தலைவாயில்                      ஆராய்ச்சியுரை தொடர்ச்சி... | 12 | 345 அடிக்குறிப்புகள் பார்க்க...

கா.நமசிவாய முதலியார் அவர்கள் திருவாசகம், திருக்கோவையார் ஆகிய இரு நூல்களையும் ஒரு புத்தகமாக, 1927இல் சென்னையில் வெளியிட்டார்.

1939-இல் (பிரமாதி ஆண்டு, மார்கழி மாதம்) சைவ சித்தாந்த மகாசமாஜம், சோமசுந்தரம் செட்டியார் வரைந்த அரும்பொருள் விளக்க உரையோடு திருவாசகம், திருக்கோவையார், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆகிய நூல்களை ஒரு புத்தகமாக வெளியிட்டது. தனிப்பிரதி விலை ஒரு ரூபாய் இரண்டணா என்றும், 8 பிரதிகள் விலை ஏழு ரூபாய் நாலணா என்றும் இதில் குறிக்கப்பட்டிருக்கின்றன.

இதே ஆண்டு திருக்கோவையார், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆகிய மூன்று நூல்களும் ஒரு புத்தகமாக சோமசுந்தரம் செட்டியார் வரைந்த அரும்பொருள் விளக்க உரையோடு வெளிவந்தது. தனிப்பிரதி விலை ஒன்பது அணா, 10 பிரதிகள் விலை ரூபாய் நான்கும், அணாக்கள் பத்துமாம்.

பேராசிரியர் உரை தவிர வேறு சில உரைகளும் திருக்கோவையாருக்கு ஏற்பட்டிருந்தன; எனினும் 1951ஆம் ஆண்டு வரை வேறு ஓர் உரை வெளிவரவே இல்லை. இச்சூழ்நிலையில் தஞ்சை மகாராஜா ஷ்ரீ சரபோஜி சரசுவதி மகால் நூல் நிலையத்தில் வேறு ஓர் உரை அடங்கிய சுவடியின் இருப்பு உணரப்பட்டது. இந்நூல் நிலையத்தார் அதனை அச்சிட முன் வந்தனர். பதிப்பாசிரியர் பணியை ரா.விசுவநாத ஐயர் மேற் கொண்டார். இவ்வுரையில், பேராசிரியர் உரையில் காணப்பட்ட விளக்கமோ, இலக்கண முடிபோ இல்லை. எனினும், போற்றத்தக்க நயங்கள் பல இதில் அமைந்திருக்கின்றன. பேராசிரியர் காட்டிய பாடபேதங்கள் சிலவற்றை இவ்வுரை கொண்டிருந்தது. வடமொழிக் கலப்பும், இதில் சற்றே கூடுதலாகக் காணப்பட்டது. இவ்வுரையைச் செப்பம் செய்து நல்ல தமிழில் பேராசிரியர் தம் உரையை அமைத்திருக்கலாம் என்று ஒரு தோற்றம் எழுந்தது. ஆகவே, காலத்தால் பேராசிரியர் உரைக்கும் முற்பட்டது இவ்வுரை என்று கருதப்பட்டது. இவ்வுரை பல இடங்களில் பதவுரையாகவும், சில இடங்களில் பொழிப்புரையாகவும் வரையப்பட்டிருந்தது. தஞ்சைச் சுவடியில் 281ஆவது பாடலுக்குப் பின் முன்வந்த உரை அழிந்துபட்டிருந்த படியால், எஞ்சிய பகுதிக்கான உரை பேராசிரியர் உரையைத் தழுவிய பொழிப்பையே கொண்டிருந்தது.

