ஆறாம் தந்திரம் - 5.தவம்


பண் :

பாடல் எண் : 1

ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்
நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே.

பொழிப்புரை :

உலகப் பொருள்கள் மேற்பரந்து செல்லுதலை யொழிந்து இறைவனது திருவடிக்கீழே சென்று ஒடுங்கி நிலைப்பெற்ற உயர்ந்தோரதுஉள்ளங்கள் யாதொன்றற்கும் அஞ்சுதல் இல்லை ; அவர்கள்பால் கூற்றுவன் செல்லுதலும் இல்லை; எல்லாப் பற்றுக்களை யும் முற்றும் விடுத்த அவர்கட்கு வரக்கடவொரு துன்பமும் இல்லை; இரவு பகல் முதலிய கால வேறுபாடுகள் இல்லை; உலகத்தில் விளைவ தொரு பயனும் இல்லை.

குறிப்புரை :

`உலகப் பற்றினின்றும் மீட்ட உள்ளத்தைப் பின் இறைவன் திருவடிக்கீழே ஒடுங்கி நிலைநிற்கச் செய்யும் முயற்சியே தவம்` என்பதனை, ``பற்றுவிட்டார்க்கு`` எனவும், ``ஒடுங்கி நிலை பெற்றஉள்ளம்`` எனவும் உடம்பொடு புணர்த்து, உணர்த்தினார். இதனானே மேலையதிகாரத்தோடு இதற்கு உளதாய இயைபு இனிது விளங்கும். உள்ளத்தைப் பற்றுக்களினின்றும் மீட்டு இறைவன் திருவடிக்கீழே ஒடுங்கி நிற்கச்செய்யும் முயற்சி, தோன்றி நிகழும் காலத்தே `தவம்` எனவும், இனிது முற்றிய காலத்தே `ஞானம்` எனவும் நிற்கும். தவநிலையையே சிவநூல்கள், `சரியை, கிரியை, யோகம்` என மூன்றாகவும், `சிவ தன்மம், சிவ யோகம்` என ஓராற்றல் இரண்டாக வும் பகுத்துக்கூறுதல் வெளிப்படை. அவற்றின் இயல்பையெல்லாம் நாயனார் முன்னைத்தந்திரத்தில் இனிது விளங்க அருளிச் செய்தார். இங்கு அவை சிவகுருவைத் தலைப்பட வேண்டினார்க்கு இன்றி யமையாச் சிறப்பின் ஆதலையே குறிக்கின்றார்.
``நடுங்குவது`` என்பது தொழிற்பெயராய் நின்றது. ``இராப் பகல்`` என்றது உபலக்கணம். `நடுக்கமும், நமனும் இல்லாமை ஒடுங்கி நிலைபெற்றமையால்` என்பதும், `இடும்பை முதலியன இல்லாமை பற்று விட்டமையால்` என்பதும் குறிப்பால் தோன்ற வைத்தவாறு உணர்க.
இவற்றை, ``சுண்ணவெண் சந்தனச் சாந்தும் ... ...
... ... உடையார் ஒருவர் தமர்நாம்;
அஞ்சுவ தியாதொன்று மில்லை;
அஞ்ச வருவதும் இல்லை`` 3
``வானந் துளங்கிலென் மண்கம்ப மாகிலென்
மால்வரையும்
தானந் துளங்கித் தலைதடு மாறிலென்
தண்கடலும்
மீனம் படிலென் இருசுடர் வீழிலென்
வேலைநஞ்சுண்
டூனமொன் றில்லா ஒருவனுக் காட்பட்ட
உத்தமர்க்கே`` l
``நாமர்க்குங் குடியல்லோம்; நமனை யஞ்சோம்``8 என்றாற் போலும் அனுபவமொழிகளான் அறிக. இம்மந்திரத்தின் ஈற்றடி.
`படும்பழி பாவம் பயமில்லை தானே` எனவும், `கடும்பசி யில்லை கற்றுணர்ந்தார்க்கே` எனவும் பாடம் வேறு வேறாகவும் ஓதப் படுகின்றது.
இதனால், `தவமாவது இது` என்பதும் அதன் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

எம்மா ருயிரும் இருநிலத் தோற்றமும்
செம்மா தவத்துச் செயலின் பெருமையும்
அம்மான் திருவருள் பெற்றவ ரேயல்லால்
இம்மா தவத்தின் இயல்பறி யாரே.

பொழிப்புரை :

நமது அரிய உயிருணர்வும், அவ்வுணர்விற்கு இன்றியமையாததாய் உள்ள உலகம் உண்டாகி நிற்பதும், அங்ஙனம் நிற்குங்கால் அதன்கண் நிகழற்பாலதாய செவ்விய பெரிய தவச் செய லின் சிறப்பும் ஆகிய யாவும் இறைவன் திருவருளை அடிநிலையாகக் கொண்டனவேயாம். அதனால், `இத்தவத்தன் இயல்பு இது` என்பதை யும் அவ்வருளைப் பெற்றவரல்லது பிறர் அறிய மாட்டார்.

