
தலைவாயில் ஆராய்ச்சியுரை தொடர்ச்சி... | 1 | 2 | 3 | 5 அடிக்குறிப்புகள் பார்க்க...
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தராக இருந்த, திரு ஔவை நடராசன் அவர்கள், எம்.லிட்.விருது பெற, திருக்கோவையாரை ஆய்விற்கு எடுத்துக்கொண்டு, ஆங்கிலத்தில் "திருக்கோவையார் ஆய்வுகள்" என்ற நூலை உருவாக்கினர்35. சென்னைப் பல்கலைக்கழகம் அவர் ஆய்வுகளை ஏற்றது. 1964இல் இவர் சமைத்த நூல் இன்னமும் அச்சேறவில்லை. சற்றேறக் குறைய 350 பக்கங்கள் கொண்ட இவ்வாய்வுச் சுவடி, 1964க்குப் பிறகு வெளிவந்திருக்கும் தகவல்களோடு பதிப்பிக்கப்பட வேண்டும். திருக்கோவையாரின் சிறப்புக்களை வகுத்தும் தொகுத்தும் நூலாசிரியர் நன்கு காட்டியுள்ளார். திருக்கோவையார் பற்றி முற்றுமாக ஆங்கிலத்தில் முதன்முதலில் வரையப்பட்டது இந்நூல். உலகத் தமிழ் மாநாடுகள் பல நடந்துள்ளன. என்றாலும், எந்த ஒரு மாநாட்டிலும் திருக்கோவையார் பற்றி ஆங்கிலத்தில் ஒரு கட்டுரைகூடப் படிக்கப்படவில்லை. ஔவை நடராசன் அவர்கள் வரைந்த நூலும் குடத்திலிட்ட விளக்காகவே இருந்து வருகிறது.
1965இல் தெ.பொ.மீனாட்சிசுந்தரன் அவர்கள் வரைந்த தமிழ் இலக்கியத்தின் ஒரு சரித்திரம் என்ற ஆங்கில நூல் வெளி வந்தது36. திருக்கோவையார் பற்றி இந்நூலில் சில செய்திகள் கூறப்பட்டிருக் கின்றன. இந்நூலாசிரியர் திருக்கோவையார் காட்டும் தலைவி கடவுள் என்றும், தலைவன் ஆன்மா என்றும் கூறியிருக்கிறார்37.
1974இல் கமில் சுவலபில் வரைந்த தமிழ் இலக்கியம் என்ற ஆங்கில நூல் வெளிவந்தது38. தமிழ் இலக்கியத்தை மேனாட்டர் உணர்தற்கு மிகவும் பாடுபட்டார் சுவலபில் அவர்கள். கோவைகளுக்கெல்லாம் ஒரு முன்மாதிரி திருக்கோவையார் என்று இவர் கூறுகிறார்39.
விஸ்வ பாரதியின் தொன்மை இந்தியச் சரித்திரம் பண்பாட்டுத் துறையைச் சார்ந்த முனைவர் ப்ரடுபாநந்த ஜாஷ் அவர்கள், சைவத்தின் சரித்திரம் என்ற நூலின் ஆசிரியர். இவ்வாங்கில நூல் 1974இல் வெளிவந்தது40. இஃதோர் அருமையான நூல். கோளகி மடம் பற்றிய பல செய்திகளை இந்நூலில் காணலாம். நீலகண்ட சாஸ்திரியார் கருத்தை ஏற்று, கி.பி. 862 முதல் 880 வரை ஆண்ட இரண்டாம் வரகுண பாண்டியன் காலத்தவர் மணிவாசகர் என்று இவர் கூறுகிறார். தம் நூலில் திருவாசகம் பற்றியும் திருக்கோவையார் பற்றியும் இவர் குறிப்புக்கள் தருகிறார்41.
கோ.வன்மிக நாதன் அவர்கள் சாகித்ய அகாடெமிக்காக வரைந்த `மாணிக்கவாசகர்' என்ற ஆங்கில நூல் 1976இல் வெளிவந்தது42. புறத் தூண்டுதல் இன்றித் தன் இயல்பாகவே பொழிந்த பாடல்களே திருவாசகமும், திருக்கோவையாரும் ஆக உருக் கொண்டன என்றும், இவ்விரு நூல்களும் இடைச் செருகல் ஏதுமின்றி, பழுதுபடாமல் நமக்குக் கிடைத்துள்ளன என்றும், திருவாசகப் பாடல்கள் பற்பல இடங்களில் பற்பல காலங்களில் பாடப்பட்டன என்றும், ஆனால் திருக்கோவையார் ஒரே இடத்தில் ஒரே காலத்தில் பாடப்பட்டது என்றும் கூறுகிறார்43.
1987இல் அநுபூதிப் பாடல்கள் என்ற ஓர் ஆங்கில நூல், நார்மன் கட்லர் அவர்களால் இயற்றப்பட்டு வெளிவந்தது44. கட்லர் அவர்கள் தமிழ் அறிந்தவர். திருக்கோவையார் பாடல்கள் இருபத்தொன்பது இவரால் ஆங்கிலவாக்கம் பெற்றன. அப்பாடல் எண்களாவன: 1, 2, 3, 6, 8, 11, 20, 23, 70, 71, 75, 102, 109, 115, 120, 144, 166, 178, 248, 250, 287, 289, 292, 304, 315, 324, 335, 341, 34345.
திருக்கோவையார் பற்றி ஆங்கிலத்தில் கட்டுரைகள் வரைந்தவர் பென்னம்பெரிய சித்தாந்தப் புலவரான கிருஷ்ண சிவராமன் அவர்களே46. பொன்னே போல் போற்றிப் பயிலப்படவேண்டிய கட்டுரைகள் இவை.