இச்சூழலில், தற்செயலாய் .வே.சா. நூல் நிலையத்தில், விடுபட்ட பகுதிகளுக்குள்ள ஒரு சுவடி கண்டுபிடிக்கப்பட்டது. இச்சுவடியின் உதவியால், பழைய உரையை ஒருவாறு பதிப்பிக்க (பழைய உரையுடன்) என்ற தலைப்பில் 1951இல் இந்நூல் சரசுவதி மஹால் நூல் நிலையத்தாரால் வெளியிடப்பட்டது. இந்நூலுக்கு 11 பக்க அளவில் ஓர் ஆங்கில முன்னுரை உண்டு, இதில் கிளவிக் கொத்துக்கான ஆங்கில விளக்கம் தரப்பட்டிருக்கிறது. இந்நூலின் அடிக்குறிப்புக்களில் தரப்பட்டிருக்கும் செய்திகள் மிகவும் பயனுள்ளவை.

1952இல் திருக்கோவையாரைப் பேராசிரியர் உரையோடு திருப்பனந்தாள் ஷ்ரீகாசிமடம் வெளியிட்டது. 1960இல் ஷ்ரீகாசிமடம் திருக்கோவையாரைப் பேராசிரியர் உரையோடும், பழைய உரையோடும் வெளிக் கொணர்ந்தது. இது மீளவும் 1972இல் ஒரு பதிப்புப் பெற்றது. மூல நூலை மட்டும் 1991இல் காசிமடம் பதிப்பித்தது. இதில் "மூன்றாம் பதிப்பு" என்று ஒரு குறிப்புக் காணப்படுகிறது.

1965இல் திருக்கோவையார் உண்மை விளக்கம் என்ற நூல் திருவாவடுதுறை ஆதீன வெளியீடாகத் தமிழ் உலகிற்கு வழங்கப்பட்டது. பேரின்பக் கிளவிகளுக்கான விளக்கம் இந்நூலில் தரப்பட்டிருக்கிறது. இந்நூலின் உரையாசிரியர் .தண்டபாணி தேசிகர் அவர்கள். காழித் தாண்டவராயர் கருத்தை நன்கு விளக்கும் வகையில் அமைந்த நூலிது. தேசிகர் அவர்கள், "திருவாசகம், மணிவாசகர் தாம் பெண்மையினின்று பேசிய பேச்சுக்கள், அநுபவ நிலையிலே நுகர்வான் உயிராகிய தானும், நுகரப்படுகின்ற பொருளாகிய சிவமும் பேரின்பமாக இருக்கும் பெற்றியைத் திருவுளத்து எண்ணிஉயிராகிய தான் ஆணாகச் சிவன் பெண்ணாகச் சிந்திக்க வைக்கின்ற அநுபவத் திருநூல் திருக்கோவையார்" என்று நாட்டுகிறார்.

1966இல் எட்டாந்திருமுறை முழுவதும் ஒரு புத்தமாகத் தருமையாதீனத்தால் வெளியிடப்பட்டது. நூல்களுக்குக் குறிப்புரை வரைந்தவர் சி.அருணைவடிவேல் முதலியார் அவர்கள். இவர் பெரும்பாலும் பேராசிரியர் உரையையும், சிறுபான்மை பழைய உரையையும் தழுவியே குறிப்புரை வரைந்துள்ளார். அங்கங்கும் சைவ சித்தாந்தக் கருத்துக்களைக் காட்டியபடியே இவ்வுரை செல்லுகிறது. திருக்கோவையாருக்கான கொளுக்கள் கோவையாரின் உரைகளுக்கு முற்பட்ட காலத்தில் தோன்றியவை என்பதே முதலியார் அவர்களின் கருத்தாகும். திருக்கோவையாரின் கிளவிகளுக்கு அமைந்த நூற்பாக்கள் பழைய உரையாசிரியர் உரையுள் காணப்படவில்லை. ஆகவே, அவை பேராசிரியர் உரையுள் முதற் பாட்டுரைக்கண் காணப்படும் உரைப்பாயிர நூற்பாப் போலப் பேராசிரியராலே செய்யப்பட்டன என்று கருதுகிறார் முதலியார். மேலும் அவர் கொளுக்களில் பல இடங்களில் முன்னைய இரண்டு உரைகளிலும் பெரிதும் வேறுபட்ட பாடங்கள் காணப்படுகின்றன என்றும் கூறுகிறார்.