குறிப்புரை :

``உயிர்`` என்றது அதன் உணர்வையேயாதல் அறிக. ``தோற்றம்`` என்றது, அதனபின்னதாகிய நிலையையும் உணர நின்றது. செவ்விய பெரிய தவமாவது வீடுபயக்கும் தவம். அஃது இறைவனை வழிபடுதலேயாம். `உண்மைத் தவமாவது இறை வழி பாடே என்பதை உணர்தலும் திருவருளின்றியாகாது` என்பது உணர்த்துகின்றவர், அதற்கு ஏதுவாக அனைத்தும் திருவருளை திருவருளை முதலாகக் கொண்டமையை முன்னர் உணர்த்தினார். திருவருளை முதலாகக் கொண்டவற்றை ஒற்றுமை பற்றி, ``திருவருள்`` என்றே கூறினார். `அது பெற்றவரே யல்லால்` என வேறு தொடராக்கி யுரைக்க. திருவருள் பெறாதவர் பிறவற்றையே `தவம்` என மயங்கி அல்லலுறுதலை நினைக.
இதனால், உண்மைத் தவம் உணர்தற்கரிதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

பிறப்பறி யார்பல பிச்சைச்செய் மாந்தர்
சிறப்பொடு வேண்டிய செல்வம் பெறுவர்
மறப்பில ராகியே மாதவம் செய்வார்
பிறப்பினை நீக்கும் பெருமைபெற் றாரே.

பொழிப்புரை :

உலகப் பித்துப் பலவற்றையும் கொண்டு உழலு கின்ற மக்கள் பிறவித் துன்பத்தைச் சிறிதும் எண்ணுதல் இல்லை; (அதனால் அவர் அதனை நீககிக் கொள்ள முயல்வதும் இல்லை) வீடு பேற்றோடு தாம் விரும்பும் இம்மை மறுமைச் செல்வங்களையும் பெறுவார். இறைவனை ஒருஞான்றும் மறவாது பெரிய தவச்செயலைச் செய்பவரே யாதலின், அவரே பிறவித் துன்பத்தை நீக்கிக்கொள்ளும் பெருமையைப் பெற்றாருமாவர்.

குறிப்புரை :

இரண்டிடத்தும், ``பிறப்பு`` என்பது அதனால், விளையும் துன்பத்தைக் குறித்தது. `பித்து` என்பது `பிச்சு` எனப் போலி யாயிற்று. சிறப்பு - வீடு. மறத்தற்குச் செயப்படுபொருள் வருவிக்கப் பட்டது. `மாதவமாவது இது` என்பது மேலே சொல்லப்பட்டது.
இதனால், `தவம் எல்லாப் பயனையும் தரும்` என்பதும், அதனை யொழிதல் மயக்கத்தினால் என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

இருந்து வருந்தி எழிற்றவம் செய்யும்
பெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றே
இருந்திந் திரனே எவரே எனினும்
திருந்தும்தம் சிந்தை சிவனவன் பாலே.

பொழிப்புரை :

பொறி புலன்களை அடக்கியிருந்து, உண்டி சுருக்கல் முதலியவற்றால் மெய்வருந்தி உயர்ந்த தவத்தைச் செய்து நிற்கும் பெரி யோரை மனம் கலங்கச் செய்வதற்கென்றே தமது இருப்பை வைத்து, இந்திரனேயாக, ஏனை எத்தேவரேயாக எதிர் வரினும் அப் பெரி யோர்க்கு அவர்தம் உள்ளம் சிவனிடத்தே அசையாது அழுந்தி நிற்கும்.

குறிப்புரை :

`அத்தகையோர்க்கே தவம் முற்றுவது` என்றவாறு.
``தவமும் தவமுடையார்க் காகும்; அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது``*
எனத் திருவள்ளுவரும் கூறினாராகலின், இப் பெருந்தன்மை யாளர், முற்பிறப்பில் தவம்செய்து பயின்றவர் என்க. தவத்தில் நின்றோர் பலரை இந்திரன், மாயோன் முதலியோர் மயக்கத்துட்படுத்து அவரது தவங்களை நிலைகுலையச் செய்தமை புராண இதிகாசங்களுட் கேட்கப் படுதலை உட்கொண்டு இவ்வாறு கூறினாராயினும், `தவத்தை இடையறு விப்பது உண்மையில் அவரது முன்னை வினையே` என்பதும், `அத் தன்மையாவனவினை, பல பிறப்புக்களில் முதிர்ந்து வரும் தவத்தின்முன் தன் வலிமைகெட்டொழியும்` என்பதுமே கருத்தென்க.
இதனால், தவம் பல பிறவிகளில் தொடர்ந்து நிகழ்ந்தே முற்றுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

கரந்துங் கரந்திலன் கண்ணுக்குந் தோன்றான்
பரந்த சடையன் பசும்பொன் னிறத்தன்
அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே.