ஒருவாறு வரையறுக்கப்பட்ட வேதாந்த மரபிற்குப் புறத்தே நின்றும், அதே சமயத்தில் வேதாந்தத்தின் அந்தரங்கமான, சாரமான கோட்பாடுகளைத் தன்னகத்தே கொண்டதுமான சிவஞான போதம் உருப்பெறக் கோவைப் பாடல்கள் முக்கிய காரணமாக இருந்தன என்றும் இவ்வாசிரியர் ஒரு முடிவை அறிவிக்கின்றார்47. மேலும் அவர் கூறுவதாவது: `பெயர் அறிவிக்கப்படாத் தலைவன், தலைவியர்; இலக்கண மரபிற்கு முற்றும் ஒத்துவரும் அமைப்பு; உண்மையான, மிகவும் நெருக்கமான காதல்; இப்படிச் சமைக்கப்பட்ட இந்நூலின் பாடல்கள் உலகளாவிய காதல் பேரிலக்கியப் பாடல்கள்'48.
திருக்கோவையார் பாடல் அனைத்தையும் முதன் முதலில் ஆங்கிலத்தில் பெயர்த்த பெருமை இறையருளால் எனக்குக் கிட்டியிருக்கிறது. என் மொழி பெயர்ப்பு 1989இல் தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது49. திருக்கோவையாரை மேனாட்டர் உணர்ந்து ஓதுவதற்காகவே இந்நூல் வெளியிடப்பட்டது. 42 பக்க அளவில் அமைந்த விரிவான அறிமுகக் கட்டுரை, கற்க விழைவோருக்கு உரிய விளக்கங்கள் வழங்கியிருக்கிறது. ஒவ்வொரு பாடலுக்கும் குறிப்புரை உண்டு, பல நூல்களிலிருந்து தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒப்புமைப் பகுதிகள் மேற்கோள்களாகக் காட்டப்பட்டிருக்கின்றன. மில்டன், ஷேக்ஸ்பியர், வில்லியம் கூபர், ராபர்ட் பிரௌனிங், வேர்ட்ஸ்வொர்த், எமர்சன், உமார்கய்யாம், ரூமி, கலீல் ஜிப்ரான், ஹம் போல்ட், வர்ஜில் ஆகியோர் நூற்பகுதிகள் ஒப்புமைக்காக உரிய இடங்களில் தரப்பட்டிருக்கின்றன. சீனப் புலவர்களான போ சூய், வாங்சங், லிய், லி-போ ஆகியோரின் நூல்களிலிருந்தும் மேற்கோள்கள் காட்டப்பட்டிருக்கின்றன. பால்இயல் உள தத்துவ நிபுணரான ஹாவ்லாக் எல்லீஸ் நூல்களிலிருந்தும் பொருத்தமான பகுதிகள் இம்மொழிபெயர்ப்பில் எடுத்தாளப்பட்டிருக்கின்றன. எடின்பரோ பல்கலைக்கழகப் பேராசிரியரும் தமிழ் அறிஞருமான ஆர்.ஈ.ஆஷர் அவர்கள் இம் மொழிபெயர்ப்பிற்கு அணிந்துரை வழங்கியிருக்கிறார். முறுகிய தெய்வக் காதல் பற்றிய நூலே திருக்கோவையார் என்பதை என்னால் இயன்றவரை நான் விளக்கியிருக்கிறேன்50.
சமயங்களில் ஒற்றுமை என்ற ஆங்கில நூலின் ஆசிரியர் தாமஸ் மன்னினேழர் என்பவர். இந்த நூல் 1993இல் வெளிவந்தது51. தாயுமானவர் அருளிய வேதாந்த சித்தாந்த (மோன) சமரசத்தை விளக்கவே இந்நூல் எழுந்தது. இஃதோர் அற்புதமான படைப்பு. "நான் இவளாம் பகுதிப் பொற் பாரறிவார்?" என்ற திருக்கோவையார் வாசகம், காதல் மொழியை அத்துவித மொழியோடு புணர்த்திக் காட்டும் என்று இந்நூல் ஆசிரியர் காட்டுகிறார்52.
"மிஸ்டிசிஸம் ஆஃப் லவ் இன் சைவா திருமுறைஸ்" என்ற ஆங்கில நூலின்53 ஆசிரியர் முனைவர் வி. சி. சசிவல்லி அவர்கள். சற்றே விரிவாக திருக்கோவையார் பற்றிய செய்திகளை இந்நூலில் காணலாம்54.
அவரவர் தகுதி, அறிவு, அநுபூதிகளுக்கு ஏற்பக் காட்சிதரும் பனுவல் உலகில் ஒன்று உண்டு என்றால் அது திப்பிய கிரந்தமாம் திருக்கோவையாரே, இப்படி இதன் பெருமையை அறிவிக்கும் பழைய பாடல் பின்வருமாறு.
ஆரணங்
காணென்ப ரந்தணர் யோகிய ராகமத்தின்காரணங்
காணென்பர் காமுகர் காமநன் னூலதென்பர்ஏரணங்
காணென்ப ரெண்ண ரெழுத்தென்ப ரின்புலவோர்சீரணங்
காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே.-
ஆன்றோர் வாக்குஎண்ணிறைந்த
தில்லை யெழிற்கோ புரந்திகழக்கண்ணிறைந்து
நின்றருளும் கற்பகமே - நண்ணியசீர்த்தேனூறு
செஞ்சொற் றிருக்கோவை யென்கின்றநானூறு
மென்மனத்தே நல்கு.61ஆராய்ச்சியுரை தொடர்ச்சி... | 1 | 2 | 3 | 5 அடிக்குறிப்புகள் பார்க்க...