சென்னை வர்த்தமானன் பதிப்பகத்தினர், "மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருக்கோவையார்" என்ற நூலை 1995இல் வெளியிட்டனர், இதன் உரையாசிரியர் எம். நாராயண வேலுப்பிள்ளை என்பவராவார். இவர் ஓர் ஓய்வு பெற்ற தமிழாசிரியர். இந்நூலின் இரண்டாம் பதிப்பு 1998இல் வெளிவந்தது.

மணிவாசகர் திருப்பெருந்துறையில் சிவபோதம் உற்றார். சுவாமிகளே "திருவார் பெருந்துறைச் செல்வனாகிக், கருவார் சோதியிற் கரந்த கள்ளமும்" என்று கீர்த்தித் திருவகவலிலும், "உருகு தலைச்சென்ற வுள்ளத்து மம்பலத் தும்மொளியே பெருகுதலைச் சென்று நின்றோன் பெருந்துறை" என்று திருக்கோவையார் பாடல் 104இலும் அருளியிருக்கிறார். ஆகவே, அடிகள் வரலாற்றோடு திருப்பெருந்துறை பிரிக்க முடியாதபடி அத்துவிதப்பட்டிருப்பதை அருளாளர்கள் நன்கு உணர்வர். இவ்வூர் பற்றியும், இதன் வரலாறு பற்றியும், தெரிவிக்கும் புராணங்கள் வடமொழியில், ஷ்ரீ ஆதீனகலாச மஹாத்மியம், பிருஹத் தீர்த்த மஹாத்மியம், அஷ்டாத்தியாயி என மூன்று உள்ளன என்பர்6.

மேலும், இத்தலத்திற்குத் தமிழில் மூன்று புராணங்களும், திருப்பெருந்துறை யமகவந்தாதி, சிவயோக நாயகி பிள்ளைத்தமிழ் என இரண்டு பிரபந்தங்களும் உள்ளன. அம்மூன்று புராணங்களில் ஒன்று, ஷ்ரீ முன்வேலப்ப தேசிகருடைய சீடராகிய ஷ்ரீ சாஸ்திரம் சாமிநாத முனிவரால் இயற்றப்பட்டது. அதன் பெயர் திருப்பெருந்துறைப் புராணம் என்பதாம். இப் புராணத்தின் பாயிரம் வாயிலாக இரண்டு செய்திகள் கிடைக்கின்றன. (1) இப்புராணம் தஞ்சை மன்னர் துளஜேந்திரர் விருப்பப்படி இயற்றப்பட்டது. (2) இப் புராணத்தை இயற்றுவதற்கு முன் சாமிநாத முனிவர் திருப் பெருந்துறைக் கலம்பகம் என்று ஒரு நூலை இயற்றியுள்ளார். "இக்கலம்பகம் இப்பொழுது கிடைக்கவில்லை" என்று தமிழ்த்தாத்தா கூறுகிறார்7.

இரண்டாவது புராணம், திருவாவடுதுறை ஆதீனத்தில் 12ஆம் பட்டத்தில் எழுந்தருளியிருந்த ஷ்ரீலஷ்ரீ திருச்சிற்றம்பலத் தேசிகருடைய சீடராகிய ஷ்ரீ சுந்தரலிங்க முனிவரால் இயற்றப்பட்டது. இதன் பெயர் ஆதி கைலாய மான்மியம் என்பதாம்.

மூன்றாவது புராணமும், திருப்பெருந்துறைப் புராணம் என்ற மகுடமே பெற்றிருந்தது. 850 பாடல்கள் கொண்ட நூலிது, "இது செய்யப்பட்ட காலம் சகாப்தம் கருரு0 என்பது மட்டும் இதன் பாயிரத்தால் தெரிகின்றதேயன்றி, வேறொன்றும் தெரிந்திலது" என்று தமிழ்த் தாத்தா அறிவிக்கின்றார்8.

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை இயற்றிய திருப்பெருந்துறைப் புராணம் தமிழ்த்தாத்தாவால் 1892இல் அச்சுருவம் பெற்றது.