பொழிப்புரை :

அறிவரால் சிறிதும் தாழ்த்தலின்றி மிகவிரைந்து சார்ந்து தொழப்படுவோனாகியசிவன், கண்ணுக்கும் புலனாகாது மறைந்திருப்போனாயினும் சிலருக்கு வெளிநிற் பவனாகின்றான். அச்சிலராவார் அரிய தவத்தவரே யாகலான், அவருக்கல்லது அவன் அணுகலாகாதவனாம்.

குறிப்புரை :

`ஆகவே, அத்தவத்தையே ஒருதலையாகச் செய்க` என்பது குறிப்பெச்சம் இரண்டாம் அடி முதலாகத் தொடங்கி, அதன் பின் ஈற்றடியைக் கூட்டி, அதன்பின் முதலடியை, ``கண்ணுக்கும்`` என்னும் உம்மை சிறப்பு பலனைச் சென்று பற்றுதல் கண்ணுக்குள்ள சிறப்பாம்.
இதனால், தவமே இறைவனைக் காட்டுவதாதல் கூறப் பட்டது.
இதன்பின் பதிப்புக்களில் உள்ள, ``பின்னெய்த வைத்தோர்`` என்னும் மந்திரம் மேல், சிவ குரு தரிசன அதிகாரத்தில் வந்தது.

பண் :

பாடல் எண் : 6

அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசும்
பகைத்தெழும் பூசலுட் பட்டார் நடுவே
அமைத்ததோர் ஞானமும் ஆத்தமும் நோக்கி
இமைத்தழி யாதிருந் தார்தவத் தாரே.

பொழிப்புரை :

உலகில் நுண்ணறிவுமிக்க அமைச்சராய் விளங்கி னோரும், போரில் வலிமிக்கு விளங்கிய யானைகளது கூட்டமும், ஆணையால் உயர்ந்து அரசராய்ப் பொலிந்தோரும் பிறர்மேல் பகைத்துச் சென்ற போரில் இறந்தாராய் ஒழிய, அவர்கள் நடுவிலே, தவத்தவராயினார், சிவன் உயிர்கட்குப் பொருந்த வைத்துச் சொல்லிய ஒப்பற்ற உண்மை ஞானத்தையும், அதனால் அடையப்படும் வீடு பேறாகிய உறுதிப்பொருளையுமே பொருளாக நோக்கி, கண் இமைத்தலும், அழிதலும், இல்லாத அமரராய் விளங்கினார்.

குறிப்புரை :

திணை விராய் எண்ணிய வழி, ``பட்டார்``, என உயர் திணையான் முடிந்தது. `பட்டாராக அவர் நடுவே என ஒரு தொடர் படுத்துக. `தவம் ஒழிந்த பிற யாவும் அழிதலுடையனவே` என்பது முன்னிரண்டடிகளில் விளக்கப்பட்டது. இரண்டாமடி உயிரெதுகை.
இதனால், தவம் நிலைபேற்றைத் தருவதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

சாத்திரம் ஓதும் சதுர்களை விட்டுநீர்
மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின்
பார்த்தஅப் பார்வை பசுமரத் தாணிபோல்
ஆர்த்த பிறவி அகலவிட் டோடுமே.

பொழிப்புரை :

`நூல்களை ஓதுவதே பெருமை` எனக் கருதும் கருத்தை விடுத்து, நீவிர் ஒரு மாத்திரை காலமாயினும் அறிவை அக முகப்படுத்தி அறிவினுள் நிற்கும் அறிவை நோக்குங்கள்; அந்நோக்கம் பச்சை மரத்தில் அறையப்பட்ட ஆணி அதனுள் நன்கு பதிந்தாற்போல நும் அறிவுனுள்ளே நன்கு பதிய தொன்று தொட்டு உடம்பைப் பிணித்து வருகின்ற பிறப்புச் சேயதாக உம்மை விட்டு ஓடிவிடும்.

குறிப்புரை :

``சதுர்`` என்றது, ஓதுவாரது கருத்தினைக் கொண்டு கூறியது. கல்விக்குப் பயன் ஒழுக்கமேயாதலின், அஃது இல்லாத கல்வியை விடுக என்றார். மறித்தல் - வெளிச்செல்லுதலைத் தடுத்தல். உள் - அறிவினுள். நோக்குதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப் பட்டது `போல்வதாக` எனப்பொருள்தரும் `போல` என்னும் செய வெனெச்சத்து அகரம் தொகுத்தல் பெற்றது இவ்வாறு உரையாது, `அகலவிட்டோட்டுமே` எனப்பாடம் ஓதிக்கொள்ளலுமாம். `தொன்று தொட்டு விடாது வரும் பிறவிக்குக் காரணம் அறிவைப் பண்டே பற்றியுள்ள இருள்மலமாகலின், அஃது அப்பார்வையால் அகலப் பிறவியும் அகலும்` என்றவாறு.
இதனால், தவம் மலத்தை நீக்குதல் வாயிலாகப் பிறவியை அறுத்தல் கூறப்பட்டது.
சிற்பி