாயின. அற்றேல், முத்திநிலையின் ஆன்மாச் சிவமாமென்னுஞ் சுருதிக்குப் பொருளென்னையெனின்; அஃது உண்மையதிகாரத்துட் பெறப்படும். இதனானே சிவசமவாதி சங்கிராந்தவாதி, உற்பத்திவாதி, ஆவேசவாதி மதங்களும் மறுக்கப்பட்டன.
பதியுண்மைக்குப் பிரமாணங் கூறுவார் மலத்துளதாம் எனப் புனருற்பத்திக் கேதுக் கூறுமுகத்தான் மலத்துண்மைக்குப் பிரமாணமும் உடன்கூறினார். அதனை ஈண்டு வேறோரதிகரணமாக வைத்துரையாராயினார்; அதிகரணத்திற்குரிய ஐயப்பாடு முதலியனவெல்லாஞ் சகசமலத் துணராதென அதனிலக்கணங் கூறும்வழிப் பெறப்படுதலால், ஈண்டு மிகைபடவேறோதல் வேண்டாமையின்.
இச்சூத்திரத் ததிகரணங்களாற்போந்த தொகைப்பொருளாவது: \"தோற்றக்கேடுகளதுண்மை காட்சி முதலிய அளவைகளான் அறியவாராமையிற் பிரபஞ்சம் நித்தப்பொருளேயாம். அன்றித்தோன்றியழியுமெனக் கொள்ளினும், இல்பொருள் தத்தஞ் சார்பிற்றோன்றி நின்றழிதல் இயற்கையென அமையும்; செயற்கையென்றற்கு ஓரேதுவின்மையின். மற்றுள்பொருளாயின், அதுவேயமையும் இறைவன் வேண்டா; இரண்டுள்பொருள் கோடல் மிடிகையாகலின்; வேண்டுமாயினும், மாயோன் முதலிய கடவுளரில் ஒருவனேயமையும், அவரையொழித்துச் சங்காரகருத்தா முதற் கடவுளென்றதற்குப் பிரமாணமென்னை? பிரமாணமுண்டாயினும், அதிவிசித்திரமாய பிரபஞ்சம் ஒருவனாற்செய்தல் கூடாமையின், மற்றும் அவ்வியல்பினராய முதற்கடவுளர் உளராதல்வேண்டும்” என உலோகாயதர் மீமாஞ்சகர், புத்தர், சமணர், சாங்கியர், பாஞ்சராத்திரிகள், அநேகேசுரவாதிகள் மதம்பற்றிப் பூருவபக்க நிகழ்ந்தவழி அவரை மறுத்துச் சித்தாந்தஞ்செய்து முதற்கடவுள துண்மை பொதுவகையானுஞ் சிறப்புவகையானுங் கருதலளவையின் வைத்துணர்த்தியவாறென உணர்க. இவ்வாறு சூத்திரந்தோறும் உணர்ந் துரைத்துக்கொள்க.
குறிப்புரை :
மேற்கோள் : இனிச் சங்காரமே முதலென்றது.
என்பது மேற்கோள் என்னுதலிற்றோவெனின், \'ஒடுங்கின சங்காரத்தினல்லது உற்பத்தியில்லை’ எனவே சங்காரகருத்தா உலகிற்கு முதற்கடவு ளென்பது போந்ததாயினும் தேர்முதலாயின பலர்கூடிச் செய்யக் காண்டலின் அவற்றினும் அதிவிசித்திரமான உலகத்திற்கு மற்று மத்தன்மையராய முதற்கடவுளர் உண்டெனக்கோடும் என்னும் அநேகேசுரவாதிகள் முதலியோர் மதம்பற்றி நிகழுங்கடாவை யாசங்கித்து \'அந்தமாதி’ என்னுஞ் சூத்திரக்கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற்கோடனுதலிற்று. இதன் பொருள். சங்காரகருத்தா ஒருவனே உலகிற்கு முதற்கடவுளென்றது என்றவாறு.
சங்காரம் ஆகுபெயர். ஏனையோர் முதல்வராகாரெனப் பிரித்தமையின் ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது.
ஏது : சுட்டுணர்வாகிய பிரபஞ்சஞ் சுட்டுணர்வின்றி நின்ற சங்காரத்தின்வழி யல்லது சுதந்திரமின்றி நிற்றலான்.
என்பது ஏது என்னுதலிற்றோவெனின், அதற்குப் பிரமாணமென்னை யென்னுங் கடாவை யாசங்கித்து மேற்கோளைச் சாதித்தனுதலிற்று. இதன் பொருள். ஒன்றொன்றாய்ச் சுட்டியறிவதாகிய உருவும் அருவுமென்றிருவேறு வகைப்பட்ட பிரபஞ்சம் அவ்வாறு சுட்டியறிதலின்றி எவ்வுலகும் ஒன்றாயறிந்து நின்ற சங்காரகருத்தாவின்வழிப் பரதந்திரமாய் நிற்பதல்லது தனக்கெனச் சுதந்திரமுடைத்தாய் நிற்பதன்றாகலாற் சங்காரகாரணனொருவனே உலகிற்கு முதற்கடவுளன்றி ஏனையோர் முதற்கடவுளரல்லரென மேற்கொண்டது என்றவாறு. பிரபஞ்சத்திற்குச் சுதந்திரமின்மையுஞ் சங்காரகாரணனுக்குச் சுதந்திரமுண்மையும் ஏதுமுகத்தாற் காட்டுவார் சுட்டுணர்வாகிய பிரபஞ்சமெனவும் சுட்டுணர்வின்றிநின்ற சங்காரமெனவும் ஈரிடத்தும் உடம்பொடுபுணர்த்தோதினார். சுட்டுணர்வுடையதனைச் சுட்டுணர் வென்றது உபசாரம்.
ஈண்டுப் பிரபஞ்சமென்றது சேதனப் பிரபஞ்சத்தை; பிரிநிலை யேகாரத்தான் விலக்குதற்குரியது அதுவேயாகலின்.
தேர்முதலாயின பலராற் செய்யப்படினும் அப்பலரும் ஒருவனேவல்வழி நின்றே செய்பவாகலானும், வேதத்துட் காரண வாக்கியங்களிற் சுட்டுணர்வினராகிய நாராயணன், இரணியகருப்பன், இந்திரன், அங்கி, சூரியன் முதலியோரைக் காரணமென்றது குயவன் போல் அவாந்தர காரணமாதல்பற்றியேயாகலின் அவையெல்லாம் ஆகுபெயராற் சங்காரகாரணனாகிய முதற்கடவுளையே யுணர்த்தி நிற்குமாகலானும், செய்துஞ் செய்வித்தும் எல்லாத் தொழிற்கும் வினைமுதலாய் நிற்கும் முதற்கடவுள் சங்காரகருத்தா வொருவனே யென்பது கருத்து.