புராணங்களிலும், மான்மியங்களிலும் திருக்கோவையார் பற்றிக் கூறப்பட்டிருப்பவை மேலெழுந்த வாரியாகவே உள்ளன. சிவபெருமான் வேதியர் உருக்கொண்டு வந்து கோவையாரைத் தாமே தம் கைப்பட எழுதினார். என்ற ஒரு செய்தி மட்டுமே பிள்ளை அவர்களால் கூறப்பட்டிருக்கிறது.

இயம்பிய வனைத்து மைய ரேயினி தெழுதிக் கொண்டே

நயம்படு கோவை யொன்று நவின்றிட வேண்டு மென்ன

வயம்படு மவரு முள்ள மகிழ்ந்தனர் பாடப் பாடச்

சயம்படு மறையோர் தாமும் வரைந்தனர் சலித்த லின்றி9.

திருவாதவூரர் புராணம் அருளியவர் கடவுள் மாமுனி என்னும் பெரியோர். இப்புராண மூலத்தை அருஞ்சொற்பொருள் அகராதியுடன் திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1923இல் வெளியிட்டது. இப்பதிப்பு மிக அழகுடைத்து. இப்புராணம்கூடத் திருக்கோவையார் பற்றி ஏதும் விரிவாகக் கூறவில்லை. அம்பலவாணரே திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் எழுதி அருளினார் என்ற செய்தி ஒன்றே முனிவராலும் கூறப்பட்டிருக்கிறது.

திருச்சதக முதலாச் சிறந்ததமி ழறுநூறும்

விரித்தவகப் பொருட்கோவை விளங்கவொரு நானூறும்

உரைத்தனன்பின் முடிந்தவிடத் துயர்வாத வூரன்மொழி

தரித்தெழுது மம்பலவ னெழுத்தென்று சாற்றினான்10.

ஷ்ரீ மாணிக்கவாசக வெண்பா என்ற நூலை யாத்தவர் மு.கோவிந்தசாமி ஐயர் ஆவார். இந்நூலிலும் கோவையார் பற்றி ஒரே ஒரு பாடல்தான் உண்டு.

கூறும் துறையமைந்த கோவையொன்று செப்புமென

ஊறுஞ் சுவையொழுக வோர்கோவை - யாறணியுஞ்

சிற்றம் பலத்தாடும் தேவ ருளமகிழச்

சொற்றனரன் பூறத் தொடுத்து11.

தை.. கனகசபாபதி முதலியார் என்பவர் திரு.வி. கலியாணசுந்தர முதலியார் அவர்களால் "மும்மொழிப் புலவர்; நாவலர்; பாவலர்; ஓவியர்" என்று பாராட்டப் பெற்றவர். திருக்கோவையார் இயல்பு என்ற நூலின் ஆசிரியர் இவர். இந்நூல் சென்னை, பழனியாண்டிப் பிள்ளை கம்பெனி என்ற நிறுவனத்தால் அச்சிடப்பட்டது. அச்சுப்பதிப்பு 1936இல் நடந்தேறியது. இந்நூலுக்கு, அந்நாளில் நவசக்தி பத்திரிகையின் ஆசிரியராகச் செயல்பட்ட திரு.வி. கலியாணசுந்தர முதலியார் ஓர் அணிந்துரை அளித்திருக்கிறார்.

நூலாசிரியர் தம்முகவுரையில் கூறிய உண்மைகள் பின்வருமாறு: "மணிவாசகர் பாடிய திருக்கோவையார் சங்க நூற்களுள் ஒன்று அன்று, எனினும், அவற்றோடு ஒன்றாக வைத்து எண்ணும் பெருமை இதற்கே உண்டு. இந்நூலின் உயர்வை உணர்தற்குச் சங்கநூற் பயிற்சி பெரிதும் வேண்டும். செய்யுள் நூற்களில் பெரும் பயிற்சியுடையோர்க்கே திருக்கோவைச் செய்யுட்களின் இனிய எளிய தண்ணிய நடையின் செம்மை நனி விளங்கும்."

நம்பியாண்டார் நம்பிகள், பேராசிரியர், குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் போற்றி உள்ள திருக்கோவையாரை ஒரு பசுநூல் என்று கொள்ளுதல் முறையன்று. என்றாலும் இப்பனுவலைக் குறைத்துப் பேசுவோர் இருக்கவே செய்கின்றனர். 1992இல் எட்டாம் திருமுறை என்ற நூல் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. 108 பக்க அளவில் திருவாசகம் பற்றியும், 11 .5 பக்க அளவில் திருக்கோவையார் பற்றியும் செய்திகள் கூறப்பட்டுள்ளன. "திருக்கோவையாருக்குத் தனிச்சிறப்புத் தர வேண்டும் என்பதற்காகப் பாடல்களுக்குத் தத்துவப் பொருள்களை வலிந்து காட்டுவாரும் உளர்" என்று ஆசிரியர் கூறியிருப்பது சைவர்களைப் புண்படுத்தும்.

திருக்கோவையார் இயல்பு என்னும் நூலுக்கு அணிந்துரை வழங்கிய திரு.வி. கூறுவதாவது:

"அக இன்பம் மனமாசை அகற்றும்; இயற்கைக் கூறுபாடுகளில் அறிவைச் செலுத்தும்; அக்கூறுபாடுகளில் இறை கலந்திருப்பதைப் புலப்படுத்தும். இவ்வாறு உயிர்க்கு விடுதலை நல்கும். இப்பெற்றி வாய்ந்த அகஅன்பு, திருக்கோவையாரில் ததும்பி வழிகிறது.

"திருக்கோவையார் வாழ்வுக்குரிய இயற்கை நூல்; இன்ப அன்புக்குரிய அகநூல்; வீடு பேற்றிற்குரிய ஞான நூல். அஃதொரு தமிழ்க் கோயில்; இன்ப அன்புத் தெய்வத் திருக்கோயில். அதனுள் இயற்கை - இறையின் கோலங்கள், பாட்டோவியங்களாக வரையப் பட்டிருக்கின்றன. இவ்வோவியங்களை அழியா முறையில் வரைந்தமைத்துத் திருக்கோவையாரென்னும் தமிழ்க்கோயிலை நமக்களித்த மாணிக்கவாசகனார்க்கு நாம் எத்தகைக் கைம்மாறு செலுத்த வல்லேம்! உரிய கைம்மாறும் உலகில் உண்டோ? அத்திருக் கோயிலை முறைப்படி வழிபட்டு விடுதலை பெற முயல்வதே அவர்க்கு நாம் செலுத்தும் கைம்மாறாகும்."

மகா வித்துவான் ஷ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் மாணாக்கராகிய வித்துவான் தியாகராசச் செட்டியார், திருக் கோவையார் நானூறு பாடல்களையும் மனப்பாடம் செய்து வைத்திருந்தார். சீவக சிந்தாமணியைத் தமிழ்த் தாத்தா ஆய்வு செய்து வந்த காலத்தில் தமக்கு விளங்காத மேற்கோள்களைத் தனியே குறித்து வைத்திருந்தார். ஒரு சமயம் செட்டியார் அவர்களிடம், அவை பற்றி அவர் வினவிய போது, "விளங்காத மேற்கோள்களில் திருக் கோவையாரிலுள்ள சிலவற்றை அவர் ஞாபகத்திலிருந்து சொன்னார்" (என் சரித்திரம் (1997) பக்கம் 562இல் காண்க.) "தேவார திருவாசங்களிலும் இவருக்கு (செட்டியாருக்கு) விருப்பம் மிகுதி. திருக்கோவையார் முற்றும் இவர் ஞாபகத்தில் இருந்தது" என்று .வே.சா. அவர்கள் செட்டியாரைப் போற்றுகிறார். (வித்துவான் தியாகராசச் செட்டியார் (1992) பக்கம் 103 காண்க.)

ஆத்திசூடிக்கு அகலவுரை கண்ட ஒரத்தூர் கோ. வைத்தியலிங்கம் பிள்ளை அவர்கள், விரும்புவோர்க்குத் திருக்கோவையாரைப் பாடஞ் சொல்லுதலைத் தம் கடமையாகக் கொண்டிருந்தார்.

சுந்தரம் பிள்ளை என்ற ஐயாற்று அன்பர், திருக்கோவையார் என்று சொன்னாலே சிலிர்த்துப் போவார். அவர் திருக் கோவையாரைப் `பாக்களின் சக்கரவர்த்தி' என்று கூறிப் போற்றி வந்தார்.

பலர்புகழ் திருக்கோவையாரை நிறுத்துப் பார்த்து அதன் மதிப்பை அறுதியிட்டுச் சொல்ல நம்போலியரிடம் தராசும் இல்லை; படிக் கற்களும் இல்லை. அறிவால் எட்டமுடியாததை அநுபூதி ஒன்றே இறையருளால் எட்டும். திருக்கோவையாரைத் தாழ்ந்து பணிந்து வணங்கிப் போற்றுதல் சைவரின் கடமை.

பட்டுக்கோட்டை வக்கீல் வி. வெங்கடேச்வர ஐயர் என்பார் "ஆவுடையார் கோவிலென வழங்கும் திருப்பெருந்துறை விளக்கம்" என்ற நூலின் ஆசிரியர். இந்நூலிலும் "திருவாசகம் திருக் கோவையார் இவைகள் இவர் (மாணிக்கவாசகர்) பாடியவே" என்ற ஒரே குறிப்பு மட்டும் உள்ளது12.

திருப்பெருந்துறை என்னும் ஆளுடையார் கோயில் ஸ்தல புராண வசனம்13 என்ற நூலை மதராஸ் ரிப்பன் பிரஸ் 1942இல் அச்சில் கொணர்ந்தது. வடமொழியிலிருந்து இந்நூல் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. இதன் ஆசிரியர் கி.சுந்தர சாஸ்திரிகள் என்பவர். இந்நூலிலும் திருக்கோவையாரை, "வாதவூரர் சொல்லச் சுவாமி தம் திருக்கரத்தால் எழுதினார்" என்றே உள்ளது. ஆவுடையார் கோயிலை இவர் ஆளுடையார் கோயில் என்றே கூறுகிறார். சிவபெருமானை ஆளுடை வள்ளல் என்று இவர் வருணிக்கிறார். வடமொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட இந்நூல்மூலம் நாம் அறியக் கூடிய செய்தி இதுவே. மணிவாசகரைப் பற்றிய வடமொழி நூல்களிலும் திருக்கோவையார் பற்றிய செய்தி மிக அருகியே காணப்படும்.

கா. சுப்பிரமணிய பிள்ளையவர்கள் எழுதிய மணிவாசகப் பெருமான் என்ற நூலைக் கழகம் 1928இல் வெளியிட்டது. இதில் எட்டுப்பக்க அளவில் திருக்கோவையார் ஆராய்ச்சி என்ற தலைப்பில் வரையப்பட்டிருக்கும் கட்டுரையில் நல்ல தகவல்கள் கிடைக்கின்றன. மணிவாசகரைப் பற்றிய பட்டயம் ஒன்று மலையாளத்தில் உள்ளது. இதன் மூலத்தைத் தமிழ் எழுத்திலும், இதற்கான தமிழ் மொழி பெயர்ப்பையும் பிள்ளையவர்கள் தம் நூலில் தந்திருக்கிறார்14. இது சைவருக்கும், கிறித்துவர்க்கும் இடையே தோன்றிய வழக்குப் பற்றியது. இதில் சம்பந்தப்பட்ட மாணிக்கவாசகர் வேறு ஒருவர் என்று நிச்சயமாகக் கூறலாம்.

தலைவாயில்              ஆராய்ச்சியுரை தொடர்ச்சி... | 1 |   345 அடிக்குறிப்புகள் பார்க்க...